அனுஷ்கா விக்ரம் கெமிஸ்ட்ரி அற்புதம்




தமிழ் சினிமாவை ஆங்கிலப்படத் தரத்துக்கு உயர்த்தும் நம்பிக்கை வைக்கக்கூடிய இளம் இயக்குநர்களில் முன்னணி வரிசையில் இருப்பவர் விஜய். 'மதராசப்பட்டினமு’ம், ‘தெய்வத்திருமகளு’ம் செய்நேர்த்தியில் அந்த சாத்தியத்தை முன்வைத்தன. ‘தெய்வத்திருமகளுக்கு’ப்பின் மீண்டும் விக்ரமுடன் கைகோர்த்து ‘யு டி.வி’க்காக அவர் நிகழ்த்தியிருக்கும் ‘தாண்டவம்’, தமிழ் சினிமாவின் படைப்பு எல்லைகளை இன்னும் விரிவுபடுத்தும் என்று நம்பலாம்.

‘‘இயக்குநரா நல்ல பெயரெடுக்கும் முயற்சியோட, என் தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார வெற்றி தரக்கூடிய படங்களைத் தரணும்ங்கிறதுதான் என் நோக்கம்.
ஸ்கிரிப்ட்னு எடுத்துக்கிட்டா மனிதத்தின் மகத்துவமும், உணர்வுரீதியான கதையோட்டமும் முக்கியம்னு நினைக்கிறேன். என் கடந்த படங்கள் இதைத்தான் செய்தன. ‘தாண்டவ’த்துல அதன் வீரியம் அதிகமா இருக்கும்...’’ என்கிற விஜய், இரவுகளைப் பகலாக்கி இம்மாத இறுதியில் வெளியாகவிருக்கும் ‘தாண்டவத்’தின் தொப்புள்கொடி அறுக்கும் இறுதிக்கட்ட பரபரப்பில் இருக்கிறார்.
‘‘தெய்வத்திருமகள்’ ஷூட்டிங்கின்போதே இந்தக்கதை சிந்தனைல உறுத்திக்கிட்டிருந்தது. விக்ரம் சார்கிட்ட சொன்னதுமே, அவரும் இம்ப்ரஸ் ஆகிட்டார். ஆனா இதுல வர்ற பார்வைத்திறன் இல்லாத ஒரு கேரக்டருக்கு ஏதாவது புதுசா செய்யணுமேங்கிற தேடல்ல இருந்தார். என் நண்பரும், ஒளிப்பதிவாளருமான நீரவ் ஷா நெட்ல தேடி ‘டேனியல் கிஷ்’ பற்றிக் காண்பிச்சார். பார்வைத்திறன் இல்லாத டேனியல் கிஷ் இந்த உலகத்தைத் தன் பயிற்சியால் பார்க்கிறார்னு கேள்விப்பட்டு, அவரை சந்திக்க அமெரிக்கா போனேன்.

அவர்கூட நாலுநாள் இருந்தேன். அவர் பார்வைத்திறன் இல்லாதவர்ங்கிறதை அந்த நேரங்கள்ல முற்றிலுமா மறந்தே போனேன். லாஸ் ஏஞ்சல்ஸ் பக்கத்துல ‘லாங் பீச்’ங்கிற இடத்துல வசிக்கிற அவர், அந்த ஊரை எனக்கு சுத்திக் காண்பிச்சார். சைக்கிள் ஓட்டினார். எப்படின்னு கேட்டா, ‘என் காதுகளால இந்த உலகத்தைப் பார்க்கிறேன்...’னு சொன்னார். அதுக்காக அவர் உருவாக்கி வச்சிருக்க உத்திதான் ‘எக்கோ லொகேஷன்’. வௌவால்கள் போல ஒலியை உருவாக்கி, அது தர்ற எக்கோவை வச்சு தனக்கெதிரே இருக்கிற தூரத்தை உணரும் ஒரு பயிற்சிதான் அது. இதை உலகமெல்லாம் போய் மத்தவங்களுக்கும் கற்றுத் தர்றார். அவர்கிட்ட விக்ரம் பயிற்சி எடுக்கிறதா சில காட்சிகள் வச்சு, அவரையும் நடிக்க வச்சோம். கேமராவுக்கான மார்க்குல மத்தவங்க தவற விட்டாலும், அவர் மிகச் சரியா வந்து நின்னு அசத்தினார்.



ஆனா இதுவே முழுப்படமும் கிடையாது. இது படத்துல ஒரு பகுதிதான். மத்தபடி இதை ஒரு கம்ப்ளீட்டான லவ் ஸ்டோரின்னு சொல்லலாம். எந்த கேரக்டரானாலும் அந்த சவாலை எளிதா முடிக்கத் தெரிஞ்ச விக்ரம் இருக்கும்போது நம்மால இன்னும் சிந்திக்க முடியுது. தமிழ் ஹீரோக்கள்ல ஒரு முழுமையான நடிகர் விக்ரம். அவர்கூட வேலை செய்ததுல நான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அனுஷ்காவுக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி படத்துல அற்புதமா அமைஞ்சிருக்கு. இவங்களோட எமி ஜாக்சன், ஜெகபதிபாபு, சந்தானமும் இருக்கிறதால ஆக்ஷன், காமெடி, சஸ்பென்ஸ், லவ்னு ஒரு கலர்ஃபுல் என்டர்டெயினருக்கான சாத்தியம் படத்துக்குள்ள இருக்கு. லண்டன்ல ஷூட்டிங் பர்மிஷன் வாங்கறது மிகவும் கஷ்டம். என்ன எடுக்கப் போறோம்ங்கிறதை முதல்ல செய்து காட்டணும். ஆக்ஷன் காட்சின்னா, துப்பாக்கியால எத்தனை குண்டுகள் சுடப் போறோம்ங்கிற கணக்கைக் கூட துல்லியமா சொல்லியாகணும். இங்கே 50 ரூபாய் விற்கிற உணவு அங்கே 500 ரூபாய். அதுக்கெல்லாம் பின்புலமா யு டிவி இருந்ததால சாத்தியமாச்சு...’’

‘‘அடுத்து விஜய் படத்துக்குப் போறீங்க..?’’
‘‘சொல்லப்போனா விஜய்யோட ரசிகன் நான். அவரை டைரக்ட் பண்ற நாளை ஆவலோட எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன். அவருக்கு லைன் சொல்லி ஓகே பண்ணியாச்சு. ‘தாண்டவம்’ ரிலீசானவுடனே அதுக்காக உக்காந்துடுவோம். அவருக்குப் படம் பண்றேன்ன உடனே அவரோட ரசிகர்கள்கிட்டேர்ந்து தினமும் எஸ்.எம்.எஸ், போன், இ-மெயில்னு வாழ்த்துகள் குவிஞ்ச வண்ணமா இருக்கு!’’
‘‘அஜித், விக்ரம், விஜய்னு பெரிய ஹீரோக்களோட டார்லிங்காவே இருக்கீங்களே..?’’
‘‘அப்படி அமையுது. அதுக்கான நியாயத்தை நான் பண்றேன். ஆனா மனசுக்குள்ளே சின்னப்படங்களுக்கான மரியாதையும், தாக்கமும் எப்பவும் இருக்கு. நான், நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ்ங்கிற என் யூனிட்டே ஒண்ணு சேர்ந்து ஒரு சின்னப்படம் பண்ற ஆவல்ல இருக்கோம். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிற ‘மனசு’ங்கிற அந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட்டும் ரெடி.

அதேபோல என் படம்னா அதுக்கு நான் மட்டும் காரணமில்லை. என்னோட பயணிக்கிற எல்லாரும்தான். அதனால என் புரொடக்ஷன்லயே, என் படங்கள்ல பங்கெடுத்திருக்கிற அஜயன்பாலாவை டைரக்டராக்கறேன். இன்னைக்கு சினிமா அற்புத மாற்றம் அடைஞ்சிருக்கு. சில குறும்படங்களைப் பார்க்க நேரும்போது மலைச்சுப்போறேன். என் அசிஸ்டன்ட் டைரக்டர்கள் சிலரோட திறமையைப் பார்த்து வியந்திருக்கேன். இங்கே இண்டஸ்ட்ரியில இருக்கிற நூற்றுக்கணக்கான அசிஸ்டன்ட்கள் என்னைவிடத் திறமைசாலிகளா இருக்காங்க. எனக்கு வாய்ப்பு கிடைச்சிருச்சு, அவங்களுக்கு இன்னும் கிடைக்கலைங்கிறதுதான் ஒரே வித்தியாசம். இந்த நிலைமையை உணர்ந்தேதான் நான் பயணிக்கறேன்..!’’
- வேணுஜி