வேலை
-தங்க.நாகேந்திரன்
போன் ஒலிக்க, எடுத்தாள் குணநிறைச்செல்வி என்னும் குணா. எதிர்முனையில் தோழி இந்திரா. “வாழ்த்துக்கள்டி... உனக்கு வி.ஏ.ஓ. வேலை கிடைச்சிடுச்சின்னு கேள்விப்பட்டேன். ஒரு தகவல் சொன்னியா? இப்பதான் மலர் போன் பண்ணி சொன்னா. நம்ம செட்டுலயே கவர்ன்மென்ட் வேலை வாங்கின முதல் ஆள். கொடுத்து வச்சவடி’’ - குதூகலித்தாள் இந்திரா. “தேங்க்ஸ்டி...’’ ‘‘வெறும் தேங்க்ஸ்தானா? நம்ம குரூப்ல எல்லாருக்கும் நீ பார்ட்டி வைக்கணும்... இன்னிக்கே! ‘காசு இல்ல, முதல் சம்பளம் வாங்கித்தான்’னு சொல்லக்கூடாது. நான் செலவு பண்றேன்... சம்பளம் வாங்கி நீ கொடுத்தா போதும்!’’
 “சரிடி...” என்றாள் குணா தயக்கத்தோடு. ஜாலியாய் அரட்டையடித்து சாப்பிட்டதில் நேரம் போனதே தெரியவில்லை. அனைவரும் விடைபெற்றதும் குணாவை உற்றுப் பார்த்தபடி இந்திரா கேட்டாள். ‘‘என்னடி... வேலைக்குப் போன சந்தோஷம் உன் முகத்துல சுத்தமா இல்லையே! பார்ட்டியே ஏதோ வேண்டாவெறுப்பா எங்களுக்காக வச்ச மாதிரி தெரியுது?’’
சோகமாக குணா சொன்னாள்... ‘‘எங்க குடும்ப நிலைமை உனக்கே தெரியும். தங்கச்சி பிளஸ் 2 படிக்கிறா. தம்பி டென்த் படிக்கிறான்... இவங்களை கரையேத்தணும். இனிமே குடும்பத்தில எல்லா நல்லது கெட்டதும் என் தலையிலதான் விடியும். எல்லாம் முடிக்கறதுக்குள்ள எனக்கு முப்பது வயசாயிடும். என்னோட வாழ்க்கைங்கறது அதுக்கு அப்புறம்தான்டி! இதுல எப்படி சந்தோஷப்பட முடியும்?”
|