பழசு!
-இரா.இரவிக்குமார்
தன் அப்பா, அம்மா, தங்கை எல்லோரிடமும் தான் கண்டுபிடித்த ஆட்டோமேடிக் காரை இயக்கிக் காண்பித்துக்கொண்டிருந்தான் வாசு. ‘‘இதை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி சாலையில் ஓடச்செய்யலாம். எதிரில் வரும் வாகனங்களின் வேகத்தையும் பாதையையும் காரில் பொருத்தப்பட்டிருக்கும் மினி ரேடார் கருவியின் மூலம் அறிந்து விலகி வளைந்து வேகத்தைக் கூட்டிக் குறைத்துக்கொள்ளும்.
 டிரைவரே தேவையில்லை! இப்படி சாலைகளில் ஓடும் எல்லா வாகனங்களையும் செட் செய்து கணினி மூலம் இயக்கினால் விபத்து என்பதை முழுமையாகத் தவிர்த்துவிடலாம்!’’ என்றான் வாசு. “அண்ணா... உண்மையிலே ஆட்டோமேடிக் கார் என்பது இதுதான். யு ஆர் கிரேட்!” என்றாள் தங்கை சுசீலா.
“டேய்... எல்லாத்தையும் பார்த்து திக்குமுக்காடி நிக்கேண்டா!” என்று பெருமிதத்துடன் சொன்னாள் அம்மா. அப்பா முகத்தில் சலனமில்லை. “டேய்! இது அப்பவே எங்க ஊர்ல வண்டி மாடுகள் செய்ததுடா. ஓட்டுறவன் தூங்கிட்டாலும் மாடுகள் போகிற இடத்துக்கு ஒழுங்கா போய்ச் சேர்ந்திடும். ஒரு தடவை ஒரு இடத்துக்குப் போனா மறுதடவை அந்த இடத்துக்கு தானே போயிடும். வழியில் வேறு எந்த வண்டி வந்தாலும் நின்னு நிதானமாகப் போகும்’’ என்றார் அப்பா. அந்த உதாரணத்தால் வாசு திகைத்து நின்றான்!
|