சிட்டுக்குருவிக்கு ஒரு சேதி!
சிட்டுக்குருவி... அழகின் அடையாளம்! அதைப்போல சுறுசுறுப்பான, மென்மையான, மிருதுவான, சுதந்திரமான பறவை வேறொன்றுமில்லை. கிராமத்து வீட்டின் சுண்ணாம்பு பூசப்பட்ட சுவரில் பதிக்கப்பட்டிருக்கும் கண்ணாடியில் கால் பதித்து, முகம் பார்க்கும் சிட்டுக்குருவிகள். விரிசல் விட்டிருக்கும் சுவர் இடுக்கில், தாழ்வார இறக்கத்தில் இருக்கும் அதன் கூடுகள். அது எங்கே போகிறது? எப்போது கூட்டுக்குத் திரும்புகிறது? எதையும் நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அதன் ‘கீச்...
 கீச்...’ இன்னிசையைக் கேட்டே தொட்டிலில் உறங்கின குழந்தைகள். சிட்டுக்குருவியைக் காட்டிக்கொண்டே அழுகின்ற குழந்தைகளுக்கு சோறு ஊட்டினார்கள் நம் தாய்மார்கள்... அந்தக் காலம் எல்லாம் காற்றோடு கரைந்துவிட்டது. கான்க்ரீட் கலவையால் காற்றுகூட நுழைய முடியாமல் மாநகரங்கள் அபார்ட்மென்ட்டுகளால் சூழ்ந்திருக்கின்றன. இப்போது சிட்டுக்குருவிகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் அவரின் நண்பர்கள், எஞ்சியிருக்கும் சிட்டுக்குருவிகளைக் காப்பாற்றுவதற்காகத் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார்கள்.
“காலேஜ் புராஜெக்ட்டுக்காக சிட்டுக்குருவிகளைக் கணக்கெடுக்கத்துவங்கினோம். ஆரம்பத்துல பெரிசா எந்த ஈடுபாடும் வரலை. சிட்டுக்குருவிகளைப் பார்க்கப் பார்க்க எங்களை அறியாமலே ஒருவித உற்சாகம் வந்துச்சு. மனுஷங்க கூட ரொம்ப ஃப்ரண்ட்லியா இருக்கற ஒரே பறவை என்றால், அது சிட்டுக்குருவிதான். ஆனா இன்னைக்கு அது வந்து தங்க பாதுகாப்பான இடம் இங்க இல்லை; அது சாப்பிடத் தேவையான தானியங்கள் எதுவும் இங்க இல்லை.
 எல்லாப் பக்கமும் செல்போன் டவரும், அபார்ட்மென்ட்டுகளும் வந்துடுச்சு. ஓட்டு வீடுகளே இல்லை. இருந்த மரங்களையும் வெட்டிட்டாங்க. மிச்சம் இருந்த மரங்களும் இப்ப புயல்ல காணாமப் போயிடுச்சு. அதனால நல்ல காத்தும் இல்ல. இப்படிப்பட்ட சூழல்ல சிட்டுக்குருவிங்க ஊருக்குள்ள வர்றதே இல்ல. 80 சதவீதம் சிட்டுக்குருவிகள் அழிஞ்சு போச்சுன்னு சொல்றாங்க. மீதியிருக்கற கொஞ்சத்தையாவது காப்பாத்தணும்னு தோணுச்சு. இதைப்பத்தி தேடிப் போனபோதுதான் மரப் பெட்டிகளை வச்சா சிட்டுக்குருவிகள் வந்து தங்கும்னு தெரிஞ்சது.
நாங்க சிட்டுக்குருவிகளை கணக்கெடுப்பதைப் பாத்து, அது வந்து தங்குவதற்காக பெட்டி வைக்கிற புராஜெக்ட்டும் எங்களுக்கு கிடைச்சது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு 100 பெட்டி வைக்க நிதி உதவியும் செஞ்சாங்க. காலேஜ் முடிஞ்ச பிறகும் எங்களுக்கு இதை விடுவதற்கு மனசு வரலை. நாங்களாவே செலவு பண்ணி இப்ப செய்திட்டு இருக்கோம்’’ என்கிறார் சஞ்சய். கை நிறைய சம்பளம் வாங்கிக்கொண்டு வாழ்க்கையில் கரைந்துவிடும் மனிதர்கள் நடுவே ஒரு சின்னஞ்சிறிய பறவைக்காக நேரம், பணம், உழைப்பு என எல்லாவற்றையும் ஒதுக்கி அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்கின்ற சஞ்சய் குழுவினர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
‘‘வெள்ளிக்கிழமையே சனி, ஞாயிறுக்கான வேலைகளை அட்டவணைப்படுத்தி வச்சிக்குவோம். பார்க்கப் போற நகரத்தோட பகுதிகளைப் பிரிச்சுப்போம். குருவிகள் நடமாட்டம் எங்க அதிகமாக இருக்கும்னு முதல்ல கணக்கெடுப்போம். அப்புறம் எங்களுடைய குருவிப் பெட்டியைக் கொண்டு போய் வைக்கிறதுக்கு அந்த ஏரியா மக்கள்கிட்ட அனுமதி கேட்போம். ஆரம்பத்துல எங்கள் மேல நம்பிக்கை இல்லாம விரட்டிக்கூட விட்டிருக்காங்க. விஷயத்தை சொல்லலாம்னா கதவைக் கூட திறக்க மாட்டாங்க.
ஆனால் இப்போ நிலைமை மாறிடுச்சு. ஃபேஸ்புக், ட்விட்டர் வந்த பிறகு மக்களுக்கு சிட்டுக்குருவிகள் மேல ஆர்வம் வந்திருக்கு. அவங்களே ‘எங்க பகுதிகள்ல குருவி இருக்கு, பெட்டி வையுங்க’ன்னு கேட்கிறாங்க. ஒரு பெட்டிக்கு 150 ரூபாய் செலவாகும், ஆனால் நாங்க யார்கிட்டயும் பணம் வாங்கறது இல்லை. ‘உங்க வீட்டுப் பக்கத்துல குருவிகள் இருந்தால் எங்களுக்கு சொல்லுங்க’ன்னு போன் நம்பரை கொடுத்துடுவோம்.
அப்படியே ‘உங்க வீட்டு தாழ்வாரம், மேல் கூரைப் பகுதிகள்ல குட்டி இடம் கொடுத்தா போதும்’னு சொல்லிடுவோம். குருவிப் பெட்டியை வைத்துவிட்டு, ‘குருவி வருகிறதா அல்லது ஏதேனும் மாற்றம் வேண்டுமா’ என அவ்வப்போது போனில் கேட்போம். இப்படித்தான் எங்களோட பயணம் ஒவ்வொரு வாரமும் சென்று கொண்டிருக்கிறது’’ என்று முடித்தார் சஞ்சய்.
- ஷாலினி நியூட்டன் படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
‘‘செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிந்துவருகின்றன என்கிறார்கள். அது நிரூபணம் ஆகவில்லை. குருவிகள் பொதுவாக அழிந்ததற்கு முக்கிய காரணம், பெருகும் கான்க்ரீட் வீடுகள்தான். முன்பெல்லாம் ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் என குருவிகள் தங்கும். இப்போது நாம் கட்டும் வீடுகளில் குருவிகள் வந்து தங்க ஏதுவான இடம் இல்லை.
சின்னச் சின்ன பொந்துகள், மேல் துவாரங்கள் என இனியேனும் பொறியாளர்கள் தாங்கள் கட்டும் வீடுகளில் சிட்டுக்குருவிக்கான இடத்தைப் பொருத்தினால், இந்தச் சிறு ஜீவன்கள் நம் வீடு தேடி வரும். மேலும் சிட்டுக்குருவிகள் தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என நினைப்பவர்கள் சின்ன துளை பொருத்திய பெட்டி ஒன்று, வீட்டில் சின்னச்சின்ன செடிகள், அருகில் தானியங்கள் சிறிது வைத்தாலே போதும். முதலில் தயங்கித் தயங்கி வரும் குருவிகள், பின்னர் நிரந்தரமாக வந்து தங்கி விடும்.’’
- ‘ஓசை’ காளிதாஸ்
|