புது வருஷம் ரொம்ப பிரைட்!
ஜிலீர் பளீர் தன்ஷிகா
‘‘இந்த வருஷம் ரொம்ப பிரைட். நல்ல மனிதர்களின் நட்பு, ‘கபாலி’ ஜாக்பாட்னு நல்ல விஷயங்கள் நிறைய நடந்துச்சு. ரஜினி சாரோட நடிச்சதுல லைஃப்டைம் ட்ரீம் நிறைவேறிடுச்சு. அடுத்த வருஷமும் நான் பிஸி...’’ - புது வருஷத்தை வரவேற்கத் தயாராகிறார் தன்ஷிகா.
 ‘‘2017ல ‘விழித்திரு’, ‘கிட்ணா’, ‘உரு’, ‘ராணி’, ‘காத்தாடி’, ‘காலகூத்து’னு வரிசையா நான் நடிச்ச படங்கள் ரிலீஸாகக் காத்திருக்கு. புது வருஷத்துக்கு ஒரு ஹேப்பி வெல்கம். ‘விழித்திரு’வில் முதன்முதலா காமெடி முயற்சி பண்ணியிருக்கேன். எங்கூட தம்பிராமையா, விதார்த் காம்பினேஷன் இன்னும் அருமையா இருக்கும். படத்தோட ஷூட்டிங் எல்லாமே ராத்திரிதான் நடந்துச்சு. நல்ல அனுபவம். ‘கிட்ணா’ல கிராமத்து மண் மணக்குற கேரக்டர்.
அதுவும் சமுத்திரக்கனி சார் கூட நடிக்கறது இன்னும் சேலஞ்ச். சார் தேசிய விருதெல்லாம் வாங்கிட்டு வந்த பின்னாடி நடிப்பில் ரொம்ப கவனம் செலுத்துறார். அந்தப் படத்துக்காக அடர்த்தியா வச்சிருந்த கூந்தலைத்தான் ‘கபாலி’க்காக கட் பண்ண வேண்டியதாயிடுச்சு. அடுத்து நடிக்கற ‘உரு’ ஷூட்டிங் கொடைக்கானலில் போகுது. கலையரசன் ஹீரோ. அதுல எனக்கு நல்ல ரோல். என் அதிர்ஷ்டம்... தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமா அமையுது. அந்த வகையில ‘ராணி’, ‘காலகூத்து’ ரெண்டுமே இன்னும் பேசப்படும்.’’
‘‘இன்னமும் சிலம்பம் ப்ராக்டீஸ் பண்றீங்களா?’’ ‘‘ரெகுலரா இல்ல. ஆனா, டைம் கிடைக்கும்போது சிலம்பம் ஆடுவேன். சின்ன வயசில இருந்தே எனக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம். ஷட்டில், கிரிக்கெட் விளையாடுவேன். பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஜிம்னாஸ்டிக், ஆக்ஷன்னு நிறைய கத்துக்கிட்டேன். எப்பொழுதும் உடற்பயிற்சியில கவனமா இருப்பேன். ‘உணவுல கட்டுப்பாடு... ஒரு நாள் கூட இடைவெளி விடாத பயிற்சி’ன்னு சின்ஸியரா இருக்கறேன். இப்படி ஒருநாள் கிரவுண்ட்ல சிலம்பம் சுத்திட்டு இருக்கறதைப் பார்த்துட்டுதான் ‘காத்தாடி’ கிடைச்சது. லேட்டஸ்டா, யோகாவில் ஆர்வம் கூடிட்டே இருக்கு!’’
‘‘தமிழ்ப் பொண்ணுங்களுக்கு தமிழ் சினிமாவுல வாய்ப்பு கிடைக்கறது அரிதாச்சே?’’ ‘‘கடவுளுக்கு நன்றி. எனக்கு அப்படி ஒரு குறையில்ல. சான்ஸ் கிடைக்கறதும், கிடைச்ச வாய்ப்பை நிலைநிறுத்திக்கறதும் இங்கே சவாலான விஷயம். ஏகப்பட்ட திறமைகள் இங்க கொட்டிக் கிடக்கு. கடின உழைப்போட எதிர்நீச்சல் போட்டால்தான் யாராலேயும் தாக்குப் பிடிக்க முடியும். இங்க தமிழ்ப் பொண்ணுங்களுக்கு மட்டும் சரியான வாய்ப்பு அமையலைன்னு குறை சொல்ல மாட்டேன். எனக்குன்னு இங்கே ஒரு இடம் கிடைச்சிருக்கு. எனக்கும் நம்பிக்கையும் வந்திருக்கு. ‘கபாலி’ மாதிரி பெரிய படங்களும் எனக்கு வந்தது நிறைவா இருக்கு.’’
‘‘500, 1000 நோட்டுகளை எல்லாம் என்ன பண்ணுனீங்க தன்ஷிகா?’’ ‘‘காமெடிய்ய்ய்ய்..? ஆனா எனக்கென்னவோ இது நல்ல விஷயமா தோணுது. ஆனா, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் ஜனங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நிச்சயம் அதைத் தவிர்த்து இருக்கலாம். மிடில் கிளாஸுக்கு வழிமுறை தெரியும். பாவம், ஏழை மக்கள். கொஞ்சம் அவங்க மீதான கருணையோடு பிளான் பண்ணியிருக்கலாம்.’’
‘‘எப்போ கல்யாணம்..?’’ ‘‘நல்லாத்தானே பேசிட்டிருந்தீங்க. திடீர்னு இப்படிக் கேட்டா எப்படி? கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே இல்லை. நடக்க வேண்டிய டைம்ல கண்டிப்பா நடக்கும். ஆனா, அது நடந்தா நிச்சயம் லவ் மேரேஜ்தான். இப்ப செல்லப் பிராணிகள் வளர்த்திட்டிருக்கேன். தெரு நாய்கள் நிறைய வளர்க்கணும்னு ஆசையா இருக்கு. அதுக்கொரு இல்லம் அமைக்கணும்னு நினைப்பு இருக்கு. அப்புறம், ஒரு வேல்ர்டு டூர் அடிக்கணும்ங்கறது மனசுக்குள்ள இருக்கற ரொம்ப நாள் ஆசை. சாய்ராம் அருளால இதெல்லாம் நடக்கும்னு நம்புறேன்.’’
- மை.பாரதிராஜா
|