வந்தாச்சு





புத்தகம் : கணக்கில் உங்க குழந்தையும்

மேதையாகலாம் (2ம் பாகம்) ஸீ ஆர்.உமாசங்கர்
குங்குமம் இதழில், ‘இனிக்குது கணக்கு’ என்ற பெயரில் வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தொடரின் நூல் வடிவம். ‘கணக்கென்றால் பிணக்கு’ என்ற மாயையைத் தகர்த்து, மிகப்பெரும் கணக்குகளுக்கும் நொடிப்பொழுதில் விடை சொல்லும் சூட்சுமங்களைக் கற்றுத்தரும் இந்நூல், எல்.கே.ஜி முதல் எஞ்சினியரிங் வரை எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் பயன்படும். எவ்வித உபகரணங்களும் இல்லாமல் அதிவேகத்தில் விடை கண்டறியும் நுட்பத்தையும் கற்றுத் தருகிறார் நூலாசிரியரான மூத்த பத்திரிகையாளர் ஆர்.உமாசங்கர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் படித்து, பயன்படுத்தத் தகுந்த இந்நூல், வீடுகளில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக நூலகங்களில் கட்டாயம் இடம் பெற வேண்டியது.
விலை: ரூ.160/-, வெளியீடு: பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், எண் 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை-83. பேச: 96001 23146.

மதில் மேல் பூனை : இசை


அறிமுக இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கும் படத்தில் நச்சென்று நான்கு பாடல்கள். ‘வந்தாரை வாழவைக்கும் ஊருடா...’ என்று சிம்பு பாடியுள்ள சென்னை ஆன்தம் பாடல் ஆல்பத்தின் ஸ்பெஷல். இந்தப் பாடலை அன்சார் அப்பாஸ் எழுதியுள்ளார். திப்பு பாடியுள்ள ‘மனசை திருடிய புள்ள’ பாடலில் ‘கைவண்ணம்’ காட்டியுள்ளார் கவிஞர் கருணாகரன்.
ஹரிஷ்ராகவேந்திரா - ஹரிணி குரலில் ‘ஒரு பூ பூக்கிறது...’ செவிகளில் மணக்கிறது. ‘நான் கடிகாரம் இல்லையே இருந்தாலும் என்னை நொடிதோறும் ஓடச்செய்தாயே...’ என்று பாடலாசிரியர் யுகபாரதி கவிதை மழை பொழிந்திருக்கிறார். கடைசியாக இடம்பெற்றிருக்கும் ‘இருளை கட்டி வை’ பாடலில் மேற்கத்திய வாடை.

புதுவிசை : இதழ்


ஆதவன் தீட்சண்யாவை சிறப்பாசிரியராகக் கொண்டு வெளிவரும் இந்த கலாசாரக் காலாண்டிதழ், சர்வதேச, தேசிய அரசியல், இலக்கிய நகர்வுகள், கல்விச்சூழல் பற்றிய காத்திரமான கட்டுரைகள், சிறுகதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. அசோக்குமார் கோபாலனின் முன்னட்டை டிஜிட்டல் ஓவியமே இதழ்மீது எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. பர்மாவின் சிறுபான்மை சமூகமான ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் தொடர் வன்முறையின் ஆதி, அந்தங்களை அலசுகிறது செந்தில், ரகுராமின் கட்டுரை. கேப்டன் லெட்சுமியின் நீண்ட பேட்டியும், மிருணாள் கோரெ, லெட்சுமி ஆகியோரின் நினைவுகளை பேசும் கீதாவின் கட்டுரையும் இதழில் குறிப்பிடத் தகுந்தவை. தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றி மதுரை எவிடென்ஸ் நிறுவனம் நடத்திய கள ஆய்வில் இந்தியாவின் ஜனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது.
ஆசிரியர்: சம்பு, தனியிதழ்: ரூ.30/-, ஆண்டுச் சந்தா ரூ. 120/-,
முகவரி: சி-14, டெலிகாம் குடியிருப்பு, ஓசூர்-635109. பேச: 04344 244933

வலை : mydeco


நம் வீட்டின் இன்டீரியர் டெகரேஷனுக்கு ஒரு ஒத்திகை பார்க்க என்னிடம் வாங்க என்கிறது www.mydeco.com   என்ற தளம்.
நமது அறை எத்தனைக்கு எத்தனை ச.அடி, என்ன வடிவம் என்ற அடிப்படை விசாரணைகளுக்குப் பிறகு தத்ரூபமாக 3டி வடிவில் ஒரு அறை நம் முன் விரிகிறது. இந்த அறையை வேண்டியபடி அழகுபடுத்தித் திட்டமிட்டுக் கொள்வது நம் பாடு. பெயின்ட், பர்னிச்சர் உள்ளிட்ட எல்லா உபகரணங்களும் அறையின் வலது பக்கப் பட்டியலில் இருக்கும். தேவையானதை மவுஸ் கொண்டு இழுத்து, தேவையான இடத்தில் விட்டால் போதும். இதே பயன்பாட்டுக்கு பல இணைய தளங்கள் இயங்கி வந்தாலும் முற்றிலும் இலவசம், எளிதான பயன்பாடு இந்த இரண்டிலும் முந்தி நிற்கிறது mydeco