நிம்மதி
கம்ப்யூட்டர், இன்டர்நெட், இ-மெயில், செல்போன் அழைப்புகள்... வெறுத்துப் போனான் சேகர். களைப்பாகவும் சோர்வாகவும் உணர்ந்தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு வாரம் நிம்மதியாய் எங்காவது தங்கி தன்னைப் புத்துணர்வாக்கிக்கொள்ள விரும்பினான். உடனே அவன் நினைவுக்கு வந்தவன் அருண்தான். சேகரின் சித்தப்பா மகன். கிராமத்தில் விவசாயம் செய்கிறான். ‘ரொம்ப நாளாக அருண் வேறு கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வீட்டுக்குப் போனால் பார்த்த மாதிரியும் ஆச்சு... கிராமத்துக்குப் போய் புத்துணர்ச்சி பெற்ற மாதிரியும் ஆச்சு!’ ‘ஒரு வாரம்... செல்லைக்கூட எடுக்காமல் நிம்மதியாய், சந்தோஷமாய் இருக்கவேண்டும்’ என முடிவெடுத்து அருணின் வீட்டுக்குக் குடும்பத்தோடு கிளம்பினான். அருணுக்கு சேகரைப் பார்த்ததும் சந்தோஷம்.

‘‘வாடா... இப்பதான் வழி தெரிஞ்சுதா...’’ என்று குடும்பத்தோடு வாசலுக்கு வந்து வரவேற்றான். அருமையான சாப்பாடு. சாப்பாட்டுக்குப் பின் சேகரிடம் அருண் சொன்னான். ‘‘என் பையன் புதுசா லேப்டாப் வாங்கி இருக்கான். கம்ப்யூட்டர், நெட் எல்லாம் கத்துக்கணும்னு ஆசைப்படறான். நீதான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே... இங்க இருக்கற ஒரு வாரத்துல அவனை கம்ப்யூட்டர், இன்டர்நெட்ல தேத்தறது உன் பொறுப்பு. ஓகேவா..?’’ மயக்கம் வந்தது சேகருக்கு!
- கே.ஆனந்தன்
|