டாப் டக்கர் டயர் பங்களா!





ஓலை, காரை, கான்க்ரீட் வரிசையில் வீடுகளைப் பார்க்க முடியும். வெறும் டயர்களினாலேயே ஒரு வீடு, இல்லை... இல்லை... பங்களா கட்ட முடியுமா?
ஓபனிங்கைப் படித்ததுமே ஏதோ ‘வெளிநாட்டு விநோதம்’ என்று நம்மில் பலர் கணக்குப் போட்டு விடலாம். ஆனால், நம் தமிழ்நாட்டில்... பசுமை கொஞ்சும் கொடைக்கானலில் கட்டப்பட்டிருக்கிறது இந்த அதிசய பங்களா. ‘இந்தியாவிலேயே இதுதான் முதல் டயர் பங்களா’ என்று சொல்லிக்கொள்வதில் நமக்கெல்லாம் நிச்சயம் பெருமைதான்!



தனது 39 வயதுக்குள் எட்டு நாடுகளில் செட்டில் ஆகி வசித்துப் பார்த்தவர் அலெக்ஸ். இங்கிலாந்துக்காரர். அவரை கடைசியாக இம்ப்ரஸ் செய்தது இந்தியாதான். அதிலும் நம் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகில் மனதைப் பறிகொடுத்த அலெக்ஸ்தான் இந்த டயர் பங்களாவின் ஓனர்.

‘‘பதினேழு ஆண்டுகளாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறேன். 2002ல் பாட்டியுடன் சாய்பாபாவை தரிசிக்க புட்டபர்த்தி வந்தேன். இந்தியாவின் சூழல் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. எட்டு நாடுகளில் தேடிக் கிடைக்காத அமைதி இங்கேதான் கிடைத்தது. அதன்பிறகு பாபாவின் தீவிர பக்தனாகி, 2006ம் ஆண்டுமுதல் கிட்டத்தட்ட இந்தியனாகவே மாறிப் போனேன். இங்கேயே ஒரு அழகான வீட்டைக் கட்டி தியானம், யோகா செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

நான் இன்டர்நெட் மூலமே வேலை பார்ப்பதால், எந்த நாட்டில் இருந்தாலும் எனக்குப் பிரச்னை இல்லை. ‘வித்தியாசமான வீடு’ என்று யோசித்தபோது, அமெரிக்காவில் என் நண்பர் மைக்கேல் ரெனால்ட்ஸ் கட்டியிருக்கும் ‘டயர் பங்களா’ நினைவுக்கு வந்தது. அதைத்தான் இங்கே நான் அப்படியே செயல்படுத்தியிருக்கிறேன்’’ என்கிற அலெக்ஸ், கொடைக்கானலிலிருந்து பிரகாசபுரம் செல்லும் சாலையில் 15வது கிலோமீட்டரில் இருக்கும் கருணா பண்ணையில் இந்த பங்களாவை உருவாக்கியிருக்கிறார்.



ஆனால், இங்கு இப்படியொரு பங்களா கட்டுவது அத்தனை சுலபமானதாக இல்லை. காரணம், நாலரை கி.மீ. நடந்துதான் இந்த உயரமான மலைப்பகுதியை அடைய முடியும். கிட்டத்தட்ட 2000 டயர்களையும், உள் சுவர்களுக்காக ஆயிரக்கணக்கில் காலி வாட்டர் பாட்டில்களையும் இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கே பல மாதம் பிடித்திருக்கிறது. கடைசியாக, 15 பேரின் ஒரு வருட உழைப்புக்குப்பின் ரெடியாகி இருக்கிறது அலெக்ஸின் கனவு பங்களா!

பழைய டயர், பிளாஸ்டிக் பாட்டில் என்றதும் பங்களாவுக்கு காயலாங்கடை எஃபெக்ட் இருக்குமே என்று நீங்கள் முகம் சுளித்தால் அதுதான் தப்பு. டயர்களில் செம்மண் நிரப்பி அழகாகவும் உறுதியாகவும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. 32 அடி உயர சுவர்கள், அதன் மேல் தேங்காய் நார், மண்கலவை. உச்சியில் சூரிய வெளிச்சம் உள்ளே வர கண்ணாடி மாடம், மரக்கதவு, கண்ணாடி ஜன்னல், உள்ளே ஒய்யாரமாக மரப்படிகளுடன் மினி பால்கனி, பெட்ரூம், மாடுலர் கிச்சன், குளியல் தொட்டியுடன் நவீன பாத்ரூம், வீட்டின் உள்ளேயே விதவிதமாய் பூச்செடிகள் வளரும் தோட்டம் என மனதை அள்ளுகிறது பங்களா.

பூமியில் போர்வெல் போட்டு சுரண்டாமல், மலையிலிருந்து தானாக வரும் ஆற்று நீரை சேகரித்து வைக்க 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பங்களாவின் தாழ்வாரங்களில் இருந்தும் மழைநீரை சேகரித்து தொட்டிக்குக் கொண்டு வர பைப்கள் உள்ளன. கழிவு நீரும் மறுசுழற்சி செய்யப்படுகிறது. பங்களாவின் கண்ணாடிக் கூரையை ஒரு மெஷின் மூலம் தூக்கி, சூரிய வெளிச்சம் உள்ளே வர விடும் வசதியும் உண்டு.



12 மணி நேர மின்வெட்டு மென்னியைத் திருகும்போது, சோலார் பவர் சிஸ்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அவன், வாட்டர் ஹீட்டர், மியூசிக் சிஸ்டம், மெகா எல்.சி.டி மானிட்டருடன் கம்ப்யூட்டர் + பிரின்டர், 12 அடி நீளமுள்ள ஹோம் தியேட்டர் ஸ்கிரீன் புரொஜக்ஷன் என சகல வசதிகளுடன் அடி பின்னுகிறார் அலெக்ஸ்!

‘‘ஒரு டயரை ரோட்டில இருந்து இங்க கொண்டு வர ரெண்டு மணி நேரம் ஆகும். இவ்வளவு டயர்களையும் எப்படி கொண்டுபோகப் போறார், எங்கருந்து வீடு கட்டப் போறார்னு நினைச்சோம். ஆனா, அலெக்ஸ் விடாப்பிடியா இருந்து சாதிச்சுட்டார்’’ என்கிறார் அந்த ஏரியாக்காரரான தாஸ்.

‘‘இந்த பங்களா முழுக்கவே இயற்கையான பொருட்களால் உருவானது என்பதால் இதற்கு ‘எர்த்ஷிப்’ என்று பெயரிட்டிருக்கிறேன். இதைக் கட்ட 20 லட்ச ரூபாய் செலவானது. இந்த டயர் வீடுகளுக்கு அஸ்திவாரம் தேவையில்லை. இந்தியாவில் எந்தப்பகுதியிலும் இதைக் கட்டலாம். சுனாமியால் அந்தமான் தாக்கப்பட்டபோது நானும் என் நண்பர் மைக்கேலும் அங்கு சென்று, ஏழைகளுக்கு இதேபோல் டயர் வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம். சாதாரணமாக இரண்டேகால் லட்ச ரூபாய் செலவில் டயர் வீடுளைக் கட்டிக் கொள்ள பிளான் தருவதற்கு நான் ரெடி’’ என்றபடி நமக்கு விடை தந்தார் அலெக்ஸ்.

‘இயற்கையோடு வாழப் பழகுங்கள்’ என்பதை நமக்கு அயல்நாட்டுக்காரர் வந்து சொல்லித்தர வேண்டியிருக்கிறது.
- பா.கணேசன்