நான் துரைசிங்கம் ரசிகன்!
-சூர்யா
‘‘ஹரி சார் தெரிஞ்சுக்கிட்டது, புரிஞ்சுக்கிட்டது எல்லாம் மக்கள்கிட்டே புழங்குறதுதான். நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கோபதாபம், குற்றம், துரோகம், இதைத்தான் வெளியே கொண்டு வருகிறார். துரைசிங்கம் நம்மில் ஒரு ஆளா ஆனதுக்குக் காரணம், மக்கள்கிட்டே நெருங்கியதுதான். துரைசிங்கம் அம்மா பேச்சைக் கேட்கிறார். அப்பாவின் வார்த்தைக்குக் கட்டுப்படுகிறார். காதலிக்கும் நேரம் தருகிறார்.
 ஹரிக்கு உறவுகளின் பெரும்கூட்டம், மக்கள் மனுஷங்க இல்லாமல் படம் பண்ணவே முடியாது. இவ்வளவு பாசம், நேசத்துக்குப் பின்னாடிதான் அவர் போலீஸ் அதிகாரி. அதனால்தான் ‘சி3’ துரைசிங்கம் பிராண்ட் ஆனது’’ என்கிறார் சூர்யா. செம புன்னகையில் மிளிரும் ‘சூர்யா ஸ்பெஷல்’ சிரிப்பு. இப்பவும் தமிழ் சினிமாவின் வியாபாரத்தில் சூர்யாவுக்கு அதி முக்கிய இடம்தான்.
‘‘சிங்கத்திற்கு தொடர்ச்சியா ‘சிங்கம் 3’ வரைக்கும் வர்றது உங்க படங்களில் இதுவே முதல் முறை. அதை எப்படி எடுத்துக்கிறீங்க?’’ ‘‘ ‘சிங்கம்’ நடிச்சது என் கேரியரில் ரொம்ப நல்ல விஷயம். அந்தப் படத்தில் என் கைக்கு வந்தவங்க, ரொம்ப கஷ்டப்படுகிற சாதாரண மக்கள். என்னை எங்கே பார்த்தாலும் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு, சமயங்களில் பைக்கில் விரட்டி, ‘தலைவா... துரைசிங்கம் டாப்பு’ன்னு கை வலிக்கிற மாதிரி குலுக்கிச் சொன்ன மக்கள்.
 நானும் ஹரி சாரும் வேறு ஒரு படம் பண்ற மாதிரிதான் இருந்தது. அதற்கான வேலைகள்கூட ஆரம்பிச்சது. திடீரென்று ஹரி சார் ‘எஸ்3’க்கு ஒரு லைன் கிடைச்சிருக்கு. தொடர்ந்து அதை பிடிச்சுப் போகவா’னு கேட்டார். ‘சரி, செய்திரலாம்’னு சொன்னது மட்டும்தான் நான். அடுத்தடுத்து இறங்கி அவர் நின்னு முனைப்பெடுத்து சூர்யா செய்த வேலைதான் ‘சி3’.
இப்படி ஒரு பிராண்டுக்கான பாராட்டு அவரையே சென்று சேரணும். இதற்கான ஒவ்வொரு திட்டமிடலும், நடிப்பும் அவரே வடிவமைச்சதுதான். ஒவ்வொரு படத்திலும் பொதுவாக 80 சீன் வரைக்கும்தான் இருக்கும். ஆனால் இதில் கிட்டத்தட்ட 350 சீன்களுக்கு மேலே இருக்கு. அதனால் வேகத்திற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமில்லை. நிச்சயமாக எங்கேயும் சோர்வு தட்டாது.
 எப்படி பேசணும், நிக்கணும், நடக்கணும், பேச்சில் எவ்வளவு காரசாரம் வேணும்னு அவரேதான் சொல்லுவார். அதை கேட்டுக்கிட்டு நடைமுறைப்படுத்துவதே எங்கள் வேலை. சினிமாவுக்கு மொழி தடையில்லை. ஒடிசா, வங்காளி, கன்னடம், சிந்தி வரைக்கும் ‘சிங்கம்’ போய் அப்படியே காட்சிகளைக்கூட மாற்றாமல் சக்ஸஸ் ஆகியிருக்கு.
எமோஷனை பேலன்ஸ் பண்ணினது, குடும்பம், கிராமம்னு வேல்யூ சம்பந்தமாகவும் இருந்ததுதான் ‘சிங்கத்தோட’ கொடி இந்தியா முழுக்க பறக்கறதுக்குக் காரணம். நானே ஒரு கட்டத்தில் துரைசிங்கத்துக்கு ஃபேன் ஆகிட்டேன். ஹரி சாரும் வந்து சொன்ன பிறகு இன்னும் அடுத்த இடத்திற்கு சிங்கத்தை நகர்த்தினால் என்னன்னு பட்டது. ‘சிங்கம்-2’ல் தூத்துக்குடியைவிட்டு வெளியே போனால் எப்படியிருக்கும்னு யோசித்தால் மளமளன்னு கதை வந்தது. இதே துரைசிங்கம் தென் ஆப்ரிக்கா வரைக்கும் போனால்? கிடைச்சது பரபரப்பான க்ளீன் ஆக்ஷன். இப்ப அதற்கடுத்தும்... நேரில் பாருங்களேன்!’’
‘‘அனுஷ்கா தொடர்ந்து மூன்றாவது தடவையாக... படத்தில் அவங்க உழைப்பு?’’ ‘‘அவங்களுக்கு எப்பவும் ‘சிங்கம்’ பிடிக்கும். இப்ப ‘சி4’ வரணும்னு விரும்புறாங்க. ‘பாகுபலி’ லுக் எல்லாம் மாத்திக்கிட்டு, சிங்கத்தின் தொடர்ச்சியா வந்தாங்க. அவங்க இவ்வளவு நாள் நிலைச்சு நிற்கிறதுக்கு அவங்களோட சின்சியாரிட்டி காரணம். ஹன்சிகாவுக்கு பதிலாக ஸ்ருதி. இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து நடிச்சதால் தெரிஞ்சவர்களாக இருந்தோம். அவங்க உழைப்பும் இதில் நிறைவுதான்.’’
‘‘எப்பவாவது அப்பா-அம்மா ஷூட்டிங் பார்க்க வந்திருக்காங்களா?’’ ‘‘ ‘நேருக்கு நேர்’ படத்தின்போது ஒரு தடவை வந்தது. கடந்த 18 வருஷமா எந்த ஷூட்டிங்கிற்கும் வராதவங்க விசாகப்பட்டினத்துக்கு வந்து மூன்று நாட்கள் தங்கியிருந்தாங்க. அம்மா தோளில் ஒரு கைப்பையை வைச்சுக்கிட்டு, ஹரி சார் பக்கத்தில ஒரு சேரை போட்டு உட்கார்ந்து மானிட்டரில் சீன்களை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அதே யூனிட், அதே டெக்னீஷியன்ஸ்னு கிட்டத்தட்ட அந்த யூனிட்டே ஒரு குடும்பம் மாதிரிதான். எனக்கு அந்த டீமில் இருக்கிற ஒவ்வொருத்தர் பெயரும் தெரியும்.
அம்மா, அப்பா ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா ஷூட்டிங் ஸ்பாட் முழுக்க சுத்தி வந்தாங்க. அப்பா விசாகப்பட்டினம் கடற்கரைக்கு அம்மாவைக் கூட்டிப் போய் ‘சிந்து பைரவி’ ஷூட்டிங் நடந்த பாறைகளை எல்லாம் காண்பிச்சார். அப்ப அவங்க இரண்டு பேர் முகத்திலும் இருந்த சந்தோஷம் அவ்வளவு அழகு. என் பசங்களும், ஹரி சார் பசங்களும் கூடி விளையாடியதும், அப்பா அம்மா என்னோட இருந்த நாட்களும் ஞாபகத்தில் அப்படியே இருக்கு!’’
‘‘விக்னேஷ் சிவன், செல்வராகவன்னு உங்க டைரக்டர்கள் வேற செட் வந்திருச்சே?’’ ‘‘விக்னேஷ் அடுத்த ஜெனரேஷன் டைரக்டர். ரஜினி, கமல் எல்லாம் அவங்க நடிக்கும்போது அடுத்தடுத்த கட்டத்திற்கு மாறியிருக்காங்க. நான் நடிக்கிற படங்கள் ஒருவிதத்தில் இருக்கும். புதுசா வர்றவங்க ஸ்டைல், அந்தப் பாதையை விட்டு இருக்கும். அவர் சொன்ன ‘தானா சேர்ந்த கூட்டம்’ வேற விதமாக, நான் இதுவரையும் நடிக்காத விதத்தில் இருந்தது. இப்ப இருக்கிற இளைஞர்கள் அப்படித்தான் பேசிக்கிறாங்க. இது நான் நடிக்கறதில் புதுசு.
செல்வராகவன் படத்துல நடிக்க வேண்டும்ங்கறது ‘காதல் கொண்டேன்’ காலத்திலிருந்தே இருக்கு. நான் செல்வராகவன் கேரக்டராக எப்படியிருப்பேன் என்பதே ஒரு வித்தியாசம்தான். அந்த த்ரிலுக்குத்தான் பண்றோம். அவர் ஒரு கதையைச் சொன்னா, அருமையாக அதைத் திரையில் கொண்டு வருவார்னு எல்லாருக்கும் தெரியும். எனக்கு ஒரு நல்ல படத்தைத் தரணும் என்று நினைக்கிற செல்வராகவனின் அக்கறையும், எனது விருப்பமும் ஒண்ணுதான்.’’
- நா.கதிர்வேலன்
|