நினைவோ ஒரு பறவை



-நா.முத்துக்குமார்

குறிஞ்சிப் பாட்டு
பூக்கும்போது
அங்கிருந்தேன்
காய்க்கும்போது
இங்கிருக்கிறேன்
மரங்கள்
வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்
மனிதர்கள்
நினைத்துக் கொண்டிருப்பார்கள்

- விக்ரமாதித்யன் நம்பி (‘கிரக யுத்தம்’ தொகுப்பிலிருந்து...)

ஒவ்வொரு பூவும் தன்னை குழந்தைகளின் குவி மையப் பார்வையில் பார்க்கச் சொல்கிறது. குழந்தைகளுக்கும் பூக்களுக்கும் உள்ள தொடர்பு, விக்ரமாதித்தனுக்கு வேதாளம் சொல்லாத ரகசியமாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரத்த ஓட்டம் உள்ள பூக்களாகத்தான் எல்லாக் குழந்தைகளும் பிரபஞ்சத்தின் தொப்புள் கொடியில் பூக்கின்றன. பிந்தைய நாட்களில் அதன் ஒவ்வொரு இதழிலும் காலம் தன் ராட்சஸ நகங்களால் முட்களைப் பொருத்தி காயம் செய்கிறது. ஒரு இதழில் துரோகத்தின் வன்முறை; இன்னொன்றில் தந்திரங்களின் காய் நகர்த்தல்; மற்றொன்றில் உதிரும் இரவுகளில் எரியும் காமம்; பிறிதொன்றில் மீளமுடியா துயரத் தடயங்கள்.



முதல்முறையாக ஏதோஒரு பூவைப் பார்த்த உங்கள் குழந்தைப் பருவ முகம் உங்களுக்கு ஞாபமிருக்கிறதா...? அது எந்தப் பூ? செம்பருத்தியா? ரோஜாவா? மல்லிகையா? கனகாம்பரமா? மகிழம்பூவா? தாழம்பூவா? சாமந்தியா? பெயர் தெரியாத காட்டுப் பூவா? அது எந்த இடம்? செவிலித் தாயுடன் நோய்த்துகள்கள் மிதக்கும் மருத்துவமனையா? வெளவால்கள் தலைகீழாகத் தொங்கும் கோயில் பிராகாரமா? வானவில் உடைந்து கிடக்கும் மலைச்சரிவா? குறைந்த வெளிச்சத்தில் அணில் குஞ்சுகள் விளையாடும் உங்கள் வீட்டு முற்றமா? ராட்டினங்கள் கிறீச்சிடும் கிணற்றடி தோட்டமா?

அது எந்தத் தருணம்? பனி கொட்டும் பின் விடியலா? சூரியன் ஸ்நேகமாகும் முன் காலையா? உறவினர்கள் ஒன்று கூடிய திருவிழா மதியமா? ஈக்கள் வந்து வந்து முகத்தில் அமரும் மரண வீட்டின் இறந்த முகத்திலா? ஞாபக அடுக்குகளில் எத்தனை முறை தேடியும் அந்த முதல் பூ மட்டும் தன் மகரந்தக் குழல்களை மடித்து வைத்துக் கொண்டு ஒளிந்து விடுகிறது. அந்த முதல் நாள் அறிமுகத்தின் மிச்ச ஆச்சர்யங்கள்தான் எல்லாப் பூவிலும் ஒளிந்து கொண்டு நம்மைப் பரவசப்படுத்துகின்றன. பூச்செடிகளை குழந்தைகள் நேசிக்கக் காரணம், அதன் எட்டிப் பிடிக்கும் உயரம் என்றே தோன்றுகிறது. சட்டென்று பார்க்கையில் ஒரு பூச்செடி நிற்பது, ஒரு குழந்தை நிற்பதைப் போலத்தான் கண்களுக்குத் தெரிகிறது. மண்ணின் கருவறையில் பூக்கள் புதிர் போடுகின்றன. குழந்தைகள் தங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசிய பாஷையில் அதை விடுவித்துக் கொண்டிருக்கின்றன.

கிராமத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் வெவ்வேறு பூச்செடி கள் இருந்தன. குப்பைமேடுகளிலும், காட்டு வயல்களிலும் அலைந்து திரிந்து பூச்செடிகளைத் தேடி எடுத்து வருவது அப்போதைய என் பொழுதுபோக்காய் இருந்தது. ரோஜாச் செடிகள் எல்லாம் அப்போது பணக்காரச் செடிகள். எல்லோரது வீட்டுத் தோட்டத்திலும் செம்பருத்தியும், மல்லிகைச் செடியும் கட்டாயம் இருக்கும். சூரிய ஒளியிலிருந்து தீ விழுங்கி பூத்த மாதிரி செம்பருத்திப் பூக்கள் செவ்விதழில் இன்னிசை வழங்கும். கிராமபோன் குழல்கள் போலிருக்கும் அதன் சின்னஞ்சிறு இதழ்களில் காற்று வந்து கச்சேரி செய்யும்.

கிராமத்து வீடுகளின் தோட்டங்களில் குப்பை கொட்டி வைக்க இடம் இருக்கும். வருடம் முழுதும் உயர்ந்து கொண்டேயிருக்கும் அந்தக் குப்பை மேட்டில் தான்தோன்றித்தனமாக பல பூச்செடிகள் முளைத்திருக்கும். பெரும்பாலும் சாமந்தியும், தக்காளியும் அவ்விடத்தில் வளர்வதுண்டு. பார்ப்பதற்கு சாமந்திச் செடியும், தக்காளிச் செடியும் ஒரே மாதிரி இருக்கும். விரிந்த உள்ளங்கை விரல்கள் மாதிரி இலைகளும், ஏதோ ஒரு மாவட்டத்தின் வரைபடம் மாதிரி இருக்கும் இதழ் வடிவமும், இரண்டையும் ஒன்றாகவே காட்டும். இலைகளின் சொரசொரப்புத் தன்மையை வைத்து வேறுபாடு உணரலாம். நிறைய தடவை தக்காளிச் செடி நட்டு, சாமந்திப் பூக்களை எதிர்பார்த்து ஏமாந்து இருக்கிறேன். மல்லிகைப் பூக்கள் காற்றில் பரவும் வாசனையுடன் பாம்புகளை அழைத்து வந்து விடும். ஆயினும் பூக்கள் பறிக்கப் போய் பாம்புகள் கடித்ததாக கிராமத்தில் இதுவரை எந்த வரலாறும் இல்லை. ஒருமுறை நாங்கள் ரோஜாச் செடி வளர்த்தோம்.

செம்மண் பாதுகாப்பில் உடைந்த முட்டை ஓடுகளே உரமாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஒளிச் சேர்க்கை தொடங்கி யாரும் கவனிக்காத ஒரு நொடியில் கறுத்த மனிதனின் உள்ளங்கை போல் ரோஜா பூத்தது. ஒரு செல்லப் பிள்ளையாக அதன் இருப்பை நாங்கள் கொண்டாடினோம். ஒரு கட்டத்தில் தினம் தினம் அருகில் வந்து தொட்டுப் பார்க்கும் எங்கள் முகங்கள் அதற்கு பரிச்சயம் ஆகி, நாங்கள் அருகில் சென்றாலே கூடுதலாகப் பிரகாசிக்கும். மழை பெய்த நாளொன்றின் அந்தியில் ஏதோவொரு ஆடு கடித்து அந்த ரோஜாச் செடி தன் ஜனனத்தை முடித்துக் கொண்டது. அன்றிரவு எங்கள் சோற்றுப் பானையில் பசிக்கு பதில் துக்கம் தோய்ந்த வெறுமையே குடிகொண்டிருந்தது.

வாசனைக்கும் உபயோகத்திற்கும் மட்டுமா பூக்கள்? வாசனையற்ற பூக்களில், நிறங்களால் கிரீடம் சூட்டி விடுகிறது இயற்கை. மஞ்சள் கொட்டி படர்ந்து கிடக்கும் நெருஞ்சிப் பூக்கள், ஊதா ஊற்றிச் செய்த கத்தரிப் பூக்கள், வெளிர் மஞ்சளும் பச்சையும் குழைந்த புளியம்பூக்கள், சிவப்பில் குளித்த செந்தாமரைப் பூக்கள், ஆழி வண்ணத்தில் சங்குப் பூக்கள், வெளிர் பச்சையில் பைத்தியமாக்கும் ஊமத்தம்பூக்கள், ரோஸ் வண்ணத்தில் எறும்புகள் ஊரும் புங்கம்பூக்கள், காக்காப் பூக்கள், சூரிய ஒளியில் நிறம் வாங்கிய பீர்க்கம் பூக்கள், சப்பாத்திக் கள்ளிகளில் பூத்த அடர் மஞ்சள் பூக்கள் என பல்வேறு பூக்கள் நிறங்களின் சூதாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும். பூஜைக்குச் செல்வது குறித்த பெருமிதமோ, சுடுகாட்டுப் பாதைகளில் இறைந்து கிடப்பது குறித்த வருத்தமோ பூக்களுக்கு இல்லை. மொழிகளும் அர்த்தமுமற்ற ஒரு ஆழ்வெளியில் இருந்து அவை புன்னகைக்கின்றன.

மாநகரத்தில் மனிதர்களை வளர்ப்பதற்கே சிரமமாக இருக்கும்போது பூக்களை வளர்க்க இடமில்லை. லாரிகளில் மழை- வெயிலில் நனைந்து மாநகரம் வந்தடையும் பூக்கள், பெரிய பெரிய ‘பொக்கே’க்களாக மாற்றப்பட்டு முக்கிய விழாக்களிலும், கொண்டாட்டங்களிலும் பரிமாறப்பட்டு, வரவேற்பறையில் வாசனையும், வண்ணமும் இழந்து கருகி உதிர்கின்றன. மாநகரம் தொட்டி தொட்டியாக வீட்டிற்குள் குரோட்டன்ஸ் செடிகளை வளர்க்கிறது. அதற்குப் பக்கத்தில் பூக்கவே பூக்காத போன்சாய் செடிகள், எல்லாவற்றையும் பார்த்துச் சிரித்தபடி! சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழித் துறையில் டாக்டர் வ.ஜெயதேவன் மேற்பார்வையில் நான் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தபோது, எம்.ஏ. தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு கெளரவப் பேராசிரியராக வகுப்புகள் எடுத்தேன். எம்.ஏ. முதலாண்டு மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடந்தது.

தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு கேள்வித் தாள்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். தேர்வு தொடங்கி அரை மணி நேரம் கழித்து ஒரு மாணவன் வந்தான். சட்டையெல்லாம் செம்மண் படிந்திருந்தது. அரைமணி நேரத்திற்குப் பிறகு தாமதமாக வந்தால் தேர்வு அறையில் அனுமதிக்கக் கூடாது. நான் தாமதத்திற்கான காரணம் கேட்டேன். அதற்கு அந்த மாணவன் சொன்னது நெகிழ்வாக இருந்தது. ‘‘காலைல பஸ் ஸ்டாப்ல நின்னுட்டிருந்தேன் சார். என்னைக் கடந்து ஒரு மாட்டு வண்டி போச்சு. வண்டி முழுக்க ரோஜாச் செடி. செம்மண் கொட்டி அதுக்கு மேல மஞ்சள், சிவப்பு, வெள்ளைனு வெவ்வேறு கலர்ல பூத்த ரோஜாச் செடிங்கள பாலித்தீன் பைகளில் அடைச்சு பாக்கறதுக்கே சந்தோஷமா இருந்துச்சு சார். செடி அம்பது ரூபான்னு வித்துட்டிருந்தாங்க. கார், பஸ், ஸ்கூட்டர்னு ஹாரன் சத்தம் அதிகமா கேட்கவும் மாடு மிரண்டு தாறுமாறா ஓடுச்சு.

வண்டி அப்படியே ஒரு சுவத்துல முட்டி குடை சாஞ்சிடுச்சி. எல்லாரும் அவங்க  அவங்க வேலையா போறாங்களே ஒழிய, யாருமே இத கவனிக்கல. செடிங்க மேல பஸ் டயரு ஏறிப் போறத பாக்க பாவமா இருந்துச்சு. நான்தான் கூடமாட இருந்து எடுத்து அடுக்கி வைச்சேன். அதான் லேட்டாயிடுச்சு’’ என்றான். எனக்கு என் பால்யத்தை அவனிடம் பார்த்த மாதிரி இருந்தது. ‘மாநகரத்திற்கு பாலித்தீன் பைகளுடன் வந்த ரோஜாச் செடிகளும், புத்தகங்களுடன் வந்த அந்த மாணவனும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்’ என கவலைப்பட்டுக்கொண்டே அந்த மாணவனைத் தேர்வு எழுத அனுமதித்தேன். செம்மண் படிந்த கைகளால் தேர்வுத் தாளை வாங்கினான். ‘குறிஞ்சிப் பாட்டில் கபிலர் சொன்ன தொண்ணூற்றி ஒன்பது பூக்களைப் பட்டியலிடுக...’ என்று முதல் கேள்வி இருந்தது.

ரத்த ஓட்டம் உள்ள பூக்களாகத்தான்  எல்லாக் குழந்தைகளும் பிரபஞ்சத்தின் தொப்புள் கொடியில் பூக்கின்றன. பிந்தைய நாட்களில் அதன் ஒவ்வொரு இதழிலும் காலம் தன் ராட்சஸ நகங்களால் முட்களைப் பொருத்தி காயம் செய்கிறது. பூஜைக்குச் செல்வது குறித்த பெருமிதமோ,  சுடுகாட்டுப் பாதைகளில் இறைந்து கிடப்பது குறித்த வருத்தமோ பூக்களுக்கு இல்லை. மொழிகளும் அர்த்தமுமற்ற ஒரு ஆழ்வெளியில் இருந்து அவை புன்னகைக்கின்றன. மாநகரத்தில் மனிதர்களை வளர்ப்பதற்கே சிரமமாக இருக்கும்போது பூக்களை வளர்க்க இடமில்லை.

-ஓவியங்கள்: மனோகர்

(பறக்கலாம்...)