பொதுநலம் இல்லாத வழக்கு!



இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது உணர்ச்சிமயமாக தேசிய கீதம் பாடிய அமிதாப் பச்சன் எதிர்பார்த்திருக்க மாட்டார், தன் மீது வழக்கு போடுவார்கள் என்று! ‘52 நொடிகளில் பாடி முடிக்க வேண்டிய தேசிய கீதத்தை 82 நொடி நேரம் பாடி அமிதாப் அவமதித்துவிட்டார்’ என டெல்லி வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு போட்டிருக்கிறார். தினம் தினம் கோர்ட்களுக்கு வருகிற பொதுநல வழக்குகளின் சப்ஜெக்ட்டைப் பார்த்து சமயங்களில் நீதிபதிகளே திகைத்துப் போகிறார்கள். அந்த அளவுக்கு இதைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

அப்பீல் நீதிமன்றங்களாக இருந்த உயர் நீதிமன்றங்களையும் உச்ச நீதிமன்றத்தையும் மக்கள் மன்றங்களாக மாற்றிய பெருமை பொதுநல வழக்குகளுக்கு உண்டு. நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யரும் பகவதியும் இதில் பெரும் புரட்சி செய்தார்கள். கொத்தடிமைகள் மீட்பு, சிறைக் கைதிகளுக்கான உரிமைகள், பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு என பல மாற்றங்கள் பொது நல வழக்குகளால் நடந்தன. ஆனால் தனிப்பட்ட பழிவாங்கும் முயற்சியாகவும் விளம்பரத்துக்காகவும் பல வழக்குகள் இப்போது போடப்படுகின்றன.



மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு விநோத வழக்கு. ‘எல்லா நாடுகளும் தனித்தனியாக வைத்திருக்கும் ராணுவங்களை இணைத்து, ஐ.நா. சபை சார்பில் ஒரே ராணுவம் ஆக்க வேண்டும். உலகத்துக்கே ஒரே ராணுவம் என ஆகிவிட்டால், மூன்றாம் உலகப் போர் வராது. இதைச் செய்வதற்கு ஐ.நா சபைக்கு உரிய உத்தரவு போட வேண்டும்’ என எஸ்.கணேசன் என்பவர் வழக்கு போட்டார். இதைத் தள்ளுபடி செய்ததோடு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது நீதிமன்றம்.

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டம் சம்சாகி என்ற கிராமத்தைச் சேர்ந்த 53 பேர் இணைந்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டார்கள். மனுவைப் பார்த்த நீதிபதிகளுக்கு அதிர்ச்சி! ‘எங்கள் ஊரிலிருந்த ஒரே ஒயின்ஷாப்பையும் மூடிவிட்டார்கள். பக்கத்து ஊருக்குப் போய் குடிக்க வேண்டியிருக்கிறது. குடிகாரர்களின் நலன் கருதி மூடிய ஒயின்ஷாப்பை மீண்டும் திறக்க வேண்டும்’ என பொதுநல வழக்கு போட்டிருந்தார்கள் அவர்கள். ‘‘இதற்கெல்லாம் வழக்கு போடுவதா? ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிப்போம்’’ என கர்ஜித்த நீதிபதிகள், கடைசியில் மன்னித்துவிட்டார்கள்.

‘‘இந்தியாவை இனிமேல் ‘இந்தியா’ என அழைக்கக்கூடாது. ‘பாரத்’ என பெயர் மாற்ற வேண்டும். எல்லோரும் அப்படியே அழைக்க வேண்டும்’’ எனக் கேட்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிரஞ்சன் பட்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். உடனே மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இதே நபர், இதே வழக்கை கடந்த 2014ம் ஆண்டில் போட்டு, அப்போது உச்ச நீதிமன்றம் வழக்கை டிஸ்மிஸ் செய்தது. இதை லேட்டாக உணர்ந்து, இம்முறையும் தள்ளுபடி செய்துவிட்டார்கள்.

இப்போதெல்லாம் எந்த பெரிய படம் ரிலீஸுக்கு ரெடியானாலும், அதை எதிர்த்து வழக்கு போடுவது ஒரு பரபரப்பு விளம்பரம் ஆகிவிட்டது. கடந்த ஆண்டு ‘பாகுபலி’ ரிலீஸின்போது வேறுவிதமான வழக்கு வந்தது. ‘‘தியேட்டர்காரர்களும் தயாரிப்பாளர்களும் சேர்ந்துகொண்டு டிக்கெட் விலையை தாறுமாறாக ஏற்றிவிட்டார்கள். எப்போதும் விற்கிற விலையில் டிக்கெட்டை விற்க வேண்டும்’’ என பொதுநல வழக்கு போட்டார்கள். ‘பாகுபலி’யே தியேட்டரை விட்டுப் போன பிறகும் வழக்கு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.



‘‘சர்தார்ஜி ஜோக்குகள் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களைப் புண்படுத்துவதாக இருக்கின்றன. பத்திரிகைகள் மற்றும் இணையத்தில் சர்தார்ஜி ஜோக்குகளைத் தடை செய்ய வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றத்தில் ஹர்வீந்தர் சௌத்ரி என்ற பெண் வழக்கறிஞர் பொதுநல வழக்கு போட்டிருக்கிறார். கடந்த டிசம்பரில் போட்ட இந்த வழக்கை சீரியஸாக நடத்திக்கொண்டிருக்கிறது நீதிமன்றம்.

‘தன்னை பிரிட்டிஷ் குடிமகன் என அறிவித்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு போட்டார். ‘ஆதாரம் இல்லாத விஷயங்களைக் கோர்ட்டுக்கு எடுத்துவரக் கூடாது’ என இதைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

‘‘சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துவிட்டார்கள். இன்னும் அவர் விளம்பரங்களில் நடிப்பது, அந்த விருதுக்கு அவமானம். அதை அவரிடமிருந்து திரும்ப வாங்க வேண்டும்’’ என வி.கே.நஸ்வா என்பவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் போட்ட வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.