குட்டிச்சுவர் சிந்தனைகள்
ஆல்தோட்ட பூபதி
புரட்சி என்பது ஊருக்குள்ள இருந்தவரை ஓகே, ஆனா ஊருக்குள்ள இருக்கிறவர்கள் எல்லாமே தங்கள் பேருக்கு முன்னால வச்சதுக்குப் பிறகுதான் புரட்சிக்கு உண்டான அர்த்தமே மிரட்சியாகுற நிலைமைக்குப் போச்சு.
 புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்து புரட்சிகரமான கருத்துகளும், வசனங்களும் பேசி புரட்சித் தலைவர், புரட்சி நடிகர் என்றெல்லாம் பேரும் பட்டமும் வாங்கினாங்க. புரட்சித் தலைவரின் வழி வந்து அவருக்கு திரைப்படங்களிலும் அரசியலிலும் இணையாகவும் வாரிசாகவும் இருந்ததுனால ‘புரட்சித் தலைவி’ என்பதையும்கூட ஏற்றுக்கொள்ளலாம்.
வாழ்நாள் முழுக்க பொறுக்கிகளை உதைத்தும் சில சமயம் போலீஸ்காரர்களையே அடித்தும் தீவிரவாதிகளை தமிழ் பேசியே திருத்தியும், திருடர்களை சிவப்புக் கண் காட்டி மிரட்டியும், எப்பவுமே காக்கிச்சட்டை போட்ட கணக்கு வாத்தியார் போலவே சட்டத்தின் கூட்டல் கழித்தல்களை போட்டு போலீஸாகவே வாழ்ந்த விஜயகாந்தை ‘புரட்சிக் கலைஞர்’ என்றது கூட ஓகே.
ஆனா இன்னைக்கு உலகம் முழுக்க புரட்சி கிடைக்காம வறட்சியாகிப் போற அளவுக்கு மொத்த புரட்சியையும் எடுத்து தமிழ்நாட்டுல புனைப்பேரா வச்சுட்டாங்க நம்மாளுங்க. ‘ரஷ்ய புரட்சி’, ‘பிரெஞ்சு புரட்சி’, ‘இத்தாலிய புரட்சி’, ‘பொலிவிய புரட்சி’னு உலகம் முழுக்க பரவிக் கிடக்கற புரட்சிகள் மாதிரி இல்லாம, உலகத்துலயே தங்கத்துல புரட்சி செஞ்ச ஒரே நாடு பாரத நாட்டின் பாதத்தில் இருக்கும் நம்ம தமிழ்நாடுதான்.
அப்படிப்பட்ட நாட்டுல ‘புரட்சிப் புயல், புரட்சி வெள்ளம், புரட்சி சுனாமி, புரட்சி பூகம்பம்’னு ஒரு இயற்கைப் பேரழிவைக் கூட விட்டு வைக்காம பேருக்கு முன்னால பட்டா போட்டிருப்பது பெரிய அதிர்ச்சியெல்லாம் இல்ல. இன்னொரு பக்கத்துல, ‘புரட்சி தளபதி, புரட்சி ராஜா, புரட்சி மாமியார், புரட்சி மச்சினிச்சி, புரட்சி கொழுந்தனார், புரட்சி சின்னம்மா, புரட்சி ஒண்ணு விட்ட பெரியப்பா’னு போறானுங்க.
மூணாவதா ஒரு குரூப்பு ‘புரட்சித் தமிழன், புரட்சி பெங்காலி, புரட்சி மலையாளி, புரட்சி கோயமுத்தூர்க்காரன், புரட்சி மதுரைக்காரன், புரட்சி திண்டிவனத்தான்’னு தனியா ஒரு ரூட்டு போட்டு போறானுங்க. தமிழ்நாடு முழுக்க புரட்சி இப்படியே பரவினா, இன்னமும் கொஞ்ச நாள்ல, ‘புரட்சி முருங்கைக்காய், புரட்சி வெங்காயம், புரட்சி மொபைல் ரீசார்ஜ், புரட்சி உளுத்தம் பருப்பு, புரட்சி பாதாம் பருப்பு, புரட்சி அய்யங்கார் பேக்கரி’ன்னு விக்கிற பொருள்களில் இருந்து வாங்குற இடங்கள் வரைக்கும் புரட்சியை இழுத்து போர்வையா போர்த்தாம விட மாட்டானுங்க போலிருக்கு.
ஜல்லிக்கட்டு நடத்தணும்னு கோர்ட்டுக்குப் போனா, ‘காளைக்குப் பதிலா சிங்கத்தை அடக்குறீங்களா’னு கேட்டிருக்காங்க, மெத்த படிச்ச கெட்டிக்காரங்க. சரிங்க அய்யா, உங்க லாஜிக்குக்கே வர்றோம்.
ஹோலி பண்டிகைன்னு ஊரு புள்ளங்க மேல கலர் பொடியையும், கலர் தண்ணியையும் கொட்டி, மொத்த ஊரையும் பொங்கலுக்கு போட்ட கோலமாட்டம் கலர் கலரா மாத்தி குப்பையா கொட்டி வச்சு ஏர் பொல்யூஷன், சவுண்ட் பொல்யூஷன்னு எல்லா பொல்யூஷனும் கொண்டு வர்றாங்களே... அவங்ககிட்ட ஒரு வருஷம் கலர் பொடிக்குப் பதிலா மிளகாய் பொடியும், கலர் தண்ணிக்கு பதிலா ஆசிட்டும் அடிச்சு விளையாட சொல்லலாம்ல அய்யா.
‘ரக்ஷா பந்தன் கொண்டாடுறோம்’னு சொல்லிட்டு, கைல கயிறை கட்டி விளையாடுறாங்களே... அவங்ககிட்ட போயி ‘கயிறை கழுத்துல கட்டி விளையாடுங்க’ன்னு சொல்வீங்களா? இல்ல, ‘நவராத்திரி கொண்டாடுறேன்’னு வீட்டுக்குள்ள கொலு வைக்கிற குரூப்புகிட்ட போயி, பொம்மைக்கு பதிலா பாம் வைக்க சொல்வீங்களா? தீபாவளிக்கு புலி மார்க் பட்டாசுதான் வெடிக்க முடியும்; அவங்ககிட்ட போய் பொக்ரான் அணுகுண்டை வெடிக்கச் சொல்ல முடியுங்களா ஐயா?
கார்த்திகை தீபத்துக்கு விளக்கைக் கொளுத்தி விளையாடலாமே தவிர, வீட்டைக் கொளுத்தி விளையாட முடியுமாங்கய்யா? கிறிஸ்துமஸுக்கு வீட்டுக்குள்ள கேக்தான் வெட்ட முடியும், நடு வீட்டுல வச்சு கெடாவா வெட்ட முடியும், என்னங்கய்யா பேசுறீங்க? தாண்டியாவுக்கு குச்சியைத்தான் வச்சு விளையாட முடியும்;
தட்டுறப்ப சத்தம் வருதுன்னு கொடுவாளை வச்சு விளையாட முடியுங்களா அய்யா? விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாரைத்தான் தூக்கிக் கடல்ல போட முடியும்; கலவரம் வருதேன்னு பெத்த அப்பனைத் தூக்கிக் கடல்ல போடச் சொல்வீங்களா அய்யா? பெரிய அய்யாக்களா... மக்களுக்குப் பிடிச்ச மாதிரி சொல்லாட்டாலும் பரவாயில்லை; கொஞ்சம் படிச்ச மாதிரி ஏதாவது சொல்லுங்க!‘
‘சென்னை விமான நிலையக் கூரை உடைவதை விட, புரட்டாசி முடிஞ்சுடுச்சேன்னு ஆம்லெட் போட ஆசையா வாங்கிட்டு வந்த முட்டை உடைஞ்சதை விட, பிடிச்சவங்க சொன்ன சொல்லால் நம்ம மனசு உடைவதை விட, நாலு மாவட்டத்துக்கு நீர்ப்பாசனம் தரும் முல்லைப் பெரியாறு அணை உடைவதை விட மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது வைகோவின் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி உடைஞ்சது’ன்னு ஃபேஸ்புக், ட்விட்டர்ல ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கானுங்க.
அடேய்! ஏரியா ஏரியாவா ஏ.டி.எம் தேடி, அன்னம் தண்ணி புழங்காம அரை நாள் தவிச்சு, கஷ்டப்பட்டு கால் கடுக்க நின்னு எடுத்த ரெண்டாயிர ரூபா நோட்டு கிழிஞ்சா பரிதாபப்படலாம்; ரூல்டு நோட்டு கிழிஞ்சதுக்கெல்லாமா பரிதாபப்பட முடியும்?
ஓவியங்கள்: அரஸ்
|