மரியாதை



-மலர்மதி

அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துவிட்டுத் திரும்பிய மகன் மனோவை முதல்முறையாகத் தங்கள் தொழிற்சாலைக்கு அழைத்துப் போனார் முத்தரசன். அவருடைய கார் மெயின் கேட்டில் நுழைந்ததிலிருந்து அலுவலக அறை வரையிலும் அவருக்கு என்ன ஒரு மரியாதை, பணிவு. ஆனால், ரிசப்ஷனில் இருந்தவன் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்தவாறே வணக்கம் தெரிவிக்க, பதிலுக்குப் புன்னகையுடன் அவர் ‘வணக்கம்’ சொன்னது மனோவை எரிச்சலடையச் செய்தது.

அறையில் நுழைந்து அவர் இருக்கையில் அமர்ந்ததும் மனோ கேட்டான்... ‘‘டாடி! எல்லோரும் உங்களுக்கு எழுந்து நின்று மரியாதை கொடுக்க, அந்த ரிசப்ஷனிஸ்ட் மட்டும் எவ்வளவு தெனாவட்டா உட்கார்ந்தபடியே விஷ் பண்றான். நீங்களும் அவனுக்கு பதில் வணக்கம் சொல்றீங்க. நானா இருந்தா அவனை வேலையை விட்டே தூக்கியிருப்பேன்...” அமைதியாக மகனைப் பார்த்த முத்தரசன், “மனோ... உட்கார்” என எதிர் இருக்கையைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தார்.

‘‘அவனால் எழுந்து நிற்க முடியாதுப்பா. மூணு வருஷத்துக்கு முன்னால நடந்த ஒரு விபத்தில் என் மீது விழ இருந்த கிரேனை, என்னைத் தள்ளிவிட்டு தன்மேல் வாங்கிக்கொண்டு இரு கால்களையும் இழந்த தொழிலாளிதாம்பா அந்த ரிசப்ஷனிஸ்ட். ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்க, இப்படிப்பட்ட தொழிலாளிகளால்தான் நாம் உயர்ந்து நிற்கிறோம். அவர்களை அரவணைச்சு செல்லவேண்டியது நம் கடமை!” “என்னை மன்னிச்சிருங்க டாடி!” என்றான் மனோ.