பொண்ணை கடத்திட்டாங்க...





திருமணம் காலையில் இனிதே முடிந்து, சுற்றமும் நட்பும் புடைசூழ அன்று முன்னிரவில் வரவேற்பு விருந்து நடக்கிறது. திடீரென அங்கு வந்து நிற்கிறது ஒரு உயர் ரக கார். முகமூடி அணிந்த சில நபர்கள், கைகளில் அதிநவீன துப்பாக்கிகளோடு வந்து இறங்குகிறார்கள். மாப்பிள்ளை திகைத்து நிற்க, அவர் கண்ணெதிரிலேயே புது மனைவியை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காரில் திணிக்கிறார்கள். விருந்துக்கு வந்த உறவினர்களும் நண்பர்களும்கூட வெறுமனே வேடிக்கை பார்க்கிறார்கள். நொடியில் பறந்துவிடுகிறது கார். சில நிமிடங்களில் மண மகனின் மொபைலுக்கு அழைப்பு வருகிறது. ‘‘நாங்க சொல்றதை எடுத்துக்கிட்டு வந்து கொடுத்துட்டு, உன் மனைவியைக் கூட்டிக்கிட்டு போ!’’ என்று கட்டளையிடுகிறார்கள்.

- எப்போதாவது தமிழ்த் திரைப் படங்களில் பார்க்கும் இந்தக் காட்சி, ருமேனியா நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது. ஆனால், இது ‘க்ரைம் சீன்’ இல்லை! ஜாலி கலாட்டா. ஆமாம்... புது மனைவியைக் கடத்திச் செல்வது அவரது தோழிகளும் நண்பர்களும்தான். பணயமாக அவர்கள் கேட்பது, சில விஸ்கி பாட்டில்கள்; அல்லது சரக்குக்கும் சைட் டிஷ்ஷுக்கும் காசு! திருமண நிகழ்வுகளில் உற்சாகம் ஏற்படுத்த அங்கு இந்தப் பாரம்பரிய கடத்தல் பல ஆண்டுகளாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. திருமண சடங்குகளில் இந்தக் கடத்தலும் ஒன்றாகிவிட்டது.



தலைநகர் புகாரெஸ்ட்டில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இப்படியான ‘மணமகள் கடத்தல்கள்’ ஏராளம் நடக்கின்றன. அக்கம்பக்க கிராமங்களில் திருமணம் செய்துகொண்டவர்கள்கூட, தங்கள் மனைவி மற்றும் நட்பு வட்டாரத்தை அழைத்துக்கொண்டு இதற்காக புகாரெஸ்ட் வருகிறார்கள். சாலையில் ரோந்து போகும் போலீஸ் படை, பொம்மை துப்பாக்கி ஏந்தியபடி கடத்தும் இந்த ஜாலி படையை சிரித்துக்கொண்டே பார்த்தபடி கடந்து போகிறது.

நம்ம ஊரில் பெண்ணைக் கடத்திப் போய் கல்யாணம் பண்ணுகிறார்கள்; அங்கு கல்யாணம் பண்ணிக்கொண்ட பெண்ணைக் கடத்துகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். சரக்கு, சைட் டிஷ் எல்லாம் எல்லா ஊருக்கும் பொதுதான்!
- ரெமோ