ஞாபகம்



-சு.ஜெயக்குமார்

எம்.பி.பி.எஸ் படிப்பதற்காக கல்விக் கடன் கேட்டு வங்கி மேனேஜரை அணுகினான் அர்ஜுன். ‘‘வீடு, நிலம்னு ஏதாவது சொத்து இருந்தா அதோட டாக்குமென்ட் எடுத்துட்டு வா! பிராப்பர்டி அட்டாச் பண்ணிக்கிட்டுதான் கடன் தர முடியும்’’ என்றார் மேனேஜர் ரஞ்சித். ‘‘என்னைய தெரியுதா சார்... முன்னாடி உங்க வீட்ல வேலை செஞ்சாங்களே தேவி... அவங்க மகன் நான். உங்க வீட்டுக்கு நான் கூட அடிக்கடி வந்திருக்கேன் சார்’’ என்றான் அர்ஜுன் நம்பிக்கையோடு.

‘‘ஞாபகம் இல்லையே...’’ என்றார் மேனேஜர் அலட்சியமாக. ‘‘ஹெல்ப் பண்ணுங்க சார்... ப்ளீஸ்!’’ ‘‘பிராப்பர்டி டாக்குமென்ட் இருந்தா எடுத்துட்டு வா... சொன்னா புரியாதா?’’ எரிந்து விழுந்தார் மேனேஜர். விரக்தியோடு வெளியேறினான் அர்ஜுன். அன்று மாலை கல்லூரி அட்மிஷன் தொடர்பாக நண்பர்களோடு பேசிவிட்டு அர்ஜுன் வந்தபோது, திடீரென எதிரே வந்த காரில் அப்பேருந்து மோதியது. பயணிகளோடு சேர்ந்து பதற்றமாக அர்ஜுனும் இறங்கினான்.

காரை ஓட்டி வந்தவர் ரத்தக் காயங்களோடு காரிலிருந்து இறங்க முயன்று தடுமாறி சாலையில் விழுந்தார். ஆம்புலன்ஸுக்கு யாரோ போன் செய்ய, வேடிக்கை பார்க்கும் கூட்டத்தின் நடுவே அர்ஜுனைப் பார்த்த அந்த நபர், ‘‘தம்பி அர்ஜுன்... என்னைத் தெரியலையா? காலையில பேங்குக்கு வந்தியே, அந்த மேனேஜர். என்னை உடனே ஒரு ஆட்டோவுல நல்ல ஆஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போப்பா... ஒனக்கு கோடி புண்ணியமா இருக்கும்’’ என்று கெஞ்சினார்.