கவிதைக்காரர்கள் வீதி
* வாழ்க்கை எழுந்து நடந்தான் எலும்பொடிந்த வித்தைக்காரன் தட்டில் கைதட்டல் ஒலி! - வே.பெருமாள், சென்னை-4.
 * அர்த்தம் வெந்ததும் வேகாததுமாய் அவசர அவசரமாய் விழுங்கி ரயில், பேருந்து துரத்தி கொட்டடியில் அடைக்கப்பட்ட ஏதோவொன்றாய் இருந்து திரும்புகையில் எதனால் அர்த்தப்படும் என் பிறப்பு? - பாலுவிஜயன், சென்னை-114.
* தீட்டு பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்தை பார்க்கும்போதெல்லாம் சேரிக்குள் வராத தேர் நினைவுக்கு வருகிறது - ப.மணிகண்ட பிரபு, திருப்பூர்.
* ஆச்சரியம் விழித்த பின்பும் நம்ப முடியவில்லை அது கனவென்று. - ப.மதியழகன், மன்னார்குடி.
* துணை துணை தேடி ஊரெல்லாம் சுற்றிய சிட்டுக்குருவி கடைசியாக யாரோ பார்க்கில் விட்டுச் சென்றிருந்த ஸ்மார்ட்போனுக்குள் இருந்த இன்னொரு குருவியுடன் கொஞ்சிக் கொண்டிருந்தது! - கனவு திறவோன், ரூர்க்கி.
* நினைவு சேர்ந்து பருகியிருந்த சந்தர்ப்பங்களில் ஒன்று நினைவில் இடறுகிறது மறுபடியும் வாய்க்கையிலாவது சொல்லிவிட வேண்டும் வேண்டுமென்றே எதுவும் இல்லை என்று! - சக்தி கிரி, சிந்தம்பாளையம்மேடு.
|