ஆன்லைனில் செகண்ட் ஒப்பீனியன் தரும் அமெரிக்க டாக்டர்கள்!
லேசாக நெஞ்சு வலி என டாக்டரிடம் போனால், எக்கோ, இ.சி.ஜி என இன்னபிற பரிசோதனைகளைச் செய்துவிட்டு, ‘‘உடனே ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்’’ என குண்டைத் தூக்கிப் போடுவார் அவர். நமக்கு எதுவும் டேஞ்சராக இல்லை என உள்மனசு சொல்லும். ‘‘எதுக்கும் வீட்டுல எல்லோரையும் கன்சல்ட் பண்ணிக்கிட்டு வர்றேனே’’ என கிளம்ப முயற்சித்தால், ‘‘இப்போ நீங்க இருக்கற நிலைமையில டிராவல் பண்றதே ஆபத்து.
 அப்புறம் ஏதாவது விபரீதமாக ஆகிடுச்சுன்னா என்னைக் குறை சொல்லாதீங்க’’ என அடுத்த அஸ்திரத்தை வீசுவார். வேறு வழியின்றி டாக்டர் சொல்வதையெல்லாம் கேட்டு, ஸ்டென்ட் வைத்துக்கொண்டோ, பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டோ வீடு திரும்புகிறவர்கள் நிறைய பேர். கொஞ்சம் விழிப்புணர்வு இருப்பவர்கள், ‘‘எதற்கும் ஒரு செகண்ட் ஒப்பீனியன் வாங்கிடலாம்’’ என வேறொரு டாக்டரிடம் போகிறார்கள்.
அப்படி செகண்ட் ஒப்பீனியன் தருகிற ஒரு டாக்டர், புகழ்பெற்ற அமெரிக்க நிபுணராக இருந்தால்? அப்பாயின்ட்மென்ட், காத்திருப்பு, எல்லா மருத்துவ அறிக்கைகளையும் முழுமையாகப் பார்க்க நேரமில்லாமல் அவசரமாகத் தரும் ஒப்பீனியன் என இல்லாமல் கச்சிதமான நிலவரத்தை ஆன்லைனில் தருகிறது www.webvaidhya.com என்ற இணையதளம். இதை உருவாக்கியவர், சென்னையில் பிறந்து அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் துவாரகிநாத் ஹரீஷ்.
‘‘சின்னச் சின்ன நகரங்களில்கூட இப்போது மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் வந்துவிட்டன. நிறைய ஸ்பெஷலிஸ்ட்கள்; பேஷன்ட்களும் நிறைய! அமெரிக்காவில் விற்கிற பீட்ஸாவும், கெ.எஃப்.சி சிக்கனும், ஐஸ்கிரீமும் இந்தியாவிலும் கிடைக்கிறது. ஆனால் அமெரிக்காவில் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் சிகிச்சை வாய்ப்புகள் இங்கு கிடைக்கிறதா என்றால் இல்லை’’ என்கிறார் டாக்டர் ஹரீஷ். ‘இதற்குக் காரணம், மருத்துவத் துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததுதான்’ என்பது அவரின் முடிவு.
‘‘என் தந்தை சென்னையில் இருந்தார். அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அவசரமாக புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட்டு எனக்குத் தகவல் சொன்னார்கள். அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து பார்த்தால், அங்கு தந்த சிகிச்சையால் அவருக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு என்ன பிரச்னை, அதற்கு அவர்கள் என்ன பரிசோதனை செய்தார்கள், என்ன சிகிச்சை தந்தார்கள், இந்தப் பிரச்னைக்கு இதுதான் சிறந்த சிகிச்சையா என எதையும் எங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லை. கடைசியில் நான் என் தந்தையை இழந்ததுதான் துயரம்.
அமெரிக்காவில் நான் பார்க்கும் அணுகுமுறைக்கும் இங்கு பார்க்கும் அணுகுமுறைக்கும் தலைகீழ் வித்தியாசத்தை உணர்ந்தேன். ஒரு நோயின் அறிகுறி என்ன, மருத்துவப் பரிசோதனைகள் என்ன சொல்கின்றன என்று பார்த்துவிட்டு, ‘அதற்கு இதுதான் மிகச் சிறந்த சிகிச்சை’ என ஒன்று இருந்தால், அதைத்தான் செய்வார்கள். அதைத் தாண்டி வேறு எதையும் யாரும் செய்ய முடியாது.
தகவல் உரிமைச் சட்டம் என ஒன்று வந்து, எல்லா தகவல்களும் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கின்றன. ஆனால் தனக்கு என்ன ஆனது என்பதைக்கூட ஒரு நோயாளி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அவர் பணம் செலவழித்து எடுக்கும் மருத்துவப் பரிசோதனைகளின் ரிசல்ட் என்ன என்பதுகூட அவருக்கு சரியாகத் தெரியாமல் போகிறது.
மருத்துவத்தில் பூரண குணம் என்பது டாக்டரை நோயாளி முழுமனதாக நம்பும்போதுதான் கிடைக்கிறது. அது நடக்காதவரை எந்த வளர்ச்சியும் அர்த்தமில்லாமல்தான் போகும். என் தந்தைக்கு நேர்ந்தது போல் இன்னும் பலருக்கு நேராமல் தவிர்க்கலாமே என்ற உந்துதலில்தான் இப்படி ஒரு சேவையைத் துவக்கினேன்’’ என்கிறார் ஹரீஷ்.
இந்த இணையதளத்தில் தரும் ஆலோசனை மிக எளிமையானது. ஒரு நோயாளி தன்னைப் பதிவுசெய்துகொண்டு தனது மருத்துவ ரிப்போர்ட்களை ஸ்கேன் செய்து அனுப்பி வைக்க வேண்டும். தனது சந்தேகங்களை கேள்விகளாக அனுப்பி வைக்கலாம். அதிகபட்சம் 2 நாட்களில் பதில் வந்துவிடும். குழந்தை மருத்துவம் முதல் சிக்கலான இதய மருத்துவம் வரை எல்லாவற்றுக்கும் அமெரிக்க போர்டின் அங்கீகாரம் பெற்ற டாக்டர்கள் ஆலோசனை தருகிறார்கள்.
எல்லோருமே இந்தியாவிலிருந்து அங்கு சென்று பல ஆண்டுகளாகப் பணிபுரிபவர்கள் என்பதால், தொடர்புகொள்வதும் எளிது. ஒரு ஆபரேஷன் அவசியமா, லேப் ரிப்போர்ட் என்ன சொல்கிறது, மருத்துவச் செலவு மற்றும் பரிசோதனை செலவைக் குறைப்பது எப்படி, தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் வழி, ஒரு சிகிச்சைக்கு முன்பு நூறு சதவீதம் துல்லியமாக அதன் தேவையை உணர்ந்துகொள்வது எப்படி என எல்லாவற்றுக்கும் இவர்கள் ஆலோசனை தருகிறார்கள்.
இதற்கு குறைந்த அளவில் ஒரு கட்டணமும் உண்டு. ‘‘தேவையற்ற மருத்துவச் செலவையும், அநாவசிய ஆபரேஷன்களையும், பரிதாப மரணங்களையும் தடுப்பது டாக்டர்களின் கடமை. அந்தக்கடமையைத்தான் நாங்கள் எங்கள் தாய்மண்ணுக்கு இப்படிச் செய்கிறோம்’’ என நெகிழ்வாக முடிக்கிறார் ஹரீஷ்.
- அகஸ்டஸ்
|