திருப்புமுனை





‘‘ராமாயண கும்பகர்ணன், ‘ஆறு மாசம் தூங்கி, ஆறு மாசம் முழிச்சிருப்பான்’னு சொல்லுவாங்க. ‘எப்படி ஒருத்தன் தொடர்ந்து ஆறு மாசம் தூங்கிட்டே இருக்க முடியும்?’னு நினைச்சிருக்கேன். கதையா கேட்கும்போது நம்பறதுக்குக் கஷ்டமா இருந்துச்சு. ஆனா, வாழ்க்கை அதையே என் சொந்த அனுபவத்துல புரிய வச்ச பிறகு, நம்பாம எப்படி இருக்க முடியும்? ‘அடடா... கண்ணைத் திறந்துக்கிட்டே இத்தனை வருஷம் தூங்கி இருக்கோமே’னு புரியும்போது, அதுவரைக்கும் சம்பாதிச்ச எதுவுமே எங்ககிட்டே இல்லை. கடையும், மீளமுடியாத கடனும் மட்டுமே இருந்துச்சு!’’
- கடன்பட்ட கதையிலும், அதிலிருந்து விடுபட்ட நிஜத்திலும் கிருஷ்ணனின் வாழ்வும், ‘கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ நிறுவனத்தின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ‘உனக்கும் நன்மை; எனக்கும் நன்மை என்று இருந்துவிட்டால் யாரும் தோற்பதில்லை’ என்கிற அவரது நம்பிக்கைக்கு கைமேல் பலன் கிடைக்கிறது.

‘‘நான் எந்த அளவு தயக்கத்தோடவும், விழிப்புணர்ச்சி இல்லாமலும் இருந்திருக்கேன்னு ஓர் உதாரணம் சொல்றேன். பெண் பார்க்கப் போனோம். கூட்டமாக நாலைந்து பெண்கள் நின்று கொண்டிருக்கும்போது, ‘பொண்ணு வந்திருக்கு... பார்த்துக்கோப்பா’ன்னு சொன்னாங்க. தலை நிமிர்ந்து பார்த்ததும், ‘இந்தக் கூட்டத்தில் நான் திருமணம் செஞ்சுக்கப் போற பெண் யார்’னு சந்தேகம் வந்தது. அதை சபையில் கேட்கத் தயங்கிட்டு, ‘பெண் பிடிச்சிருக்கு’ன்னு சொல்லிட்டேன். திருமண நாள்வரையில், நான் யாருடன் வாழப் போறேன்னு தெளிவா தெரியாது. ஒருத்தரோட வாழ்வில் திருமணம்தான் முக்கியமான முடிவு. அந்த முடிவில்கூட நான் தெளிவா இருந்தது இல்லை. அதிர்ஷ்டவசமா ‘இறைவன் கொடுத்த வரமா’ அமைஞ்சது திருமணம்.

எல்லா விஷயத்திலும் என் அணுகுமுறை இப்படியாகவே இருந்தது. நம்பிய உறவினர் ஏமாற்றி, மொத்தமும் இழந்த பிறகே உலகம் புரிந்து தெளிவானேன். அரண்மனையில் இருக்கும் வரை உலகம் புரியாத சித்தார்த்தனாக இருந்தவர், முதல் அடியை வெளியுலகம் நோக்கி எடுத்து வைத்தபிறகுதான் உலகமே போற்றும் புத்தராக மாறினார். கேட்டதெல்லாம் கிடைத்த வரை, நான் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஏதோ ஒரு சூழ்நிலை வரும். அப்பவும் விழிப்பு வரலைன்னாதான், வாழ்க்கை புரட்டிப் போட்டு அடிக்க ஆரம்பிச்சிடுது.



காலையில் திறப்பது முதல், இரவு கடை மூடுகிறவரை வேலை செய்யப் பழகினேன். கடன்காரர்கள் வந்து, ‘எப்ப பணம் தருவீங்க?’ன்னு கேட்டபோதுதான், நான் அபாயத்தில் இருப்பதை உணர்ந்தேன். எங்களுக்கு அதற்குமுன் அப்படி ஒரு அனுபவம் இருந்ததில்லை. வீட்டின் படியேறி ஒருத்தர் கடன் வசூலிக்க நிற்கும் சூழ்நிலை, மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். ‘ஏமாற்றிய பணத்தை உறவினரிடமிருந்து வாங்கலாம்’ என்று நான் சொன்னபோது, அப்பா மறுத்து விட்டார். ‘நம்மால உழைக்க முடியும் இல்லையா? அதை யாராவது தடுக்க முடியுமா? ஏமாத்தி ஒருத்தரால பொழைக்க முடியும்னா, உழைச்சி நம்மால வாழ முடியும்’னு சொல்லிட்டார்.

வாழ்வில் இலக்கே இல்லாமல் இருந்த எனக்கு, முதன்முதலாக ஒரு இலக்கு கிடைத்தது. வசதிகள், வாய்ப்புகள், பணம், அந்தஸ்து போன்றவை இல்லாமல் ஒருத்தர் பிறக்கலாம். ஆனா இலக்கு இருந்து, அதை நோக்கி தீவிரமா உழைச்சா, எல்லாமே தேடி வரும் என்பதை தினம் தினம் பார்த்துப் பூரித்தேன். ‘ஒரு வாரத்தில் குடுத்துடுறேன்’ என்று கடனாளிக்கு பதில் சொல்லிவிட்டால், அடுத்த ஒரு வாரமும் ‘திக் திக்’ என்று இதயம் அடித்துக் கொள்ளும். படுத்தவுடன் எந்தக் கவலையும் இல்லாமல் பகலிலேயே தூங்கிப் பழக்கப்பட்ட எனக்கு, இரவில்கூட தூக்கம் வராது. என் முன்னால் இருக்கிற பிரச்னைகளுக்கு தீர்வுகளை எப்போதும் தேட ஆரம்பித்தேன். கணக்கு பார்ப்பது, ஆட்களை வேலை வாங்குவது, பிரச்னைகளை சமாளிப்பது என அதுவரை எனக்குள் ஒளிந்திருந்த திறமை அப்போதுதான் வெளியில் வந்தது. ஓடிக்கொண்டே இருந்தால், விரட்டிக் கொண்டே இருப்பார்கள். நின்று நிதானமாக கண் பார்த்து, ‘இப்ப முடியாது, சீக்கிரம் பண்ணிடுறேன்’ என்று சொல்லும்போது நமக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். நான் இன்றுவரை கடைப்பிடிக்கிற குணம் இது. ஒளிவதால் பிரச்னையும் தீராது; தூங்கவும் முடியாது.

தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று தெரிந்தால், அது எவ்வளவு நஷ்டம் தந்தாலும், மறைக்க முயற்சிப்பதில்லை. அதற்குரிய விலையைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்துவிடுவேன். ஒரு அடி முன்னால் வைத்திருந்தால், நாலு அடி பின்னால் திரும்பி வரத் தயங்கமாட்டேன். ‘முன்வைத்த காலை பின் வைப்பதில்லை’ என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தவறு என்று தெரியும் வரை, முன்னோக்கிப் போக உரிமை உண்டு. தப்பான பாதை எனத் தெரிந்ததும், தயங்காமல் பின்னால் வருவதே புத்திசாலித்தனம். என்னை பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றியது இந்த சுயவிமர்சனம்தான்.

வளர வளர, நம்மை சுத்தி ஒரு பிம்பம் வளர்ந்துக்கிட்டே இருக்கும். ‘இந்த வேலை உங்களுக்கு சாதாரணம் சார்’ என்று மற்றவர்கள் சொல்வார்கள். உண்மையிலேயே நம்முடைய பலம் என்னவென்று நமக்குத் தெரிந்திருப்பது அவசியம். கோவையில் ஒரு கட்டிட வேலை நடக்கும்போது, உள்ளூர் அரசியலால் சின்னச்சின்ன தொந்தரவுகள். பெரிய மனிதர் ஒருவரிடம் போய் உதவி கேட்டேன். அவர் அதிகாரமட்டத்தில் பெரும் செல்வாக்கு உள்ளவர் என்பது எனக்குத் தெரியாது. அவர் சொல்லி, எனக்கு இருந்த தொந்தரவு உடனடியாக நீங்கியது. உடனே மற்றவர்கள் என்னை ‘மேலிடத்திற்கு நெருக்கமானவராக’ப் பார்க்க ஆரம்பித்தார்கள். நான் அந்த பிம்பத்தைப் பயன்படுத்த நினைத்திருந்தால், சரிவு அந்த இடத்திலிருந்து தொடங்கிவிடும். அவ்வளவு செல்வாக்கு உள்ள ஒருவரிடம் சாதாரணமாகப் பழகியதை நினைத்து அச்சம்தான் ஏற்பட்டது. நாளை வேறொரு ‘அதிகார மையம்’ வரும். அப்போது அவருக்கு நெருக்கமான நண்பராக நானும் அறியப்படுவேன். பிறகு பெரிய பெரிய தொந்தரவுகளைச் சந்திக்க வேண்டி வரும். என்னுடையது அல்லாத ஒன்றை, மற்றவர்கள் என்னுடையதாகப் பார்த்தாலும், நான் தள்ளி நின்றே பார்க்கிறேன். என்னை பல சிக்கல்களிலிருந்து காப்பாற்றுவது இந்தத் தெளிவுதான்.



1978 முதல் 1991ம் ஆண்டு வரை கோவையில் ஒரு கடையைக் கவனித்தாலே போதும் என்ற மனநிலை இருந்தது. மற்ற இடங்களில் கடை திறந்தால் நன்றாக இருக்கும் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், ‘நிறைய கடைகள் திறந்தால் தரத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் போகும்’ என்ற அச்சம் இருந்தது. கோவையில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் சாப்பிட குடும்பத்துடன் போயிருந்தேன். நார்வே நாட்டு ஐஸ்கிரீம் வகை ஒன்றை, அதே சுவையில் மைனஸ் 2 டிகிரியில் கோவையில் தந்தார்கள். ‘கண்டம்விட்டு கண்டம் ஒரு பொருளை தரமும் சுவையும் குறையாமல் தர முடியும்போது, இங்கிருக்கும் திருப்பூரிலும் ஈரோட்டிலும் நம்மால் தரமுடியாதா’ என்ற கேள்வி மனதில் உதித்த வினாடி, வாழ்வில் புதிய திருப்புமுனை தந்தது. தரமும் சுவையும் எல்லா இடத்திலும் ஒரேமாதிரி கிடைக்க என்னென்ன டெக்னாலஜி வேண்டும் என்பதைக் கண்டறிந்து, அத்தனையும் செய்தோம். கோவையில் மட்டுமே கிடைத்த ‘கிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ மற்ற ஊர்களிலும் கிடைக்க ஆரம்பித்தது.  

வளரும்போது விளம்பரங்களைத் தவிர்க்க முடியாது. பெரிய ஸ்டார்களை அழைத்து வந்து விளம்பரம் செய்கிற பழக்கம் இப்போதும் பலரிடம் இருக்கிறது. ‘ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கினால், அரை கிலோ காரம் இலவசம்’ என்கிற விளம்பர உத்தியை புதிய கிளை திறப்புவிழாவில் அறிமுகப்படுத்தினோம். இதற்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஒரு ஸ்டார் தொடங்கி வைத்தால் வருகிற கூட்டத்தைவிட, இந்தப் புதிய உத்திக்கு அதிகக் கூட்டம் வந்தது. பெங்களூருவில், மல்லேஸ்வரம் என்கிற இடத்தில் நாங்கள் கடை திறக்கிற நாளில் பெரிய கலவரம். ‘நினைத்த நாளில் தொடங்கி விடுவோம்’ என்று நம்பிக்கையோடு கடையைத் திறந்தோம். நீண்ட வரிசையில் நின்று மக்கள் இனிப்புகளை வாங்கிச் சென்றனர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளில் ஒரே தரத்தில், ஒரே சுவையில் இனிப்புகளையும், காரத்தையும் விற்பனை செய்கிறோம். 900க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். எதையும் துரத்திக் கொண்டு போகாமல், இலக்கு நோக்கிப் பயணம் செய்கிறபோது, எல்லாம் என்னை நோக்கித் திரும்பியது. திருமணத்திற்குப் பிறகும் தெளிவில்லாமல், உலகம் அறியாமல் இருந்த நானே, பேர் சொல்லும்படி ஜெயித்திருக்கிறேன். பாரம்பரியம்மிக்க வணிகக் குடும்பத்துப் பெரியவர்கள் அலங்கரித்த ‘இண்டியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்’ அமைப்பின் சேர்மனாகப் பதவி வகிக்க முடிந்தது. இலக்கு நோக்கித் தீவிரமாகப் பயணிக்கிற யாருக்கும் வெற்றி நிச்சயம் வசப்படும் என்பதே என் வாழ்க்கை அனுபவம்’’ என்கிற கிருஷ்ணனின் வளர்ச்சி, தனிப்பட்ட வெற்றி மட்டும் இல்லை. ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது’ என்று புலம்புகிற யாரும், தனக்கான அடையாளத்தைக் கண்டுபிடித்து விடுகிற நன்னம்பிக்கை முனை.
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர்
சரவணன்


‘முன்வைத்த காலை பின் வைப்பதில்லை’ என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தவறு என்று தெரியும் வரை, முன்னோக்கிப் போக உரிமை உண்டு. தப்பான பாதை எனத் தெரிந்ததும், தயங்காமல் பின்னால் வருவதே புத்திசாலித்தனம்.