நியூஸ் வே
* இந்த ஆண்டு ‘ஐ.சி.சியின் சிறந்த வீரர்’ மற்றும் ‘சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் ப்ளேயர்’ என இரண்டு விருதுகளை தட்டியிருக்கிறார் தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின்! சச்சின், டிராவிட்டுக்குப் பிறகு ‘சர் கார்பீல்டு சோபர்ஸ்’ கோப்பையைப் பெற்றிருக்கும் மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை அஸ்வினுக்கு இப்போது சொந்தம்.
 ஐ.சி.சி. நடத்திய கணிப்பு காலகட்டத்தில் மட்டும் எட்டு போட்டியில் விளையாடிய அஸ்வின், 336 ரன்கள் எடுத்து, 48 விக்கெட்டுகளும் சாய்த்திருந்தார். 2016ல் மட்டும் 12 டெஸ்ட் போட்டிகளில் 72 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். இதைவிட அவருக்கு இந்தாண்டின் இன்னுமொரு மிகப் பெரிய கிஃப்ட், இரண்டாவது பெண் குழந்தைக்குத் தந்தை ஆகியிருப்பதுதான்!
* இந்திய சினிமாவில் இது ‘பயோ-பிக்’ காலம். பலரது வாழ்க்கைப் படங்கள் போலவே கிளாமர் குயின் சன்னி லியோனின் வாழ்க்கையைப் படமாக்கும் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. ‘‘என் வாழ்க்கையைப் பற்றிய படத்தில் நான் நடிப்பதற்குப் பதிலாக வித்யா பாலன் நடித்தால் நன்றாக இருக்கும்’’ எனச் சொல்லியிருக்கிறார் சன்னி. இதை ஆமோதித்திருக்கிறார் படத்தை இயக்கப்போகும் அபிஷேக் சர்மா. சன்னி லியோனின் வாழ்க்கையைத் திரையில் காண அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.
 * புகார் கொடுப்பவர்களின் எஃப்.ஐ.ஆர் எந்த நிலையில் இருக்கிறது’ என்பதை எஸ்.எம்.எஸ்ஸில் தெரிவிக்கும் நடைமுறையை முதல்முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறது தமிழக காவல்துறை! முதல்கட்டமாக இந்த எஸ்.எம்.எஸ். நடைமுறையை ஆங்கிலத்தில் தொடங்கி இருக்கிறார்கள். விரைவில், தமிழில் குறுந்தகவல் அனுப்பும் வசதியும் வருமாம். சமீபத்தில், ‘எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் ஆன்லைனில் வெளியிட வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது இந்தப் புதிய முறை!
* பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் வேளையில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுமார் 96 கோடிப் பேரிடம் - அதாவது மொத்த மக்கள்தொகையில் 73% பேரிடம் சொந்தமாக இணைய வசதியே இல்லையாம்! ‘‘நெட் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பணமில்லா பரிவர்த்தனைகளுக்கு ஆணிவேரான இணைய வசதியே இல்லாத ஒரு தேசத்தில் பாதுகாப்பாக எப்படி பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்’’ என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளனர் நிபுணர்கள்.
* சினிமா, அரசியல் சார்ந்த பிரபலங்கள் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் இந்த வதந்திக்கு பலியாகியுள்ளார், அமெரிக்காவின் பிரபல பாடகி ப்ரிட்னி ஸ்பியர்ஸ். சோனி மியூசிக்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் நுழைந்த ஹேக்கர்கள் ‘ப்ரிட்னி ஸ்பியர்ஸ் விபத்தில் இறந்துவிட்டதாக’ செய்தி வெளியிட்டு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளனர். விழித்துக்கொண்ட சோனி நிறுவனம், ‘‘எங்களுடைய ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் திருடி இந்த மாதிரியான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். சங்கடத்துக்கு வருந்துகிறோம். ப்ரிட்னி நலமாக இருக்கிறார்’’ என தெரிவித்த பிறகே ரசிகர்கள் அமைதியானார்கள்.
* இதோ வந்துவிட்டது ‘டிரம்ப் ஐபோன் 7’. முழுக்க முழுக்க தங்கத் தகடுகளாலும், வைரக் கற்களாலும் இழைக்கப்பட்டிருக்கிறது இந்த போன். ‘ஐபோன்7’ல் உள்ள அத்தனை வசதிகளும் தொழில்நுட்பங்களும் இதில் அப்படியே இருக்கின்றன. இதன் பின்பக்கத்தில், அமெரிக்க அதிபர் பதவி ஏற்கப்போகும் டொனால்டு டிரம்பின் முகம் இருக்கும்.
அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் இதை விற்கிறது. துபாயில் ஆடம்பரமான, மிக உயரந்த விலையுள்ள பொருட்களை மட்டுமே விற்பனை செய்கின்ற ‘கோல்டு ஜீனி’ கடையிலும் இந்த போன் கிடைக்கின்றது. இந்த போனை உருவாக்க 180 மணி நேரம் ஆகியிருக்கிறது. ஆர்டர் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும். இதன் விலை ஜஸ்ட் 1.2 கோடி ரூபாய்தான். டிரம்ப் இதில் ஒன்று வாங்கினாரா என தகவல் ஏதுமில்லை!
* பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது, ஐதராபாத்திலுள்ள ‘மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்.’ கலைக்காக செய்த பங்களிப்பிற்கும், உருது மொழியை படங்களின் வழியாக ஊக்குவித்ததற்கும் இந்தக் கௌரவம். ‘‘நான் ஒரு மோசமான கவிஞன். ஆனாலும், இப்போதுவரை ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கிறேன். எழுதும்பொழுதெல்லாம் எனக்கு அமைதி கிடைக்கிறது. எந்த வடிவத்தில் படைப்பின் வெளிப்பாடு இருந்தாலும் அது மக்களுக்கு நல்லதுதான்’’ என இந்நிகழ்ச்சியில் தனக்கே உரிய பாணியில் மாணவர்களிடம் உரையாடி மகிழ்ந்தார் ஷாருக்!
* நான் விரும்பிதைவிட மேலான கிறிஸ்துமஸ் பரிசு எனக்குக் கிடைத்திருக்கிறது’’ என வேதனையிலும் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார், கத்திக்குத்து காயம்பட்ட டென்னிஸ் வீராங்கனை பெட்ரா க்விட்டோவா! செக். குடியரசைச் சேர்ந்த பெட்ரா இடதுகை ஆட்டக்காரர். இரண்டு முறை விம்பிள்டன் பட்டமும் வென்றவர். சமீபத்தில், இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர், பெட்ராவின் இடது கையை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், அவரின் விரல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகே மீண்டு வந்திருக்கிறார் அவர்.
* குச்சுப்புடி’ நடனக் கலைஞர்களால் இந்தியாவுக்குப் பெருமை! ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6117 நடனக் கலைஞர்கள் ஒரே இடத்தில் இணைந்து 12 நிமிடம் குச்சுப்புடி ஆடி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த சாதனை நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயவாடாவில் உள்ள ஐஜிஎம்சி ஸ்டேடியத்தில் அரங்கேறியுள்ளது. ‘இந்த சாதனை விரைவில் இதே நடனக் கலைஞர்களால் முறியடிக்கப்படலாம்’ என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். இதற்குமுன் 2012ம் ஆண்டு ஐதராபாத்தில் 5900 பேர் பங்கேற்று குச்சுப்புடி ஆடியதே சாதனையாக இருந்தது. குச்சுப்புடியின் தாயகம் ஆந்திரப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
* அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயனல் மெஸ்சிக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பதுதான் லேட்டஸ்ட் பரபர! தனது சிறு வயது தோழி அன்டோனெல்லாவுடன் 2008ல் இருந்தே ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் மெஸ்சி. இருவருக்கும் ‘தியாகோ’, ‘மேடியோ’ என இரண்டு குட்டிப் பையன்களும் இருக்கிறார்கள். இப்போதுதான் இருவரும் திருமண பந்தத்தில் நுழைய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேதி இன்னும் முடிவாகவில்ைல. அநேகமாக, ஜூன் மாதம் வரும் மெஸ்சியின் பிறந்தநாள் அன்று திருமணம் இருக்கலாம்.
|