விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 7

‘‘வாடா பரதேசி...’’ மகிழ்ச்சியும் அணைப்புமாக கிருஷ் என்கிற கிருஷ்ணனை வரவேற்றாள் ஐஸ்வர்யா. பள்ளி, கல்லூரிக் கால நண்பன். பால்யம் முதல் தோழன். பகிர்ந்து கொள்ளாத செய்தியில்லை. பேசாத விஷயமில்லை. சுற்றாத இடமில்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்றவன் இப்போதுதான் சென்னையில் கால் பதிக்கிறான். ‘‘கொஞ்சம் சதை போட்டிருக்க...’’ தலையில் வருடிய கிருஷ்ஷின் விரல்கள் அவள் தோளை இறுக்கின.

‘‘ஆக்வர்டா தெரியலையே..?’’ கண்சிமிட்டினாள். ‘‘நோ. சொல்லப்போனா இன்னும் அழகாயிருக்க...’’ ‘‘தேங்க்யூ... பட், நீதான் என்னை ஏமாத்திட்ட. தொந்தி விழுந்திருக்கும்னு நினைச்சேன்...’’ சிரித்தாள். சிரித்தான். சிரித்தார்கள். முப்பது நிமிடங்களுக்குமுன் விழித்துக் கொண்ட ஐஸ்வர்யாவின் புத்தி, இருந்த இடம் தெரியாமல் இப்போது மறைந்திருந்தது. டொமஸ்டிக் டெர்மினல்ஸை விட்டு வெளியே வந்தார்கள். சாலைகளில் கார்கள் விர்ரின. எச்சரிக்கையுடன் கைகோர்த்தபடி தார்ச்சாலையை கடந்து சுருள்வட்ட இரும்பு படிக்கட்டுப் பக்கம்
வந்தார்கள்.

‘‘மீனம்பாக்கம் ஏர்போர்ட்டா இது... நிஜமாவே இது புது சென்னை...’’ வியந்தபடி ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து இறங்கினான். கார் பார்க்கிங்கை அடைந்ததும் கீ செயினால் இன்டிகேட்டரை எரிய விட்டு தன் வாகனத்தை அடையாளம் காட்டினாள். ‘‘சின்ன வயசுல தினமும் அனுமார் படத்துக்கு சந்தனப் பொட்டை நீ வைச்சப்பவே தெரியும்... பின்னாடி மாருதி கார்தான் வாங்குவன்னு...’’ ‘‘போடாங்க...’’ டிரைவர் சீட்டில் அமர்ந்த ஐஸ்வர்யா சீட் பெல்ட்டை இழுத்து மாட்டினாள்.

பின் சீட்டில் தன் லக்கேஜை வீசிவிட்டு முன்பக்கம் கிருஷ் அமர்ந்தான். ‘‘நேரா திருச்சி போ...’’ ‘‘ஏய்... எனக்கு ஆபீஸ் இருக்கு...’’ வரிசையை விட்டு கச்சிதமாக காரை வெளியில் கொண்டு வந்தாள். ‘‘ரிசைன் பண்ணு...’’ ‘‘பண்ணிட்டு..?’’ ‘‘என் கன்சர்ன்ல பார்ட்னரா சேர்ந்துடு...’’ ‘‘இதோடா... என்ன செமத்தியா ஆர்டர் பிடிச்சுட்டு வந்திருக்கியா..?’’ ‘‘ம்...’’ ‘‘எல்லாமே மல்டி நேஷனல் கம்பெனியா..?’’ ‘‘ஆமா...’’ ‘‘கோடிங்தானே?’’ ‘‘பிரேக்கிங் கோட்ஸ்...’’ ‘‘ஐ ஸீ... பிரேக் பண்ணி எதை கண்டுபிடிக்கணும்..?’’ ‘‘அர்ஜுனனோட வில்!’’

குலுக்கலுடன் வண்டி நின்றது. குறுக்கே வந்த நாய் தன் வாலை ஆட்டிவிட்டு நகர்ந்தது. ‘‘ஆர் யூ சீரியஸ்..?’’ புருவங்கள் முடிச்சிட காரை மீண்டும் ஸ்டார்ட் செய்தாள். ‘‘பின்ன காமெடிக்கா சென்னை வந்திருக்கேன்? ஐஸ்... ஐஸ்... ரைட்ல திருப்பு...’’ ‘‘டிரஸ் வேணும்டா...’’ ‘‘வழில வாங்கிக்கலாம்...’’ பதில் பேசாமல் மேம்பால வயிற்றினுள் நுழைந்து தாம்பரம் பக்கம் வந்தாள். சீரான வேகத்தில் கார் செல்லத் தொடங்கியது. ‘‘எப்ப இந்த ஐடியா வந்தது..?’’ ஐஸ்வர்யாவின் பார்வை சாலையில் இருந்தது. ‘‘ ‘KVQJUFS’ பத்தி நீ சொன்னதும்...’’ ‘‘அதுல என்ன இருக்கு?’’

‘‘எல்லாமே...’’ ஏசியை அணைத்துவிட்டு தன் பக்க கண்ணாடியை இறக்கிய கிருஷ், சிகரெட்டை பற்ற வைத்தான். ‘‘புரியும்படியா சொல்லு...’’ ‘‘விளக்கமே தரேன். அப்பதான் இனி நாம என்ன செய்யப் போறோம்னு தெளிவா புரியும்...’’ கட்டை விரலால் சாம்பலை சுண்டியவன் அவள் பக்கம் திரும்பினான். ‘‘இப்போதைய உலகம் கிரிப்டோகிராஃபி அலைஸ் கிரிப்டாலஜிக்கு சொந்தம். ‘ரகசியம்...’, ‘மறைந்துள்ள...’ அப்படீங்கிற கிரேக்க சொல்லான ‘கிரிப்டோ’லேந்து பூத்த வார்த்தை இது...’’

‘‘டேய்... ஏபிசிடி-லேந்து ஆரம்பிக்காதடா. நானும் கிரிப்டாலஜி படிச்சவதான்...’’ ‘‘குறுக்க பேசாத ஐஸ்... அப்புறம் மனப்பாடம் செஞ்சதெல்லாம் மறந்துடும்!’’ சொன்னவனின் தலையில் குட்டினாள். ‘‘சரி ஒப்பி, கேட்டுத் தொலையறேன்...’’ ‘‘அதனாலதான் மூன்றாம் உலகப் போர்னு ஒண்ணு வந்தா அது கணித மேதைகளால்தான் வரும்னு சொல்றாங்க. முதல் உலகப் போரை மொத்தமா வேதியியல் ஆக்கிரமிச்சிடுச்சு. க்ளோரின், மஸ்டர்ட் கேஸ் எல்லாம் அப்பதான் பயன்படுத்தப்பட்டது. ஆனா, இரண்டாம் உலகப் போரை இயற்பியல் ஹைஜாக் செய்துடுச்சு. ஆட்டம்பாம் அதனோட கோர முகம்...’’ ‘‘ம்...’’

‘‘இன்னிக்கி கணிதம்தான் உலகை ஆளுது. இதோ சிக்னல்ல நாம நிக்கறோம். ஏன்? சிவப்பு விளக்கு எரியறதுனால. பச்சை விழுந்தாதான் நாம போகணும். இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை முடிவு செய்யறது யார்? செகண்ட்ஸ்! இது வெறும் சாம்பிள்தான். ஆழமா யோசிச்சுப் பார்த்தா நம்மோட ஒவ்வொரு அசைவும் நடவடிக்கையும் மேத்ஸோட சம்பந்தப்பட்டிருக்கறது புரியும். குறிப்பா கம்ப்யூட்டரோட. இணையம் இல்லாம இந்த நிமிஷம் எந்தப் பரிவர்த்தனையும் இல்ல.

அதனாலதான் கிரிப்டாலஜி துறைக்கு வேல்யூ அதிகமா இருக்கு. எந்த அளவுக்கு கோடிங் வழியா பூட்டி வைக்கிறோமோ அந்த அளவுக்கு பிரேக்கிங் வழியா அதை ஹேக்கர்ஸ் திறக்கவும் செய்யறாங்க... ரகசியங்களை கசிய விடறாங்க. ‘விக்கிலீக்ஸ், லெஜியன்...’ குரூப் எல்லாம் இப்படித்தான் விஷயங்களை வெளிப்படுத்தி உண்மையை வெளில கொண்டு வர்றாங்க...’’ ‘‘ஆனா, ராணுவ ரகசியங்களை பாதுகாக்கவும் கடத்தவும் உருவாக்கப்பட்டதுதானே கிரிப்டாலஜி?’’

‘‘இதுலயே பதிலும் அடங்கியிருக்கு ஐஸ்... ஏன்னா, அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்காக கண்டுபிடிச்சதுதான் இணையமே! அது எப்ப செல்போனுக்குள்ள வந்துச்சோ... இன்டர்நெட் பயன்பாடு எப்ப உசிலம்பட்டிக்குள்ளயும் ஊடுருவிச்சோ... அப்பவே கிரிப்டாலஜி பிடிக்குள்ள ஈரேழு உலகமும் வந்தாச்சு. ஆனா, உன் கேள்வி தப்பு...’’ ‘‘புரியலை?’’ ‘‘ராணுவ ரகசியங்களை பாதுகாக்கத்தான் கிரிப்டாலஜியை கண்டுபிடிச்சாங்கன்னு சொல்ற இல்லையா... இட்ஸ் ராங்...’’ ‘‘தென்..?’’

‘‘மனுஷன் சிந்திக்க ஆரம்பிச்சு தகவல்களைப் பரிமாறத் தொடங்கினப்பவே கிரிப்டாலஜியும் புழக்கத்துக்கு வந்தாச்சு. கற்கால மனிதர்கள் காலத்து குகை ஓவியங்கள் இதைத்தான் உணர்த்துது. தான் பார்த்தது, கேட்டது, அனுபவித்தது, உணர்ந்தது... எல்லாத்தையும் ஓவியமா வரைஞ்சு வைச்சிருக்காங்க. கோடிங்கோட எலிமென்டரி லெவல் இதுதான்...’’
‘‘குட் அப்சர்வேஷன்...’’

‘‘தேங்க்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட்...’’ தலையை சாய்த்து அதை ஏற்ற கிருஷ், அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தான். ‘‘இப்படி ரூம் போட்டு யோசிச்சப்பதான் திடீர்னு ஒருநாள் பல்பு எரிஞ்சது. ஆதி மனிதனே இப்படி கிரிப்டாலஜியை யூஸ் பண்ணினப்ப... எழுத, படிக்க ஆரம்பிச்ச மனுஷன் அடுத்த லெவலுக்கு போயிருக்கணுமே..? தேடினேன். ஆன்சர் கிடைச்சது...’’ ‘‘யார் மூலமா?’’

‘‘W.Caland வழியா. 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நெதர்லாந்துக்காரர், ‘பஞ்ச விம்சாதி பிராம்மணா’ங்கிற சம்ஸ்கிருத நூலை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்கார். மொத்தம் 25 சாப்டர்ஸ். இந்த புத்தகத்துல ‘The world of heaven is as far removed from this world as thousand GAU stacked one above the other...’னு ஒரு வாசகம் வருது. இதுக்கு ‘நம் பூமி, வானுலகில் இருந்து ஆயிரம் பசுக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த தொலைவை உடையது’னு அர்த்தம்...’’

‘‘வாட் நான்சென்ஸ்...’’ ஸ்டியரிங் வீலை அசைத்தபடியே ஐஸ்வர்யா தோளைக் குலுக்கினாள். ‘‘கரெக்ட். இதே சந்தேகம்தான் எனக்கும் வந்தது. இவ்வளவு மாக்காணுங்களா நம்ம முன்னோர்கள் இருக்க மாட்டாங்களேன்னு தோணிச்சு. இங்கிலீஷ் டிரான்ஸ்லேஷனை விட்டுட்டு சமஸ்கிருதத்துல என்ன எழுதியிருக்குன்னு பார்த்தேன். அதே, ‘GAU’தான். ஆனா, இந்த ‘GAU’ங்கிற சமஸ்கிருத சொல்லுக்கு பசு / பூமின்னு ரெண்டு அர்த்தம் இருக்கு...’’

சட்டென்று காரை ஓரம் கட்டினாள் ஐஸ்வர்யா. ‘‘அப்ப, ‘பஞ்ச விம்சாதி பிராம்மணா’ நூல்ல பூமியைத்தான் குறிப்பிட்டிருக்காங்களா?’’ ‘‘யெஸ். இப்ப மீனிங்கை பாரு. ‘நம் பூமி, வானுலகில் இருந்து ஆயிரம் பூமிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்த தொலைவை உடையது’. புரியுதா? வானுலகம்னு அந்த நூல்ல சொல்றது நம்ம சூரியனை. தட் மீன்ஸ்... சூரியனுக்கும் பூமிக்கும் இடைல இருக்கிற தூரம் ஆயிரம் புவி விட்டத்தைக் கொண்ட தொலைவுக்குச் சமம்...’’

‘‘மை காட்...’’ ‘‘சயின்ஸ் என்ன சொல்லுது? கிட்டத்தட்ட 11,765 மடங்கு புவியின் விட்டத்துக்கு சமமான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடைல இருக்குன்னு. இதுபடி பார்த்தா அந்த சமஸ்கிருத நூல்ல சொல்லப்பட்ட மதிப்புல 11.765 சதவீதம் ராங். இதுவே பூமியோட விட்டத்துக்கு பதிலா அதனோட ஆரத்தை கணக்குல கொண்டா... நிஜத்துக்கும் புத்தகத்துல சொல்லப்பட்ட மதிப்புக்கும் இடையிலான பிழை வெறும் 5.88 சதவீதம்தான்.

எந்த தொழில்நுட்பக் கருவியும் இல்லாம அந்தக் காலத்துலயே பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை வெறும் பார்வையாலயே அளந்திருக்காங்கன்னு நினைக்கிறப்ப பிரமிப்பா இருக்கு. முக்கியமா ‘பூமி உருண்டை’னு விஞ்ஞானிங்க சொன்னது சில நூற்றாண்டுகளுக்கு முன்னாடிதான். ஆனா, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே நம்ம முன்னோர்கள் அதை சொல்லிட்டாங்க...’’ ‘‘அப்ப எல்லா சமஸ்கிருத ஸ்லோகமும் இப்படி வேற எதையோ குறிப்பால உணர்த்து துன்னு சொல்ல வர்றியா?’’

‘‘எக்ஸாக்ட்லி. சின்ன திருத்தத்தோட. ஸ்லோகம்னு சொல்ற பார்த்தியா... அதை மட்டும் ஏத்துக்கலை. அன்னிக்கி சமஸ்கிருத மொழி புழக்கத்துல இருந்தது. ஸோ, தாங்கள் உணர்ந்ததை, ரசிச்சதை, கண்டுபிடிச்சதை அந்த லேங்வேஜுல எழுதினாங்க. உடனே அதை எல்லாம் கடவுள் சொன்னதுன்னு சொல்லிடறதா? ஹம்பக். இந்த புரிதலோட ஐன்ஸ்டீன் சொன்னதை பொருத்திப் பாரு...’’

‘‘அப்படியென்ன சொல்லிருக்கார்?’’ ‘‘தத்தி. எக்சாமுக்காக மக்கப் பண்ணினா இப்படித்தான்...’’ ‘‘சரிடா... முதல்ல அவர் என்ன சொன்னார்னு சொல்லு...’’ ‘‘ ‘எனது அறிவியல் சிந்தனைகளை எழுச்சியூட்டுவது பகவத் கீதைதான். அதுவே எனது அறிவியல் கோட்பாடுகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது...’ இது மட்டுமில்ல. இன்னொண்ணும் குறிப்பிட்டிருக்கார்... ‘இந்தியர்களே நமக்கு எண்ணும் முறையை கற்றுக் கொடுத்தவர்கள்.

அவர்களது இந்தப் பங்களிப்பு இல்லையென்றால் இன்று உலகில் அறிவியல் முன்னேற்றம் அடைய வாய்ப்பில்லை. அவர்களுக்கு நாம் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறோம்...’ இதெல்லாம் சொன்னது யாரு? உலக ஃபேமஸ் சயின்டிஸ்ட்டான ஐன்ஸ்டீன்...’’ ‘‘அதாவது சமஸ்கிருத செய்யுள் Codes. அதை நாம பிரேக் பண்ணலாம்னு சொல்ற...’’ ‘‘சமத்து. கப்புனு புடிச்சுட்ட. அதேதான். இதை புதுசா நாம கண்டுபிடிக்கலை. நம்ம முன்னோர்களே சமஸ்கிருத ஸ்கிரிப்ட்டை பிரேக் பண்ண ‘கடப்பாயாதி சங்க்யா’ (Katapayadi Sankhya) முறை உதவும்னு சொல்லியிருக்காங்க.

கி.பி.683ல ஹரிதத்தா இந்த வழியை பகிரங்கமா அறிவிச்சிருக்கார். அதாவது எல்லா சமஸ்கிருத சொற்களாலான தொடர்களையும் எண்களா மாத்தறது. இதுக்காக ‘க  ட  பா  யா’னு நாலு குழுவா பிரிச்சு எல்லா சமஸ்கிருத ஆல்ஃப பெட்ஸையும் அதுக்குள்ள அடக்குவது. கர்நாடக சங்கீதத்துல மேள கர்த்தா ராகத்தை அறிய இந்த முறைதான் பயன்படுது. இதை யூஸ் பண்ணிதான் அர்ஜுனனோட வில் எங்க இருக்குன்னு நாம கண்டுபிடிக்கப் போறோம்.

எல்லா நெருப்பும் ஒரு பொறியிலேந்துதான் தொடங்குது. அப்படி தாராவோட முட்டைல எழுதப்பட்ட ‘KVQJUFS’ இது எல்லாத்துக்குமான தொடக்கம்...’’ ‘‘வெயிட்... வெயிட்... வெயிட்...’’ பேசிக்கொண்டே சென்ற கிருஷ்ஷை நிறுத்தினாள். ‘‘ என்ன சொன்ன... ‘கடப்பாயாதி சங்க்யா’வா..? இதை வைச்சு ஒரு செய்யுளை பிரேக் பண்ண முடியுமா?’’ ‘‘ஓரளவுக்கு. ஏன் கேட்கற?’’

‘‘சொல்றேன். அதுக்கு முன்னாடி ‘நவகிரகமும் எட்டு திசையில் நான்கு மூலையில் ஒன்றுமில்லை நவரத்தினமும் ஒன்றுமில்லை அதிசயமே உலகம் திரிசூலமே நான்காவது லூகாஸ் பஞ்சபூதம்...’ இதுக்கு அர்த்தத்தை கண்டுபிடி...’’ ‘‘ப்பூ. ரொம்ப சிம்பிளாச்சே! நவகிரகம்னா 9... எட்டு திசைனா 8... அப்புறம் 4... ஒன்றுமில்லைனா சைபர்... நவரத்தினம்?

சேம் 9. அதே பூஜ்யம். ‘அதிசயமே உலகம்...’ 7 அதிசயங்கள். திரிசூலம் மூணு... லூகாஸ் கணிதத்தோட சம்பந்தப்பட்ட 7. பஞ்ச பூதம் 5. இதை வரிசையா சேர்த்தா நம்பர் வருது. 9840907375...’’ கிருஷ் சொல்லி முடிப்பதற்குள் தன் செல்போனில் அந்த எண்ணை டயல் செய்த ஐஸ்வர்யா, ‘‘ஹலோ...’’ என மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டு அதிர்ந்தாள். காரணம், அது தாராவின் குரல்!

(தொடரும்)  

ஓவியம்: ஸ்யாம்