வெண்மைப் புரட்சியாளர்!





குழந்தைப் பருவத்திலிருந்தே தனக்குப் பிடிக்காத ஒரு பொருளை உற்பத்தி செய்யும் துறையில் ஒருவரால் சாதிக்க முடியுமா?
பிடிக்காத ஒரு வேலையில் கடனே என்று சேர்ந்தவர், அந்த வேலையில் உலகின் உச்சத்தைத் தொட முடியுமா?
இரண்டுக்கும் விடையாக இருந்தவர் வர்கீஸ் குரியன். இந்தியாவில் போட்டித் தேர்வுகள் நடைபெறும் எந்தக் காலத்திலும், ‘வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டு, இந்தியாவை பால் வளத்தில் தன்னிறைவு அடையச் செய்தவர் யார்?’ என்று கேட்கப்படும் கேள்விக்கு விடையும் அவர்தான்!

கேரளாவின் கோழிக்கோட்டில் சிரியன் கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த வர்கீஸ் குரியனுக்கு, மழலைப் பருவத்திலிருந்தே பால் பிடிக்காது. ஆனால் சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் பி.இ. முடித்தபிறகு அவர் கால் நடைப் பண்ணையில்தான் அரசு ஸ்காலர்ஷிப்போடு பயிற்சியில் சேர்ந்தார். அமெரிக்கா சென்று முதுநிலை பொறியியல் படித்தபோது, அதில் பால் பதப்படுத்தும் தொழில்நுட்பமும் ஒரு அங்கமாக இருந்தது.

நல்ல ரேங்கில் பாஸ் செய்து திரும்பி வந்தவரை, ஆனந்த்தில் இருந்த (குஜராத் மாநிலம்) பால் பதப்படுத்தல் ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் அமர்த்தியது அரசு. ஸ்காலர்ஷிப்பில் போய்ப் படித்ததால் கட்டாயம் அரசு வேலை செய்ய வேண்டும். ஒரு வருடம் பல்லைக் கடித்துக் கொண்டு நகர்த்தினார். நிபந்தனைக் காலம் முடிந்ததும் வேலையை உதறிவிட்டு வெளிநாடு செல்லும் கனவில் இருந்தார்.

அவருடைய வாழ்க்கையையும், இந்தியாவின் தலையெழுத்தையும் திசைமாற்றியவர், திரிபுவன்தாஸ் படேல் என்கிற எளிய மனிதர். கைரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தார் திரிபுவன். அப்போது குஜராத் தேவைக்கு அதிகமாக பால் உற்பத்தி செய்தது. அதில் பெரும்பகுதி வீணானது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் குழந்தைகள் பால் கிடைக்காமல் தவித்தன. பாலைப் பதப்படுத்தி மற்ற பகுதிகளுக்கு அனுப்பும் ஆசை திரிபுவனுக்கு இருந்தது. தங்களுக்கு ஒரு பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்துத் தரும்படி அவர் குரியனிடம் கேட்டார். ‘பல குழந்தைகளின் பசியைப் போக்கும் ஒரு சேவையைச் செய்ய நாம் பிறந்திருக்கிறோம்’ என்பது குரியனுக்கு புரிந்தபோது அவரது வயது 28.

சில ஆண்டுகளில் ‘அமுல்’ பிறந்தது. ‘விலைமதிப்பற்றது’ என பொருள்படும் ‘அமுல்யா’ என்ற வார்த்தையிலிருந்து உருவானது இந்த நிறுவனம். இன்று ஒரு கோடி விவசாயிகளின் நம்பிக்கை நட்சத்திரம் அது! கூட்டுறவு பால் சங்கம் என்ற முறையை இந்தியாவுக்கு மாடலாகக் காட்டி, பாலுக்காக வெளிநாடுகளை நம்பியிருந்த நிலையை மாற்றினார் அவர். பசும்பாலை மட்டுமே பால் பவுடர் ஆக்கமுடியும் என நினைத்தது உலகம்; எருமைப் பாலையும் இப்படி பவுடர் ஆக்க முடியும் என தொழில்நுட்பத்தில் சாதித்தது குரியனின் மகத்தான இன்னொரு பணி!
தான் குடிக்காத பாலை இன்று இந்தியர்கள் அனைவரும் மலிவு விலையில் குடிக்கக் காரணமான குரியன், தனது 80வது வயதில் மரணிக்கும்வரை உழைத்துக்கொண்டே இருந்தார்.