சீஸன் சாரல்
- அசோக் சுப்ரமணியம்
பாடாந்தரக் கச்சிதம், புதுப்புது கீர்த்தனைகளாக எடுத்துக் கையாள்வது, பாடுவதற்கு நிரடலான பல்லவிகளால் அசத்துவது என்று ரசிகர்களை ஈர்க்கும் அத்தனை அம்சங்களோடு அற்புதக் குரல்வளமும் உள்ளவர் திருமதி பந்துல ரமா. அகாதமி அரங்கில், பேகடா ராகத்தில் அமைந்த ‘கெட்டிகானு’ என்னும் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனையுடன் துவங்கியது இவரது கச்சேரி. தொடர்ந்து, மறைந்த மேதை பாலமுரளி கிருஷ்ணாவிற்கு அஞ்சலியாக, அவரது கண்டுபிடிப்பான நான்கு சுர ராகமான ‘இலவங்கி’யில் அவரே எழுதிய ‘ஓம்காரிணீ’ என்னும் பாடலில், ஓம்கார ரீங்காரத்தில் அரங்கத்தை மோன நிலைக்கே கொண்டு சென்றார்.
 விரைவு கதியில் வந்த ‘சங்கரஸ்ரீகிரி’ என்னும் ஹம்சாநந்தி ராகப் பாடல் மோனத்தைக் கலைக்க, அடுத்து வந்த மத்தியமாவதி ராக ஆலாபனையும், அதில் தியாகய்யரின் ‘வெங்கடேச நின்னு’ கீர்த்தனையும், அழகான நிரவல், அளவான சுரமென்று கச்சேரியின் முதல் பாதி ஸ்வீட்! தமிழ்ப் பாடகர்கள் எப்படிப் பாடுகிறார்களோ இல்லையோ, தெலுங்குக்காரரான இவர் பாடிய பாபநாசம் சிவனின், என்றும் இனிக்கும் நவரச கன்னட ராகத்திலமைந்த ‘நானொரு விளையாட்டுப் பிள்ளையா’ அவ்வளவு தூய உச்சரிப்பு.
ஆரபி ராகம்-தானம்-பல்லவியில் எடுத்துக்கொண்ட வரிகள், ‘கமலாகுச சூசுக குங்குமதோ’ என்னும் வெங்கடேச சுப்ரபாத வரிகளால் உந்தப்பட்டவை! தாளம் 7 அட்சர திரிபுடதாளம்; லகுவின் ஒவ்வொரு அட்சரமும் 7, 5, 3 என்று இறங்கு நிரலான கதி அமைப்பில் தாளம் போடுவதற்கும், அதில் பொருந்திப் பாடுவதற்கும் சரியான சவால்! அநாயாசமாக ஊதித் தள்ளிவிட்டார் பந்துலா! நிறைவாக மீண்டும் டாக்டர் பாலமுரளியின் செஞ்சுருட்டி ஜாவளியோடு கச்சேரியை நிறைவு செய்தார்.
 வயலினில் நிழலாகத் தொடர்ந்த எம்.எஸ்.என் மூர்த்தியின் (பந்துலாவின் கணவர்) வாசிப்பு, ஆர்ப்பாட்டமில்லாத, உறுதுணை மட்டுமல்ல, எல்லா சவாலுக்கும் எதிர் சவாலாக உறுமும் துணை! மிருதங்கம் வாசித்த அனந்த கிருஷ்ணன், இளம் வயதிலேயே பண்பட்ட கை! வேகம், லயம், குழந்தை விளையாட்டு போன்ற ஒரு பாவம்! இன்றைய மிருதங்க வித்வான்களில் கவனிக்கத்தக்கவர், கணக்கில் புலியான மறைந்த பாலக்காடு ரகு அவர்களின் தயாரிப்பு. குறையே சொல்ல முடியாது, பாட்டைத் தாங்கிச் செல்லும் வாசிப்பு. அவரும், கடம் பணீந்த்ரா பாஸ்கரும் நடத்திய ‘தனி’, ஒரு நட்புடன் கூடிய யுத்தம்!
நாரத கான சபாவில் நடந்த பாபனாசம் அசோக்ரமணி கச்சேரியின் கருப்பொருள் ‘சிவனின் கீர்த்தனைகள்’! பாபனாசம் சிவனின் பேரனான இவரைவிட அந்த கருப்பொருள் கச்சேரிக்கு ஏற்ற நபர் வேறு யாராக இருக்கமுடியும்? கரஹரப்ரியா சிவனவர்களுக்கு மிகவும் பிடித்த ராகம். அதில் எத்தனையோ கீர்த்தனைகள் புனைந்திருந்தாலும், ‘கணபதியே கருணாநிதியே’ நல்ல எடுப்பான பாடல்! அதை கச்சிதமாகப் பாடி கச்சேரியைத் துவக்கிய அசோக், அடுத்து சாவேரி ராகத்தை நன்கு நிதானமாக, படிப்படியாக விவரித்து ‘கபாலி இருக்க’ என்ற கீர்த்தனையும் பாடினார்.
சற்றே துரிதமாக வாசஸ்பதியில் எம்.எஸ் குரலில் கேட்டு ரசித்த ‘பராத்பரா’ கீர்த்தனையில், நிரவலும், சுரங்களும் சிட்டையாக ‘அசோகா அல்வா’ மாதிரி அவ்வளவு பதமாக! தொடர்ந்த நடுநாயகக் கீர்த்தனையாக, ‘ஸ்ரீவிஸ்வநாதம் பஜே’ என்னும் பைரவி ராக உருப்படி. அசோக்கின் ராகம் பாதுஷா என்றால், நாகை ஸ்ரீராமின் தொடுப்பு ‘பாதாம் அல்வா’. அன்ன பூர்ணேஸ்வரி என்ற வரியில் மித நிரவல், சுரம், அளவான கணக்கு என்று நிறைவான இசைக்கு ஆரவாரம் தேவையில்லை என்பதை நிரூபித்தார் அசோக்.
மிருதங்கம், விஜய் நரேசன். பாட்டுக்கு எது அளவோ, அந்த அளவுக்கு வாசிப்பு. தனியும் சிறிதாக, ஆனால் சிறப்பாக! துக்கடாக்களாக வலஜியில் ‘பாதமே கதி’, ஸ்ரீராகத்தில் ‘அகிலாண்டேஸ்வரி’, காபியில் ‘ஈசன் அன்பர்’, பீம்ப்ளாஸில் என்றும் நெஞ்சில் நின்ற ‘மனமே கணமும்’, மத்தியமாவதியில் ‘கற்பகமே’ என்ற பாடல்களைப் பாடி ஒரு ஆரவாரமில்லாத, நிறைவான கச்சேரியைச் செய்தார் அசோக்! மயிலை ராகசுதா அரங்கில் பாரதி ராமசுப்பனின் கச்சேரி. பழமையையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் பாட்டு.
இரண்டு மணி நேர கச்சேரிக்கு எத்தனை உருப்படிகள் தேவையோ, அவ்வளவே! வெள்ளிக்கிழமை என்பதால் தீட்சிதரின் சுக்கிர பகவந்தம் கீர்த்தனையோடு துவங்கிய கச்சேரி, ஒரு தியான நிலையையே அரங்கில் கூட்டியது. தொடர்ந்த தோடி ராக ‘ராஜுவெடல’ கீர்த்தனையிலும், ராகம், கீர்த்தனை பாடிய கச்சிதம், கற்பனைச் சுரம் என்று எல்லாமே அளவும் அழகும் நிறைந்து ஒரு ஆழ்நிலை அனுபவமே!
உடனே உமாபரணத்தில் ‘நிஜமர்மமுலனு’ என்னும் கீர்த்தனை, அதிலிருந்து தட்டி எழுப்ப; தொடர்ந்து மனோரஞ்சிதமாக ஸ்ரீரஞ்சனி ராக ஆலாபனையும், அதில் ‘தும்துர்கே’ என்னும் கண்ட ஏக தாளத்தில் அமைந்த தீட்சிதர் கீர்த்தனையும் பாடி, திட்டமாக ‘ஸரஸ-மயே ஷட்-ஸமயே ஸமயே’வில் ரஞ்சகமாக நிரவல்-சுரம் பாடியது, இசையின் முதலும் முடிவுமான இறையின்பம் என்ற நோக்கையே இலக்காகக் கொண்டது!
பின்னால் வந்த ‘வழி மறைத்திருக்குதே’ என்னும் நந்தனார் சரித்திர கீர்த்தனையும், ‘பராகலே நன்னு’ என்னும் கேதார கௌளை கீர்த்தனையும் மீண்டும் ‘மென்னடை’ கீர்த்தனைகளே! ஆனால், கிளர்ச்சியே சற்றும் விரும்பாதவர்களுக்காகவே படைக்கப்பட்ட பத்திய சமையலாக அமைந்ததுபோன்ற கச்சேரிகள் சில பேருக்குத் தூக்கத்தை வரவழைத்துவிடும். பாரதி சிறிது கவனம் செலுத்தவேண்டும். இன்னும் சிறிது தாராளமாக தமிழ்க் கீர்த்தனைகளையும் சேர்த்திருக்கலாம்.
வயலின் வாசித்த திருவனந்தபுரம் சம்பத், மிகவும் நுணுக்கமாகத் தொடர்ந்தார். ரசனையோடு ராக வரைவுகளைச் செய்தார். எனக்குப் பின்னாலிருந்த ஒரு பிரபல வித்வானும், அவருடைய ஸ்ரீராக ஆலாபனைக்கு ‘ஆகா’காரத்தில் அவ்வப்போது மகிழ்ந்து கொண்டிருந்தார்! முன்னுக்கு வரவேண்டிய கலைஞர். என்.சி.பரத்வாஜ், அர்ப்பணிப்போடும், அக்கறையோடும் வாசிக்கக்கூடிய கலைஞர். நெற்குன்றத்தாரும் அவ்வாறே! பாட்டுக்கான வாசிப்பும், தனி வாசிப்பும் ‘என்னவோ தனி’ என்றிராமல், ‘என்ன தனி!’ என்று புருவத்தை மகிழ்ச்சியில் உயர வைத்தது!
படங்கள்: ஆ.வின்சென்ட் பால், ஏ.டி.தமிழ்வாணன்
|