பிரிவு



இந்திரன் ஓய்வு பெறுகிறார். பிரிவு உபசார விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன், ‘‘உங்களுக்கு என்ன வேணும்? தயங்காம கேளுங்க!’’ என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன். சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர். கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம், புல்வெளி... எல்லாமே இவர் உருவாக்கியவை. அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம் ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் தங்கை, தொழில் துவங்க நிதி உதவி எதிர்பார்க்கும் தம்பி என அனைவருமே ‘தனக்குத்தான் ஆதாயம் பெற்றுத் தருவார்’ என எதிர்பார்த்தனர்.



‘‘உங்களுக்கு வரவேண்டிய எல்லா தொகைக்கும் ‘செக்’ ரெடி. இது தவிர... என்ன வேணுமோ கேளுங்க!’’ - சேர்மன் மீண்டும் சொல்ல...சட்டென அழத் துவங்கினார் இந்திரன். ‘‘ஐயா! இந்த இயற்கை, அமைதி, பசுமை, முப்பது வருஷமா பழக்கப்பட்ட கம்பெனி... இதையெல்லாம் மறந்து வாழ என்னால் முடியாது. ஓய்வு பெற்ற பிறகும் சம்பளமில்லாம வேலை பார்க்க எனக்கு அனுமதி கொடுங்க. அது போதும்!’’ கண்ணீருடன் இந்திரன் சொல்ல, சேர்மன் உட்பட அனைவரும் ஸ்தம்பித்தனர்.        
                                                      

-வெ.தமிழழகன்