எனக்குக் கல்யாணம் ஆகி குழந்தை பிறந்திடுச்சா?





மயக்கும் ஆட்டத்தாலும் மருள வைக்கும் விழிகளாலும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் மும்தாஜ். இப்போது?

‘ரகசியத் திருமணம் செய்துகொண்ட மும்தாஜுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது’ - இதை நாம் சொல்லவில்லை. கோடம்பாக்க கிரைண்டரில் அரைபடும் செய்தி இது. அதனால்தான் ஆளையே பார்க்கமுடியவில்லையா என்ற சந்தேகத்தோடு மும்தாஜுக்கு போன் போட்டோம். ‘‘யா... மும்தாஜ் ஸ்பீக்கீங்!’’ என்றவரிடம், ‘நேரில் சந்திக்க வேண்டும்’ என்றோம். ‘‘ஸாரி... வீட்டுக்கு ரிலேஷன்ஸ் வந்திருக்காங்க. கொஞ்சம் பிஸி! எதுவா இருந்தாலும் போன்லயே கேளுங்க’’ என்றார்.

‘‘என்னாச்சு உங்களுக்கு? படங்களில் பார்க்கமுடியலையே?’’
‘‘மாசத்துக்கு இரண்டு, மூன்று கதை கேட்குறேன். எதுவுமே என் மனசுக்குப் பிடிக்கலை. ஒரே மாதிரி நடிச்சா ஆடியன்ஸுக்கு போரடிச்சுடும் என்பதைத் தாண்டி, எனக்கே போரா இருக்கு. அதான் எதையும் ஏத்துக்கலை. இடையில் சில டி.வி ஷோக்கள் பண்ணினேன். அந்த ஏரியாவிலும் கேப் விழுந்து ஒரு வருஷமாச்சு. சமீபத்துல ‘சகுனி’ பட வாய்ப்பு வந்தது. சூப்பரான கேரக்டர்தான். யார் ஜீபூம்பா போட்டதுன்னு தெரியல... நான் நடிச்ச சீன்களே படத்துல இல்லை. படத்தோட நீளம் காரணமா வெட்டிட்டாங்களா, சென்சார்ல போயிடுச்சான்னு தெரியல. ஆனா அதைப்பற்றி நான் கவலைப்படல.  

என் வீட்டுக்கு யாரைக் கூப்பிடணும், கூப்பிடக்கூடாதுன்னு நான்தான் முடிவு பண்ணணும். அதேமாதிரி படத்தில் எந்த சீன் இருக்கலாம், கூடாதுங்கறதை முடிவு பண்ற உரிமை டைரக்டருக்குத்தான் இருக்கு. நான் வேலை செஞ்சதுக்கு நல்ல சம்பளம் கொடுத்தாங்க. அந்த விஷயத்தில் குறை வச்சிருந்தா, நான் கேட்கலாம். அது ரொம்ப போல்டான கேரக்டர். கிளைமாக்ஸுக்கு முந்தைய நிமிடங்களில் என்னோட கேரக்டர் வரும். டப்பிங்கூட நான்தான் பேசினேன். டப்பிங்ல நானே வெட்கப்பட்டு சிரித்தேன். அப்படி ஒரு கலக்கலான கேரக்டர். சரி போனா போகுது... விடுங்க!’’



‘‘சும்மா இருக்க போரடிக்கலையா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. பிஸியா இருந்தப்ப, ‘வீட்டை மிஸ் பண்றோமே’ன்னு ஏக்கமா இருக்கும். இப்போ அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கு. ரம்ஜானுக்கு மும்பை போய் அம்மாவுடன் பண்டிகை கொண்டாடிட்டு வந்தேன். ஷூட்டிங் இருந்தால் இதையெல்லாம் அனுபவிக்க முடியுமா? அதுக்காக ‘நான் இனிமே நடிக்கமாட்டேன்’னு அர்த்தமில்லை. நல்ல கேரக்டர் வந்தா மட்டும் பண்ணுவேன். நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டதில்லை. பாலசந்தர் சார் படங்களில் கதாநாயகிக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். அதனால் அவர்கிட்ட மட்டும் ஒருமுறை வாய்ப்பு கேட்டிருக்கேன். அப்புறம் என் குருநாதர் டி.ஆர். சார் எப்போ கூப்பிட்டாலும் சம்பளமே வாங்காம நடிப்பேன்.’’

‘‘உங்களுக்குக் கல்யாணமாகி குழந்தை பிறந்துட்டதால்தான் வெளியே வருவதில்லை என்று செய்திகள் கசிகிறதே?’’

‘‘இதுபற்றி என் நண்பர்கள் சிலர் சொல்லிக் கேள்விப்பட்டேன். அது வடிகட்டின பொய். எனக்குக் கல்யாணம்னா வெளிப்படையா சொல்லிட்டுத்தான் செஞ்சுக்குவேன். என் வாழ்க்கையில ரகசியக் கல்யாணம்ங்கற பேச்சுக்கே இடமில்லை. நான் இப்போ சென்னையில் என் அண்ணன் குடும்பத்தோட இருக்கேன். வெளியில் எங்காவது என் அண்ணன் குழந்தைகளை அழைத்துச்செல்லும்போது ‘என்னோட பசங்க’ன்னு சொல்லுவேன். சினிமாவில் பிஸியா இருந்தபோதே இமேஜ் பார்க்காம அப்படிச் சொன்ன ஆள் நான். அப்படியிருக்கும்போது எனக்குக் கல்யாணமாகி, குழந்தை பிறந்தா, அதை மறைப்பேனா?’’ என்ற மும்தாஜிடம் கோபம் எட்டிப் பார்ப்பதாகத் தெரியாததால் அடுத்த கேள்வியை வீசினோம்.



‘‘உடம்பை மெயின்டெயின் பண்றீங்களா?’’
‘‘அந்த விஷயத்தில்தான் கொஞ்சம் சங்கடமா இருக்கு. தைராய்டு பிரச்னையால் கொஞ்சம் குண்டாகிட்டேன். நானும் ஜிம்முக்குப் போய் என்னென்னவோ வொர்க் அவுட் பண்ணிப் பார்த்தும் உடம்பு குறையுற மாதிரி தெரியல. (இங்கிருக்கும் படங்கள் ஏற்கனவே எடுத்தவை!) அப்புறம், நான் எதிர்பாக்கிற மாப்பிள்ளை பற்றி சொல்லிடறேன். அஜித், விஜய் மாதிரி சூப்பரா இருக்கணும்னு சொல்ல மாட்டேன். அந்த மாதிரி ஆளைக் கட்டிக்கிட்டு நான் என்ன கடிச்சா திங்கப் போறேன். குடும்பம்தானே நடத்தப் போறேன். மனித நேயம், நகைச்சுவை உணர்வு, புரிந்துகொள்ளும் பக்குவம் உள்ள ஒருவர்தான் என் கணவரா வரணும்னு ஆசைப்படுறேன்!’’
என்னப்பா யாராவது இருக்கீங்களா?
- அமலன்