விவசாயிகள் ஓட்டு யாருக்கு?
தேசிய ஊடகங்கள் அனைத்தும் மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றன. அதற்கு ஈடான துயரம் தமிழகத்தில் நிகழ்வதை யாரும் கண்டுகொள்வதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 2,423 விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத் தகராறு, சொத்துத் தகராறு என காவல்துறையின் திசை திருப்புதல்களைக் கடந்து பதிவான மரணங்கள் இவை. உண்மையான புள்ளிவிவரம் பயங்கரமானதாக இருக்கக்கூடும்! கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலைச் செய்தி தினநிகழ்வாகி விட்டது. சமீபத்திய மரணம், கும்பகோணத்தை அடுத்துள்ள கொத்தங்குடி தனசேகருடையது.

2014ல் திருப்புறம்பியம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில், நடவு எந்திரம் வாங்க ரூ.1 லட்சம் கடன் வாங்கியுள்ளார் தனசேகர். இதில் ரூ.10 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். கடன் நிலுவையை செலுத்துமாறு வங்கி அலுவலர்கள் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கந்துவட்டித் தொல்லை. மனமுடைந்த தனசேகர், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தன்னை மாய்த்துக் கொண்டார். வழக்கம் போலவே காவல்துறை, ‘குடும்பத் தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக’ மனைவியிடம் எழுதி வாங்கி கடமையை முடித்திருக்கிறது.
‘‘கடந்த 5 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க அரசு, விவசாயத்தை ஒரு தொழிலாகவே கருதவில்லை’’ என்று குமுறுகிறார்கள் விவசாயிகள். தண்ணீர் இல்லை... விளைச்சலுக்கு விலை இல்லை... வங்கியில் கடன் இல்லை. அப்பாவி விவசாயிகளுக்குக் கிடைப்பது ஒன்றே ஒன்றுதான்... மரணம்! ‘‘கடந்த 5 ஆண்டுகள் விவசாயிகளுடைய வாழ்க்கையை முழு அமாவாசை சூழ்ந்திருந்தது. அது விலகும் நேரம் வந்து விட்டது. காவிரிப் பாசனப் பகுதியில் மொத்த விவசாயமும் பொய்த்துப் போய்விட்டது. அதற்கு முழுப்பொறுப்பும் அ.தி.மு.க அரசுதான்...’’ என்று ஆதங்கமாகப் பேசுகிறார் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜீவகுமார்.
‘‘அ.தி.மு.க அரசு மிகவும் தந்திரமாக மக்களை ஏமாற்றி இருக்கிறது. கெயில் வழக்கில் உச்ச நீதிமன்றமே அதை சுட்டிக் காட்டியிருக்கிறது. ‘இன்று கெயில் திட்டம் விவசாயிகளை பாதிக்கும் என்று எதிர்க்கும் தமிழக அரசு, தொடக்கத்தில் ஏன் அத்திட்டத்தை அனுமதித்தது’ என்ற கேள்வியை உச்ச நீதிமன்றமே வைத்திருக்கிறது. இந்த ஐந்தாண்டு கால அரசின் அளவுக்கு நீதிமன்றங்களில் குட்டுப்பட்ட, அம்பலப்பட்ட அரசு வேறில்லை. காவிரி நீரை அப்படியே அள்ளி வந்தது போல கொண்டாடினார்கள். பாராட்டி பட்டம் சூடினார்கள். ஆனால் இறுதித் தீர்ப்பு வந்து இத்தனை ஆண்டுகள் கடந்த பிறகும், காவிரி கண்காணிப்புக் குழு, காவிரி ஒழுங்காற்று ஆணையங்கள் அமைக்கப்படவில்லை. அதற்கென சிறிய முன்னெடுப்புகள் கூட இல்லை. கிட்டத்தட்ட காவிரிப் பிரச்னைக்கு கல்லறை கட்டியாகி விட்டது.
விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்கப்படவே இல்லை. பழைய கடன்களை புதுப்பிக்க மட்டுமே செய்கிறார்கள். ஏழை விவசாயி இன்று கூட்டுறவு சங்கங்களில் கடனே வாங்க முடியாது. நகை வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் கடன். சாகுபடி செய்ய முதலீடு இல்லாததால் பலர் விவசாயமே வேண்டாம் என்று வேறு வேலைக்குப் போய் விட்டார்கள். சிலர் கந்துவட்டி, மீட்டர் வட்டி, மணி வட்டி என்று கையேந்தி சிக்கலில் மாட்டி, அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். உரம் போதுமான அளவுக்குக் கிடைப்பதில்லை. தரமான விதைகள் இல்லை. விவசாயத்துறையில் ஏகப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன’’ என்கிறார் ஜீவகுமார்.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பகுதியில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி நடக்கும். இதற்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இதற்குப் பிறகு திறந்து விட்டால் குறுவை சாகுபடி செய்ய முடியாது. ஆனால் 2011ம் ஆண்டைத் தவிர பிறகு எப்போதும் சரியான தினத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் அறிவித்ததை கொண்டாடிய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதித் தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் முயற்சி எடுக்கவில்லை.
தமிழகத்தில் விளையும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி, ரசாயனம் அதிகமிருப்பதாகக் குற்றம் சாட்டி, வாங்கும் அளவைக் குறைத்தது கேரளா. தங்களுக்குத் தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்று முயற்சிக்கிறது. உலகமே இயற்கை வேளாண்மை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இன்னும் இயற்கை வேளாண்மை கொள்கைத் திட்டத்தைக் கூட வகுக்கவில்லை தமிழக அரசு. ‘‘கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும் என்று 2011ல் சொன்னார்கள்.
5 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அது ஓரளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. அதிலும் மத்திய அரசு தன் பங்குத்தொகையை உயர்த்தியதால்தான் இந்த விலை. அதேநேரம், தமிழகத்தில் உள்ள 22 தனியார் கரும்பு ஆலை முதலாளிகள் இந்த விலையைத் தரத் தயாரில்லை. மேலும், 600 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு பாக்கி வைத்திருக்கிறார்கள். அரசு நிர்ணயித்த விலையை தர வேண்டும் என்றும், பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டிய அரசு, ‘எனக்கென்ன’ என்று இருக்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில், நெல்லுக்கான மாநில அரசின் போனஸ் தொகை மோட்டா ரகத்துக்கு ரூ.70, சன்ன ரகத்துக்கு ரூ.100 வழங்கப்பட்டது. அ.தி.மு.க அரசு அதை ரூ.50, 70 ஆகக் குறைத்து விட்டது.
கடன் வட்டியையும், கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை இருக்கும்போது, விவசாயிகளின் மிச்சமிருக்கும் உடைமைகளையும் ஜப்தி செய்கிறார்கள். நிதி நிறுவன குண்டர்களோடு காவல்துறையைக் கை கோர்க்க வைத்து, விவசாயிகளைத் தாக்கி அராஜகம் செய்கிறார்கள். 5 வருடங்களில் டெல்டாவின் பாசன மேம்பாட்டுக்காக 12,700 கோடி ரூபாயில் திட்டம் கொண்டு வருவோம் என்றார்கள். அது ஏட்டளவில்தான் இருக்கிறது. 22 லட்சம் ஏக்கராக இருந்த டெல்டா விவசாயம் இப்போது 16 லட்சம் ஏக்கராக குறைந்திருக்கிறது. இதுதான் ஐந்தாண்டு கால அ.தி.மு.க அரசின் சாதனை...’’ என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் சாமி.நடராஜன். ‘‘கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் வட்டியில்லா கடனை 90% ஆளுங்கட்சியினரே எடுத்துக்கொள்கிறார்கள். வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து விளைபொருட்களை நாசம் செய்வதும், உயிரிழப்பை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
வனவிலங்கு சட்டத்தைத் திருத்தம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. விவசாயிகள் இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்...’’ என்று ஆவேசப்படுகிறார் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராம கவுண்டர். இந்தியாவின் தேங்காய் உற்பத்தி மண்டலங்களில் தமிழகத்தின் பொள்ளாச்சி, பட்டுக்கோட்டை மண்டலங்கள் மிகவும் பிரதானமானவை. நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் விளைநிலங்களில் தென்னையைப் பயிரிட்டு வளர்த்தார்கள். இப்போது அதிலும் பிரச்னை. சில ஆண்டுகளுக்கு முன் 15 ரூபாய் விற்ற தேங்காய், இப்போது 5 ரூபாய்க்குக் கூட போகவில்லை.
‘‘அரசிடம் தெளிவான விவசாயக் கொள்கை இல்லை என்பதே இந்நிலைக்குக் காரணம். அதிகாரிகளுக்கும் போதிய புரிதல் இல்லை. உள்ளூரில் தேங்காய் விவசாயிகள் விலை கிடைக்காமல் நஷ்டப்பட்டு தவிக்கும் நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் தேங்காய், பாமாயில் இறக்குமதி செய்கிறார்கள். குறைந்தபட்சம், மாநில அரசு இதைக் கண்டிக்க வேண்டும். அதைக்கூட செய்யாமல் எங்கள் துயரத்தை வேடிக்கை பார்க்கிறார்கள். இவர்களது ஆட்சியில் எல்லா விஷயத்துக்குமே போராட வேண்டியிருக்கிறது’’ என்று கோபத்தோடு சொல்கிறார் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டத் தலைவர் பா.பாலசுந்தரம். ஒட்டுமொத்த விவசாயிகளின் மனநிலையும் ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராவே இருக்கிறது. தினகரன் செய்தியாளர்கள் உதவியுடன்

கடைசி இடம்!
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களின் வளர்ச்சி பற்றி மத்திய அரசு ஒரு ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வில், விவசாய வளர்ச்சிப் பிரிவில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழகம். விவசாயக் குடும்பங்களின் சராசரி கடன் சுமை அதிகமாக உள்ள மாநிலங்களில் 4வது இடத்தில் தமிழகம் இருக்கிறது.
2011ல் சொன்னதும் செய்யாததும்!
* விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காகப் பெருக்குவோம். தற்போதைய 8.6 மில்லியன் டன் அரிசி உற்பத்தியை 13.45 மில்லியன் டன்னாகப் பெருக்குவோம். * விவசாயிகளின் தனிநபர் வருமானத்தை 2 முதல் 3 மடங்குக்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுப்போம். * தரமான விதைகள், விவசாய இடுபொருட்கள் ஆகியவை தள்ளுபடி விலையில் வழங்கப்படும். * மதிப்புக் கூட்டப்பட்ட விவசாயத்தை தொழிலாக அறிவித்து, உணவு பதப்படுத்தும் சிறப்பு மையங்கள் உருவாக்கப்படும். விவசாயிகள் அந்நிறுவனத்தில் பங்குதாரர்கள் ஆக்கப்படுவர். * அனைத்து மாவட்டங்களிலும் விவசாயக் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்படும். விளைபொருள் சேகரிப்பு நிலையங்கள் நவீனமாக்கப்படும். * விவசாய உற்பத்தி மற்றும் லாபத்தைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும். * நுண்ணிய வேளாண்மைத் திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளை பங்கு தாரர்களாகக் கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்படும். * சொட்டுநீர் பாசன வசதி அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். * பருத்தி உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 2015க்குள் 100 பெரிய பால் பண்ணைகள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். அதன்மூலம் 10 லட்சம் பேருக்கு சுய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
யாருக்கு ஓட்டு?
தமிழகமெங்கும் விவசாயிகளின் மனநிலை எப்படி இருக்கிறது..? இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டு..?
கோபாலகிருஷ்ணன், சேலம் தமிழகத்தில் விவசாய உற்பத்தி 3 மடங்காக உயர்த்தப்படும் என்றார்கள். இப்போது எங்களுக்கு கடன்தான் 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டு ஏமாற விரும்பவில்லை.
செந்தில்ராஜா, தர்மபுரி அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன தும்பலஅள்ளி- எண்ணேகால் திட்டத்துக்கு எந்தப் பணியும் துவக்கப்படவில்லை. இதேபோல் பல திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இப்படி திட்டங்களை அறிவித்து ஏமாற்றியது தான் இவர்களின் சாதனை.
காளியப்பன், நாமக்கல் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் உழவர் சந்தைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். விவசாயிகளை மதிக்காத இந்த ஆட்சிக்கு தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்போம்.
ராஜேந்திரன், ஆலப்பட்டி விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார்கள். நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிச்சயம் இவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம்.
அய்யாக்கண்ணு, கொண்டுரெட்டியபட்டி நான் நாப்பது வருஷமா விவசாயம் செய்யிறேன். இந்த மாதிரி ஒரு பாதிப்பை இதுக்கு முன்னாடி பாத்ததில்லை. பேங்க்காரன்லாம் ரவுடிகளை வச்சு மிரட்டுறான்.
அன்னக்கொடி, கருநாக்கமுத்தன்பட்டி ‘கடனை ரத்து செய்வோம், கட்டுபடியான உச்சபட்ச விலை கொடுப்போம்’னு சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தாங்க. எதுவும் நடக்கலே. முத்துக்காமாட்சி, பெரியகுளம் விவசாயிகளுக்கான சலுகைகள், திட்டங்கள் அனைத்தையும் அ.தி.மு.க.வினரே சுரண்டி விட்டனர். சட்டசபையில் அறிவித்த இழப்பீடு இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை.
காமராஜ், கொடைக்கானல் குளிர்பதன கிட்டங்கி கட்டித் தருவதாகச் சொன்னார்கள். இதுவரை கட்டவில்லை. பொருட்கள் எல்லாம் அழிந்து போகிறது. நான் மட்டுமல்ல... எங்கள் பகுதியில் யாரும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட மாட்டோம்.
பாலசுப்பிரமணியன், ஆலம்பச்சேரி கண்மாய், கால்வாய்களை தூர் வாரியதாக கணக்கெழுதி விட்டு பணத்தைச் சுருட்டிவிட்டனர். இதனால் மொத்த விவசாயமும் பொய்த்துப் போய்விட்டது. வேறு வேலை தேடி ஏராளமானவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்கிறார்கள்.
கண்ணப்பன், சிறுவேலங்குடி காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உழவர் சந்தையில் கூட விவசாயிகளுக்கு பதில் வியாபாரிகளை அனுமதிக்கின்றனர்.
ஆறுமுகம், ராமநாதபுரம் வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் பாசன கண்மாய்களைத் தூர் வாராததால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது.
சரவணன், சுக்காலியூர் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் எந்தத் திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு கொண்டு வரவில்லை. அதற்கு பதிலாக, காவல்துறையை ஏவி விவசாயிகளைத் தாக்குகிறது.
வெள்ளைச்சாமி, ஏ.அருகம்பாளையம் நகை இருந்தாதான் கூட்டுறவு சங்கங்கள்ல கடன் கிடைக்குது. விவசாயிகளை வஞ்சிக்கிற இப்படியொரு அரசு எங்களுக்குத் தேவையில்லை.
பொன்னையன், ஈரோடு தனியார் சர்க்கரை ஆலைகளில் இருந்து விவசாயிகளுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகை வரவில்லை. சர்க்கரை ஆலைகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. இவர்களுக்கு விவசாயிகளின் வாக்கு கிடைக்கவே கிடைக்காது.
கோபாலகிருஷ்ணன், பல்லடம் விவசாயிகள் மீது விரோதப்போக்கை இந்த அரசு கடைப்பிடிக்கிறது. விவசாயிகளின் கஷ்டம் பற்றி சிறிதும் கவலைப்படாத அதிமுகவுக்கு ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்?
பரமசிவம், பொள்ளாச்சி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் விவசாயிகளே இருக்க மாட்டார்கள். விவசாயிகள் மீது அக்கறை கொள்ளும் கட்சிக்கு மட்டுமே எங்கள் வாக்கு.
ஜெயக்குமார், குன்னூர் நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு குறு விவசாயிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலைத் தொழிலையே நம்பியுள்ளனர். அதிமுக அரசு இன்று வரை தேயிலை விவசாயி களின் நலனுக்கான எந்த திட்டத்தையும் உருவாக்கவில்லை.
முகமது, ஊட்டி அரசின் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் தமிழக அரசு மானியம் வழங்கியது. தனியார் விவசாயி களுக்கு வழங்கப்படவில்லை.
சுதாகர், வால்பாறை தேயிலைத் தோட்ட எஸ்டேட்களில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.234.47 வழங்கப்படுகிறது. கேரளாவில், நாள் ஒன்றுக்கு ரூ.301 வழங்கப்படுகிறது. இந்த வேறுபாட்டைக் களைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெருமாள், துடியலூர் கோவை பகுதியில் வனவிலங்குத் தொல்லை அதிகம். இதை அரசு கட்டுப்படுத்தவில்லை.
பாலையா, நாங்குநேரி மதுக்கடைகளை ஒவ்ெவாரு பகுதியிலும் திறக்கும் அரசுக்கு விவசாயிகளைப் பற்றி கவலையில்லை. எனவே எனது ஓட்டை அ.தி.மு.க.விற்கு போட்டு வீணாக்க விரும்பவில்லை.
செல்லத்துரை, நெல்லை ஆற்றுப்படுகைகளில் கோடி கோடியாக மணலைக் கொள்ளையடிக்கும் அரசுக்கு விவசாயத்தைப் பற்றி துளியும் கவலையில்லை.
வேலுமணி, தென்காசி தாமிரபரணி, நம்பியாறு, கருமேனி ஆறு ஆகிய மூன்று ஆறுகளையும் இணைக்கும் திட்டம் ரூ.369 கோடியில் கடந்த தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதை முடக்கி வைத்துள்ளனர். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் தொடரும்.
சோழமுடிராஜன், அம்பாசமுத்திரம் சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் தர வங்கிகள் தயங்குகின்றன. 4% என இருந்த வட்டியும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளைப் பற்றி துளியும் சிந்திக்காத அ.தி.மு.க.விற்கு எனது ஓட்டு இல்லை.
தன்ராஜ், ஆலங்குளம் ராமநதி, ஜம்புநதி மேல்மட்ட கால்வாய்த் திட்டத்தை 5 ஆண்டுகளாக யோசிக்காமல், ஆட்சி முடியும் நேரத்தில் 110 விதியின் கீழ் அறிவித்து இருக்கிறார்கள். ஓட்டுக்காக அறிவித்துள்ள அ.தி.மு.க.விற்கு எங்கள் வாக்கு கிடையாது.
அருணாசலம், கீழப்பாவூர் மின்வெட்டு என்ற பெயரில் 5 ஆண்டுகளைக் கடத்திய இவர்களுக்கு விவசாயிகளின் வாக்கு கிடையாது.
ராஜா, ஓட்டப்பிடாரம் இவ்வளவு மழை பெய்தும் இப்போது நாங்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம். ஏக்கர் ஒன்றிற்கு ஒன்றரை லட்சம் செலவு செய்து வாழை பயிரிட்டோம். அதை மழைக்குப் பறிகொடுத்துவிட்டோம். நிவாரணம் கூட தரவில்லை.
சுப்பையா, தென்காசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் புரோக்கர்கள் என்ற பெயரில் அ.தி.மு.க.வினர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
குமார், தஞ்சாவூர் விவசாயத்திற்கென்று மத்திய அரசு தரும் நிதியை மாநில அரசு வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது. வெறும் கடித அரசியல் மட்டுமே செய்யும் அ.தி.மு.க.வை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை.
ராஜாங்கம், உளூர் விவசாயத் தொழிலாளிகளை இந்த அரசு கண்டுகொள்வதே இல்லை. கண்டிப்பாக விவசாயிகள் அ.தி.மு.க.வை ஆதரிக்கப் போவதில்லை.
சிவானந்தம், நாஞ்சிக்கோட்டை விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிய, காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்த வைக்கும் அ.தி.மு.க.வுக்கு எப்படி மீண்டும் வாக்களிக்க முடியும்?
நாகராஜன், அந்தநல்லூர் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி விதை, உரம், லாபகரமான விலை கிடைக்கும் என வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா. 5 வருடம் முடிவடையும் நிலையிலும் எதையும் நிறைவேற்றவில்லை.
கொத்தட்டை அழகேசன், குமரவயலூர் விவசாயிகள் பிரச்னை உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என பிரசாரத்தில் சொன்னார். நம்பி ஓட்டுப் போட்டோம். இதுவரைக்கும் எதுவும் நடக்கலே.
ராஜா,மதுரை கடன் பெற்ற விவசாயிகளின் டிராக்டர் போன்ற வாகனங்களை ஜப்தி செய்வதில்தான் ஆர்வமாக உள்ளார்கள்.
மோகன்தாஸ், திருவாரூர் வேளாண் வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் ஆளுங்கட்சியினரை பொறுப்பில் அமர்த்தியதால், உண்மையான விவசாயிகளுக்கு அரசின் கடனுதவியோ, மானியமோ கிடைக்கவில்லை. இதுபோன்ற அரசு மீண்டும் தேவையில்லை.
தனபதி, புதுக்கோட்டை நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ.2800 தரவேண்டும் என்று கேட்டோம் ஆனால் ரூ.1300தான் தருகிறது அரசு.
ஜோசப், நாகூர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் கேட்டனர். ஆனால் அரசு ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்கியது. வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதையும் இந்த ஆட்சி புறக்கணித்து விட்டது.
அப்துல் ரஹீம், சீர்காழி டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாரப்படவில்லை. தூர் வாருவதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,500 கோடி எங்கே போயிற்று என்றே தெரியவில்லை.
- வெ.நீலகண்டன்
|