வி.ஐ.பிகளின் வாட்ஸ் அப் சீக்ரெட்ஸ்!



செல்ஃபி கல்ச்சர் வந்த பிறகு வாட்ஸ்அப்பில் தினம் ஒரு போட்டோ அப்டேட் செய்வது வி.ஐ.பி.களுக்கு தவிர்க்க முடியாத ஹாபி. நாமளே இப்படி அட்ராசிட்டி பண்றோம்னா... வி.ஐ.பி.களின் வாட்ஸ்அப்னா சொல்லவா வேணும்? அல்லு பறக்குமே. அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட் அப்டேட்...

ஷங்கர்: வாட்ஸ்அப் கண்டுபிடித்த காலத்தில் இருந்து இருக்கிறார். சென்டிமென்ட்டாக ஒரே படம்தான் டி.பி. பிக்சர். நினைத்தால் பேசுவார். ஆனால்  குறுஞ்செய்தி கன்ஃபார்ம்.

சிவகார்த்திகேயன்: ‘பிரச்னையே இல்லாமல் வெறுமனே ஜெயிப்பவன் அடைவது விக்டரி. பிரச்னைகளைக் கடந்து ஜெயிப்பவன் படைப்பது ஹிஸ்டரி.’ இந்த ஹிட்லரின் வாசகத்தை அவர் படத்தோடு வைத்திருக்கிறார். ஆக, இந்த சமூகத்திற்கு முக்கியமான மெசேஜ் சொல்ல வர்றீங்க போல.

த்ரிஷா: பார்ட்டி, கொண்டாட்டம், செல்ல நாய்க்குட்டிகள், அம்மாவுடன் செல்ல செல்ஃபி... இதான் எப்பொழுதும் த்ரிஷாவின் டி.பி. தரிசனம். ‘21 days to kick a habit..?’ இதுதான் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ்.

வடிவேலு: ‘வாட்ஸ்அப்பில் வடிவேலா? அவருக்கு மெசேஜ் பண்ணத் தெரியுமா?’ என்றெல்லாம் ஓவரா நினைக்காதீங்க. எல்லாம் தெரியும். உங்கள் எண்ணை சேமித்திருந்தால் மட்டுமே மதுரைத்தமிழ் உண்டு.

நிக்கி கல்ரானி: மினி காஸ்ட்யூமில் மினி ஸ்டேட்டஸ் நிச்சயம். ‘carpe diem’ என்ற லத்தீன் வார்த்தை லவ் சிம்பளோடு! ‘அந்த நாளை அன்றே கொண்டாடு’ என்பதே அதன் அர்த்தம்.

ஜெயம் ரவி: ‘everything will be ok’ என வரிகள் மின்னுகின்றன. ஃபேன்ஸி நம்பர் வைத்துக்கொள்வதை விரும்பாதவர். ஹீரோயின்கள் போலவே அடிக்கடி நம்பர் மாற்றிவிடுவார்.

இயக்குநர் பாலா: அவருக்கா இஷ்டப்படணும். அப்பொழுதுதான் போன் எடுப்பார். வாய்ஸ் மெசேஜ், மெசேஜ் எதற்குமே மசிய மாட்டார். உங்களிடம் அவர் பேச விரும்பினால்... உங்கள் அலைபேசி நாட் ரீச்சபிளில் இருந்தால் கூட ரீச் பண்ணிவிடுவார்.

சந்தானம்: சிவதலங்கள், அம்மன், இயற்கை என டி.பி. பக்தியும் மணக்கும். ஹீரோ ஆன பிறகு பதில் வந்தால் அது எட்டாவது உலக அதிசயம்!

சமந்தா: மைல்ட் அட்டாக் வருவது போல கொஞ்சும் குரலில் பேசுவார். தெலுங்கு தேசத்து மருமகளாகப் போவதால், இப்போ பேச்சு கம்மி. உங்களைத் தெரிந்திருந்தால் மட்டுமே கலகல...

தயாரிப்பாளர் தாணு: ஃபேமிலி போட்டோதான் நீண்ட நாள் டி.பி. கண்டிப்பாக பதில் வரும்.

ஆர்யா: ‘ஸ்போர்ட்ஸ் இஸ் லைஃப்’... இதுவே ஆர்யா விடுக்கும் நற்செய்தி. அத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தும் பல வருடமாக ஒரே நம்பரை வைத்திருப்பது கின்னஸ் சாதனைகளில் அடங்கும்.

சமுத்திரக்கனி: ‘‘சொல்லுங்க சகோ’’ என பேச ஆரம்பிப்பார். கிராமத்துப் பிரியர். வில்லேஜ் லொகேஷன்களில் செல்ஃபி எடுப்பது பிடித்த ஹாபி. ஷூட்டிங்கில் தொடர்ந்து பிஸி என்பதால் பகலில் வேலையில் கவனம் செலுத்துவார். இரவுதான் பேசுவார்.

கார்த்தி: மனதில் தோன்றுவது எல்லாம் உடனே ஸ்டேட்டஸில் பிரதிபலிக்கும். கண்டிப்பாக பதில் அளிப்பார். பிகு கிடையாது.

சிவகுமார்: அவரது நட்பு வட்டத்தில் நாமும் இருந்தால் நம் ஆரோக்கியத்துக்கு ப்ளஸ். ஹெல்த், யோகா, உணவு என சூப்பர் டிப்ஸ் கிடைக்கும்.

மாதவன்: அவரது மொபைலில் சேர்த்து வைத்திருக்கும் கான்டக்ட் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருந்தால் கண்டிப்பாக பதில் கிடைக்கும். தொலைவில் (மும்பை) இருப்பதால் ரொம்ப சந்தோஷமாகப் பேசுவார்.

இளையராஜா: சின்னதான தன் நெருங்கிய நட்பு வட்டத்தினரிடம் மட்டுமே வாட்ஸ்அப்பில் ‘சாட்’டுவார் ராஜா. அவரது பதில்களில் ரொம்ப குறும்பு கொப்பளிக்கும் என்கிறது அவரது வட்டாரம்.

அசோகமித்திரன்: பகலில் எப்பொழுது வேண்டுமானாலும் பேசலாம். இரவு ஏழு மணிக்கு மேல் செல்லுக்கு தடா. மெல்லிய குரலில் அவர் பேசுவதைக் கூர்மையாகக் கேட்க வேண்டும். அவருக்கு நீங்கள் கேட்கும் விபரம் தெரிந்திருந்தால் புதியவர்களாக இருந்தாலும் பதிலுரைப்பார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த்: தினமும் டி.பி. மாத்துவது பிடிச்ச ஹாபி. நண்பர்களுக்கு மட்டுமே அவரது எண் தெரியும். மீடியாக்கள் தொடர்பு கொண்ட உடன், அடுத்த நிமிடம் அவரது உதவியாளர் நம் லைனுக்கு வருவார்.

லீனா மணிமேகலை: வெளிநாட்டில் இருந்தாலும் அதே நம்பரில் இருப்பார். டி.பி.யில் அந்த ஊரில் இருக்கும் பிக்சர் அலங்கரிக்கும்.

சசிகுமார்: யார் எஸ்.எம்.எஸ் செய்தாலும் கண்டிப்பாக பதில் வரும் அல்லது போன் வரும். சமீபத்தில் அவரது அப்பாவோடு சேர்ந்திருந்த புகைப்படத்திற்கு செம ரெஸ்பான்ஸ்.

எஸ்.ராமகிருஷ்ணன்: உடனே லைனுக்கு வந்துவிடுவார். கேட்டதற்கு பொறுமையாக, தெளிவாக பதிலளிப்பார்.

லிங்குசாமி: தியானம், யோகா தினமும் செய்ய அதிகாலையிலேயே எழுந்து விடுவதால், நம்மையும் எழுப்பி விட்டுவிடுவார். பட விபரங்களையும் பேசிவிட்டு நல்ல புத்தகங்களின் வருகையையும் தெரிந்துகொள்ள முடியும்.

ரவிவர்மன்: வெளிநாட்டில் இருந்தாலும் எளிதாகப் பிடித்துவிடலாம். மும்பை பிஸியிலும் தமிழ் சினிமா அப்டேட் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

ராகவா லாரன்ஸ்: இரண்டு எண்கள் வைத்திருக்கிறார். ஒன்றில் எப்போதும் ‘ராகவேந்திரா நமஹ’தான். இன்னொன்றில் குட்டி மகளின் விதவிதமான படங்கள்.

அனிருத்: சிவகார்த்திக்கு மட்டும்தான் ‘ஹலோ’. மத்தவங்களுக்கு ‘சலோ... சலோ...’

- நா.கதிர்வேலன், மை.பாரதிராஜா