32 கிரகங்கள் தரும் யோகங்கள்
மிதுன லக்னத்துக்கு கூட்டு கிரகங்கள் தரும் யோகங்கள்
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
இதுவரை மிதுன லக்னத்தில் பிறந்தவர்களைப் பற்றியும், லக்னாதிபதியான புதன் தனித்து நின்று அவர்களுக்குத் தரும் யோகங்கள் பற்றியும், இரண்டிரண்டு கிரகங்களாக பன்னிரண்டு ராசிகளுக்குள்ளும் நிற்கும்போது கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பார்த்துக்கொண்டே வந்தோம். இப்போது இதில் மூன்று முதல் நான்கு கிரகங்கள் வரை சேர்ந்திருந்தால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் பார்ப்போம். கூட்டுக் கிரகங்களைப் பற்றி பிரஹத் சம்ஹிதை, குமார சுவாமியம், நந்தி வாக்கியம் போன்ற நூல்கள் விரிவாகப் பேசுகின்றன.
மிதுன லக்னத்தின் அதிபதியான புதன் ஒரு யூகக் கிரகமாகும். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள், மற்றவர்களின் கோணத்திற்கு மாறாக யோசிப்பார்கள். பலவீனங்களை வெளியில் காட்ட மாட்டார்கள். இவர்களின் வாழ்க்கையை மாற்றும் வல்லமை பெற்றவர்களாக புதன், சுக்கிரன், சனி போன்றோர் வருகின்றனர். சொந்த ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் சரிதான்... இவர்கள் மூவரும் சரியானபடி இருந்து விட்டால் எங்கேயோ உச்சத்திற்குச் செல்ல முடியும்.

முதலாவதாக புதன் வருகிறார். நான்காம் இடம் என்கிற சுக ஸ்தானாதிபதியாக புதன் வருகிறார். இவர்களின் சொந்த ஜாதகத்தில் புதன் கெடாமல் வலிமையாக இருந்தால் புத்திக் கூர்மை மிக்கவராக இருப்பார்கள். அசாத்தியமான நினைவுத் திறன் இருக்கும். எதற்கும் சோர்ந்து போகாமல் எந்தப் பணியையும் செய்வார்கள். சுக்கிரனோடு புதன் சேர்ந்திருந்தாலோ, அல்லது சுக்கிரனின் நட்சத்திரத்தில் புதன் அமர்ந்திருந்தாலோ, இவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தும் எளிதாகக் கிடைக்கும். மிக முக்கியமாக வீடு, வாசல், சொத்து, சுகத்தோடு நிம்மதியாக வாழ்வார்கள். இவர்களின் லக்னாதிபதியான புதன், சத்ரு ஸ்தானாதிபதியான செவ்வாயோடு சேர்ந்திருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் அல்லது செவ்வாயின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தாலும் போராட்டமான வாழ்க்கையை வாழ வேண்டி வரும். சனி பகவான் பாக்கியாதிபதியாக - அதாவது ஒன்பதாம் இடத்திற்குரியவராக வருகிறார். அதே சமயம் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். இதனால் அலைச்சலும் இருக்கும்; ஆதாயமும் இருக்கும். தாமதப்படுத்தினாலும் தரமானதைத் தருவார். இவர்களுக்கு எந்த தசை நடந்தாலும் சரிதான்... அதில் சனி புக்தியோ, அந்தரமோ வந்தால் பலன்களை அள்ளி வீசுவார். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதும், மெரைன் இன்ஜினியர், பயணங்கள் நிறைந்த பணியை செய்வதும் சனி கிரகத்தை வலுப்படுத்தும். ஆட்டிசம் பாதித்த குழந்தைக்கு உதவுவதும் நல்லது.
இவர்களுக்கு எப்படியாவது நல்லது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களில் சுக்கிரனும் ஒருவர். ‘சுகம் தர ஒரு சுக்கிரன் போதுமே’ என்பார்கள். குழந்தை பாக்கியத்தையும் இவரே அளிக்கிறார். திடீர் அதிர்ஷ்டத்தை இவரால்தான் கொடுக்க முடியும். சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் குருவோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ, அல்லது குருவின் பார்வை பெற்றிருந்தாலோ, சுக்கிரன் கொஞ்சம் தாமதித்து உதவுவார். யோகாதிபதிகளாக சுக்கிரன், சனி, புதன் என்று மூவரும் வருகிறார்கள். சுக்கிரனும் சனியும்தான் முடிந்தவரை உதவுகிறார்கள். சனி பகவான் பாக்கியாதிபதியாகவும், ஜீவனாதிபதியாகவும் வருகிறார். ஆனால், சுக்கிரன் அனுபவப் பாடங்களைத் தந்து நிறைய கற்றுக் கொடுப்பார்.

உலகளாவிய அளவில் மிதுன லக்னத்தில் பிறந்த பல்வேறு பிரபலங்கள் உள்ளனர். அவர்களில் முக்கியமான சிலரைக் காண்போம். முதலில் கணித மேதை ராமானுஜனின் ஜாதகத்தை கொஞ்சம் ஆராய்வோம். இவர் மிதுன லக்னத்தில் பிறந்தவர் ஆவார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குரிய சுக்கிரன் மிக வலிமையாக இவரின் ஜாதகத்தில் அமர்ந்திருக்கிறார். பஞ்சமகா யோகத்தில் தலைசிறந்த ‘பூர்வபுண்ணிய மாலிகா யோகம்’ இவருக்கு உண்டு. ஐந்துக்கு உரியவன் ஐந்திலேயே இருப்பதால் புதுமையான யோசனைகள், கண்டுபிடிப்புகள் என்று இவரின் வாழ்க்கை அமைந்தது. அதனால்தான் வேறு யாராலும் யோசிக்க முடியாத கணித சூத்திரங்களை இவரால் கண்டுபிடிக்க முடிந்தது. இதற்கு நடுவில் இவரின் வாக்கு ஸ்தானத்தில் - அதாவது லக்னத்தின் இரண்டாம் இடத்தில் சனியும் ராகுவும் இணைந்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் கற்ற கல்வியையும் தாண்டி இவரால் யோசிக்க முடிந்ததற்கு இதுவே காரணமாகும். இரண்டுக்குரிய சந்திரன் தசம கேந்திரம் பெற்று வலுவடைந்ததால் ஆசானுக்கும் ஆசானாக விளங்கினார். ஏழில் தனித்த சூரியன் இருந்து, ஏழுக்குரிய குரு ஆறில் மறைந்திருக்கிறது. மேலும், லக்னாதிபதியான புதனும் ஆறில் மறைந்ததால்தான் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை. மிதுன லக்னத்திற்கு ஆறுக்குரிய செவ்வாய் கொஞ்சம் அடங்கித்தான் போக வேண்டும். அப்போதுதான் காசு, பணம், சொத்து போன்ற சுகத்தை அனுபவிக்க முடியும். இவரின் ஜாதகத்தில் ஆறுக்குரிய செவ்வாய் சுகபோகங்களுக்குரிய நான்காம் இடத்தில் அமர்ந்ததால்தான் ஒரு சாமானியனின் சுகத்தைக் கூட அனுபவிக்க முடியாமல் போனது. உலகமே வியக்கும் அளவிற்கு அரிய உயரிய கண்டுபிடிப்புகளை வழங்கிய அளவிற்கு, அந்த கணித மேதை காசு பண்ணும் கணக்குச் சூத்திரத்தை மட்டும் அறிய முடியாமல் போனது. கணிதத்திற்கு உரிய கிரகமான புதனும், ஆசிரியருக்குரிய கிரகமான குருவும் சேர்ந்து காணப்படுவதால்தான் இன்றும் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இவரின் கணித கண்டுபிடிப்புகளுக்கு காரணம் தேடிக் கொண்டிருக்கின்றன.
இதேபோல இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ஜாம்ஷெட்ஜி டாடா அவர்களும் மிதுன லக்னத்தில் பிறந்தவராவார். மிதுன லக்னத்தின் பிரபல யோகாதிபதியான சனி ஆறாவது இடத்தில் அமர்ந்ததுடன், லக்னாதிபதி புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் அமர்ந்ததால்தான் பெரிய தொழிலதிபராக உருவெடுக்க முடிந்தது. சனி இரும்புக்குரிய கிரகமாக இருந்ததால்தான் சிறந்து விளங்கினார். சுக்கிரன் உச்சம் பெற்று பத்தாம் வீட்டில் அமர்ந்ததால்தான் லட்சக்கணக்கானவருக்கு வேலை கொடுத்தார். லக்னாதிபதியான புதன் ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்ததால்தான் இளகிய மனதும் தர்ம குணமும் இவரிடம் இருந்தது. மிதுன லக்னத்திற்கு தொல்லை தரக்கூடிய கிரகமான செவ்வாய் வக்ரமாகி கேதுவோடு சேர்ந்து கிரக யுத்த அவஸ்தை பெற்று வலுவிழந்ததால்தான் இவரின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கக்கூடிய நான்கு கிரகங்களான சந்திரன், செவ்வாய், கேது, குரு கூட்டினாலேயும், இதை உச்சம் பெற்ற சுக்கிரன் பார்வையிடுவதாலும்தான் தொழிலதிபராக பரிமளிக்க முடிந்தது.
உலகையே அண்ணாந்து பார்க்க வைத்த இயற்பியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் அவர்களும் மிதுன லக்னத்தில் பிறந்தவராவார். மிதுன லக்னத்தின் யோக கிரகங்களான சுக்கிரன், சனியுடன், மிதுன லக்னத்தின் அதிபதியும் சுகாதிபதியுமான புதன், தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் ஆகியோரோடு சேர்ந்து பத்தாம் வீட்டில் அமர்ந்ததால்தான் நுணுக்கமாக இயற்பியலின் அடித்தரை நுட்பங்களை ஆராய முடிந்தது. ராஜ கிரகங்களான குருவும் சனியும் பரிவர்த்தனா யோகம் பெற்றதால்தான் அணுவைக் குறித்து மிக தீர்க்கமாக ஆராய முடிந்தது. தொல்லை தரும் கிரகமான செவ்வாய் எட்டாம் வீட்டில் ராகுவோடு மறைந்து நிற்பதாலும், முனைப்பு கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் செவ்வாய் நின்றதாலும்தான் உலகளவில் புகழ்பெற முடிந்தது. மனோகாரகனான சந்திரன் லக்னாதிபதி புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்றதால்தான் இறுதி மூச்சுவரை ஆராய்ச்சியிலேயே ஈடுபட முடிந்தது.
இந்தியாவின் தலைசிறந்த அரசியல்வாதியான மொரார்ஜி தேசாய் கூட மிதுன லக்னத்தில் பிறந்தவர்தான். இந்த லக்னத்தின் பிரபல யோகாதிபதியான சனியோடு சுக்கிரன் பரிவர்த்தனா யோகம் பெற்றதாலேயே இந்தியாவின் பிரதமர் பதவி வரை இவர் உயர்ந்தார். லக்னாதிபதியான புதனும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரனும் எட்டில் மறைந்ததால்தான் தன்னலமற்று நாட்டுக்குச் சேவை செய்தபடி இருந்தார். சந்திரன் கேதுவோடும், சூரியன் ராகுவோடும் நின்றதால்தான் பலமுறை சிறைவாசம் செல்ல நேர்ந்தது. பாதகாதிபதியான குரு வக்ரமாகி இரண்டில் இருந்ததால்தான் பணத்தின் மீது ஆசையற்றிருந்தார். மிதுன லக்னத்திற்கு பிரச்னைகளை உருவாக்கும் செவ்வாய் எட்டில் மறைந்ததாலும் குருவின் பார்வை பெற்றதாலுமே எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருந்தார்.
உலகப் புகழ்பெற்ற நவீன ஓவியத்தின் பிதாமகரான வான்கோவும் மிதுன லக்னமே. மிதுன லக்னத்திலேயே ராகு அமர்ந்திருக்கிறார். இந்த அமைப்பு மிகமிக வித்தியாசமான கலையுணர்வை அளிக்கும். எப்போதும் கற்பனா உலகத்திலேயே சஞ்சரிக்க வைக்கும். புதுமைக்குரிய கிரகமான சுக்கிரன், மூன்றாம் வீட்டுக்குரிய சூரியனோடு சேர்ந்ததாலேயே புகழ்பெற்ற ஓவியராக வர முடிந்தது. இந்த லக்னத்திற்கு பிரச்னைகளைத் தரும் கிரகமான செவ்வாய் நான்கில் அமர்ந்திருக்கிறார். சனி சுக்கிரனின் சாரம் பெற்றதாலும், ஜல ராசியான மீனத்தில் சூரியன், சுக்கிரன் சேர்க்கை பெற்றதாலுமே நவீன ஓவியத்தின் தந்தையாக இன்றும் விளங்குகிறார். பாதகாதிபதியான குரு கேதுவோடு சேர்ந்து, கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து பாதகத் தன்மையை இழந்ததால்தான் எப்போதும் ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. இவர் ஏதாவது கிறுக்கினாலேயே அதில் கலையின் அம்சம் வந்து குடிகொண்டு விடுகிறது.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் கூட்டுக் கிரகங்களின் தாக்கத்தால் நிச்சயம் நன்மையையும் சில தீய பலன்களையும் பெறுவார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேரும்போது, அவை தங்களுக்குள் நட்பாக இருந்தாலும் கூட சிலசமயம் எதிர்மறைப் பலன்களைக் கொடுக்கலாம். அதேசமயம் எதிரெதிர் கிரகங்கள் கூட்டாக சேரும்போது நல்லதும் அல்லாததுமான பலன்கள் நிச்சயம் வரத்தான் செய்யும். இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் அல்லது எதிர்மறை கதிர்வீச்சையும் அகற்றுவதற்கு ஆலயத்திற்குச் செல்வது அவசியமாகும். எனவே, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகேயுள்ள ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். நிச்சயம் கூட்டுக் கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
(கிரகங்கள் சுழலும்...)
-ஓவியம் : மணியம் செல்வன்
|