நயன்தாரா இடம் கிடைக்குமா?



-கிடாரி நிகிலா

அடிச்சது லக்கி பிரைஸ்! மறுபடியும் சசிகுமாரின் ஜோடியாகியிருக்கிறார் நிகிலா. இந்தத் தடவை ‘கிடாரி’. மலர்ந்த மல்லிகைச் சரத்தை  நுகர்ந்தபடி நிகிலாவை வளைத்துக்கொண்டு கண்மூடித் தவிக்கிற சசிகுமாருக்கே லைக்ஸ் கொடுக்கலாம். ஆனாலும் நம் குல வழக்கப்படி  பச்சரிசி புன்னகையோடு இருந்த நிகிலாவோடுதான் உரையாடல் தொடங்கினோம்.

‘‘செம்பா. ‘கிடாரி’யில் இதுதான் எனக்குப் பெயர். ‘வெற்றிவேல்’ல நான் அதிகமாகப் பேசமாட்டேன். இதில் அந்தக் குறையைத் தீர்த்து  வச்சிருக்கேன். நான் நல்ல படங்கள் செய்யணும்னு காத்திருந்தேன். மலையாளத்தில் ‘லவ் 24x7’ பார்த்துட்டு என்னைப் பத்தி  சொல்லியிருக்காங்க. சசி சாரோட நடிச்ச முதல் படத்திலே என் கேரக்டரிலிருந்துதான் கதையில் செமத்தியான திருப்பம் இருக்கும். இதில்  எனக்கு வித்தியாசமான ரோல். அவரோடு சரிக்கு சரியாக வண்டி ஓட்டுகிற பொண்ணு.

‘கிடாரி’ன்னா சசிகுமார் பெயர்தான். நம் வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடிய கதைதான். தெரிஞ்ச பிளாட்பாரம்தான். ஆனால் ட்ரீட்மென்ட்  முற்றிலும் புதுசு! இப்ப படமெல்லாம் முடிஞ்சு தள்ளி நின்னு பார்க்கிறபோது இன்னும் நிறைவா பேசலாம்னு இருக்கேன்.’’

‘‘படத்துல நிறைய ஆர்ட்டிஸ்ட் போல...’’
‘‘யெஸ். சசிகுமாரையும் வேல ராமமூர்த்தியைச் சுற்றிலும்தான் கதை ஓட்டம் ஆரம்பிச்சு அடுத்தடுத்த இடங்களுக்குப் போகும். நிறைய  கேரக்டர்கள் இருக்கு. ஃபேமிலி சப்ஜெக்ட். வித்தியாசமான படம் பார்க்கிற உணர்வு நிச்சயம் இருக்கும். இப்போ மலையாளத்தில்  பிரபலமாக இருக்கிற ஷோபா மோகனும் நடிச்சிருக்காங்க. எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் ஸ்கிரிப்ட்டை புரிஞ்சுக்கிட்டு நடிச்சது நல்ல  அனுபவம். எங்க யூனிட் கலகலன்னு இருக்கும்.

அடிக்கிற வெயிலில் கூட சந்தோஷமாக ஷூட்டிங்ல இருந்தோம். இந்தப் ெபாண்ணு நடிச்சா நம்பி வரலாம்னு மக்கள் சொல்லணும்.  அதனால, அப்பப்போதான் தமிழுக்கு வருவேன்னு சொல்லலை. நல்ல வேஷம் கிடைச்சா, எப்பவும் நான் தமிழ்ப் படத்திலேயே நடிக்கத்  தயார். எனக்கு தமிழ் எழுதவும், பேசவும், படிக்கவும் தெரியும்.’’

‘‘எப்படி வந்திருக்கு ‘கிடாரி’?’’
‘‘இதுதான் கதைன்னு முடிவான வேகத்தில அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்காங்க. நடுவில எனக்கு போன். ‘நீங்கதான் செம்பா’னு  சொன்னதும் எனக்கு சந்தோஷம். சேலஞ்சிங்கான ரோல். இதை எனக்குத் தரணும்னு சொன்னதில் டைரக்டர், தயாரிப்பாளர்னு  எல்லோருடைய ஒருமித்த முடிவா இருந்திருக்கு. டைரக்டர் பிரசாத் முருகேசனுக்கு எல்லாத்தையும் வேற கோணத்துல சொல்லத் தெரியுது.  நிறைய லிட்ரேச்சர் பேக்ரவுண்ட். வசந்தபாலன் அஸிஸ்டென்ட். இதிலேயே மு.ராமசாமி, வேல.ராமமூர்த்தி, வசுமித்ர என முக்கியமான  எழுத்தாளர்கள் நடிச்சிருக்காங்க. அவர்கள் போக இளவரசு, பிரபுன்னு அருமையான நடிகர்கள் இருக்காங்க. நெப்போலியன் ரொம்ப  நாளைக்குப் பிறகு ரீ-என்ட்ரி ஆகியிருக்கார்.

எனக்கு சசி சாரின் கேரக்டர் ரொம்ப பிடிச்சது. நீள முடியும், பைக் பயணமுமாய், தடாலடியான கேரக்டர். யூனிட் மீதான அவரோட  அக்கறையும் ரொம்பப் பிடிக்கும். படத்தில் தான் மட்டுமே இருக்கணும்னு நினைக்கமாட்டார். நம்மையும் கூட இருந்து நகர்த்திட்டுப்  போறது அவரது பர்சனால்டி. இந்தப் படம் ஆரம்பிக்கிற நேரத்தில் எனக்கு காலேஜ்ல எக்ஸாம். ‘இந்த வாய்ப்பை மிஸ்  பண்ணிடுவேனோ’ன்னு ரொம்பவே குழப்பம். ‘ஒண்ணும் பிரச்னையில்லை, இரண்டு வாரம் கழிச்சு ஆரம்பிக்கலாம்’னு ெசால்ற மனசு  சசிகுமாருக்கு இருந்துச்சு.’’

‘‘படத்துல ரொமான்ஸும் இருக்கும் போலிருக்கே?’’
‘‘ஆமா. அளவா, கொஞ்சமா இருக்கு. கேமராமேன் கதிரை மறக்க முடியாது. அவர்தான் எனக்கு ரொமான்டிக் மூவ்மென்ட்ஸ் சொல்லிக்  கொடுத்தார். என்னோட நிறைய மூவ்மென்ட்ஸை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ரசிச்சாங்க.’’

‘‘நயன்தாரா அளவுக்கு வரணும்னு விருப்பமா?’’
‘‘அவங்க எல்லாம் பெரிய அளவில் வந்துட்டாங்க. நமக்கு அப்படி பெரிய இடம் கிடைக்குமான்னு தெரியலை. அவங்க மாதிரி ஆக  முடியுமானு தெரியலை. அவங்களுக்கு க்ரேஸ் கொஞ்ச நஞ்சமா இருக்கு?!’’

‘‘அடுத்த ப்ளான்?’’
‘‘முதல்ல படிப்போம். அப்புறம் நடிப்போம். ‘நிகிலா நல்ல ஆர்ட்டிஸ்ட்’னு பேர் வாங்கிட்டு அப்புறம் ‘பை பை’ சொல்லுவோமே... சரியா!’’
- தலை சாய்த்துக் கேட்கிறார் நிகிலா.

- நா.கதிர்வேலன்