மனைவிக்கு கணவன் சம்பளம் தரணும்!





பொண்டாட்டி என்னப்பா செய்யறா...’’ என்று யாராவது கேட்டால், ‘‘சும்மாதான் இருக்கா’’ என இனிமேல் சொல்ல முடியாது. வீட்டு வேலை செய்யும் மனைவிக்கு கணவன் சம்பளம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்கிறது மத்திய அரசு.

குடும்ப நிர்வாகத்தில் பொருளீட்டுவதோடு ஆண்களின் கடமை முடிந்துவிடுகிறது. கணவன், குழந்தைகளைப் பராமரிப்பது முதல் சமைப்பது, துவைப்பது வரை எல்லா சுமைகளும் பெண்களின் தலையில்! விரும்பிச் சுமக்கும் சுமைதான் என்றாலும், இந்த தியாகத்துக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் காலங்காலமாகத் தொடரும் பெண்களின் உழைப்பு மீதான இந்தப் புறக்கணிப்பை களைந்து, ‘வீட்டு வேலையை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்’ என்று தொண்டு நிறுவனங்களும், மகளிர் அமைப்புகளும் நெடுங்காலமாக வலியுறுத்துகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இப்படி ஒரு சட்டம்.

‘‘பெண்கள் வேலைக்குச் சென்றால்தான் சமூக மரியாதை கிடைக்கிறது. வீட்டில் செய்யும் வேலைகளுக்கு எவ்வித மரியாதையும் இருப்பதில்லை. ஆனால் அந்த வேலைகளை மதிப்பிட்டால் கோடிகளைத் தாண்டி நிற்கும். கணவனுக்காவது வரையறுக்கப்பட்ட பணி உள்ளது. காலையில் அலுவலகம் போனால் மாலையில் வீடு திரும்பலாம். ஆனால் குடு¢ம்பத்தலைவியின் உழைப்பு வரையறுக்கப்படாதது. கணவனுக்கு முன்பெழுந்து, கணவனுக்குப் பின் தூங்கும் அளவுக்கு பணிச்சுமை. மதிப்பை வரையறுக்காதவரை அந்த உழைப்புக்கு மரியாதை கிடைக்காது. அதைத்தான் நெடுங்காலமாக பெண்ணிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மனைவியின் உழைப்புக்கு கணவன் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். பெண்களின் உழைப்புக்கு சரியான மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான்.  

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பெண்களின் உழைப்பைக் கணக்கிட்டு மதிப்பை நிர்ணயிக்க ஒரு திட்டத்தை உருவாக்குமாறு புள்ளியியல் துறைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. இதுதான் தொடக்கம். இன்னும் கடக்க வேண்டிய பாதை நிறைய இருக்கிறது...’’ என்கிறார் ஜனநாயக மாதர் சங்க தேசிய செயலாளர் சுதா சுந்தர்ராமன்.
சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, இதை வேறொரு கோணத்தில் அணுகுகிறார்.



‘‘பெண்களின் உழைப்புக்கு தகுந்த மதிப்பீடு அவசியம். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், எல்லாத் துறைகளிலும் அரசு ஆட்குறைப்பு செய்துவிட்டது. தனியார் துறைகளில் போதிய சம்பளம் தரப்படுவதில்லை. இந்த நிலையில், மனைவியின் உழைப்புக்கு கணவன் சம்பளம் தரவேண்டும் என்று கூறுவது நியாயமில்லை. பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் குடும்பத்துக்காக பொதுநோக்குடன்தான் உழைக்கிறார்கள். அதேநேரம், வீட்டில் மட்டுமின்றி, வெளியிலும் பெண்களின் உழைப்புக்கு மரியாதை இல்லை. இந்த சட்டத்தை இன்னும் கொஞ்சம் விரிவுபடுத்தி, பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்’’ என்கிறார் அவர்.

இச்சட்டத்தை ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. அச்சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் அருள்துமிலன், ‘‘இந்திய குடும்பங்களின் கட்டமைப்பையே இந்த சட்டம் குலைத்து விடும்’’ என்கிறார்.

‘‘மேலைநாடுகளில் பிள்ளை பெறுவதோடு கடமை முடிந்து விடும். பிள்ளைகளே உழைத்துப் படித்துக் கொள்வார்கள். எல்லாவற்றையும் பொருளாதாரக் கண்ணோட்டத்தில்தான் அணுகுவார்கள். ஆனால் நம் பண்பாடு வேறுமாதிரியானது. குடும்பம்தான் வாழ்க்கையின் அடிப்படை. ஒவ்வொரு வேலைக்கும் கூலி நிர்ணயித்தால் அது குடும்பமல்ல; நிறுவனம். அங்கே அந்யோன்யம், அன்பு இருக்காது.



120 கோடிப் பேர் வாழும் நாட்டில் வெறும் நான்கைந்து பேர் மட்டும் கூடி முடிவெடுக்கக்கூடாது. குடும்ப வாழ்க்கை முறையைப் பற்றி அறியாதவர்கள்தான் இதுபோன்ற சட்டங்களைக் கொண்டுவர முனைகிறார்கள். ஒருவேளை கணவனின் வருமானம் குறைவாக இருந்து, மனைவிக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால் இந்த சட்டம் என்ன செய்யும்? அதற்கு என்ன தண்டனை நிர்ணயிப்பார்கள்? நன்றாக இருக்கும் குடும்பத்தை சட்டத்தைக் கொண்டு உடைப்பார்களா? இந்த சட்டத்துக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? மனைவிக்கும் குழந்தைகளுக்கும்தான் கணவன் உழைக்கிறான். எனவே இப்படியொரு சட்டத்துக்கு எந்த அவசியமும் எழவில்லை...’’ என்கிறார் அருள்துமிலன்.

இந்த வாரம் நடக்கவுள்ள மாநில அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த சட்டம் பற்றி விவாதிக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்த சட்டம் நடைமுறைக்கு வருமா; அல்லது பெண்கள் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தைப் போல முடங்கி விடுமா? என்பது அதன்பிறகே தெரியவரும்.
- வெ.நீலகண்டன்