100 நாட்கள்... 100 சேலைகள்..!



நெட்டிசன்களின் ஸ்டேட்டஸ் பசியைப் போக்க புதுசுபுதுசா, தினுசு தினுசா விஷயங்கள் வருவது வழக்கமாகிவிட்டது. ஒபாமா முதல் உள்ளூர்ப் பிரச்னை வரை எல்லாவற்றுக்கும் ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி மகிழ்கிறார்கள் இணையவாசிகள். இப்படி சமீபத்தில் டிரெண்ட் ஆனதுதான் ‘#100sareedays.’ மாடர்ன் டிரஸ்ஸில் உலா வருகின்ற பெண்களுக்கு சேலை ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

நூறு நாட்களுக்கு தினம் தினம் சேலையை அணிந்து அதை செல்ஃபி எடுத்து ‘#100sareedays’ல்  பகிர வேண்டும் என்பது விதி. தினம் தினம் வெரைட்டி வெரைட்டியாக சேலை அணிந்து செஞ்சுரி அடித்திருக்கிறார் இந்த ஹேஷ்டேக்கை உருவாக்கிய ஐஸ்வர்யா ராகவ். இவர் சன் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். “நம்முடைய பாரம்பரியமான சேலை அணியும் கலாசாரத்தை இன்றைய பெண்களிடம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் இப்படியொரு ஹேஷ்டேக்கை ஆரம்பித்தேன்” என்கிறார் ஐஸ்வர்யா ராகவ்.

‘‘எனக்கு ஆரம்பத்துல சேலையே கட்டத் தெரியாது. முதல்ல அம்மா, அப்புறம் மாமியார் கட்டிவிட்டாங்க. இப்பத்தான் நானே கத்துகிட்டு கட்ட ஆரம்பிச்சிருக்கேன். எல்லாரும் நான் தினம் தினம் புது சேலையைக் கட்டிக்கிட்டு போட்டோ போடுறதா நினைக்கிறாங்க. நிச்சயமா இல்ல. நல்லா பாருங்க... சில சேலைகள் ரிபீட் ஆகியிருக்கும். சில சேலைகளுக்கு பிளவுஸ் மாத்தி கட்டியிருப்பேன். பார்க்க அது இன்னொரு புது சேலை மாதிரியே தெரியும். நான் கட்டுற முக்கால்வாசி சேலைகள் காட்டன்தான். அதுவும் கைத்தறி புடவைகள்.

நான் வெறும் புகைப்படம் மட்டும் பகிர மாட்டேன். சேலையோட சேர்த்து அதற்கான சின்ன எமோஷனல் நினைவுகளையும் சேர்த்துப் பகிர்வேன். ஏன்னா ஒவ்வொரு பொண்ணுகிட்டயும் எத்தனையோ சல்வார்கள், ஜீன்ஸ்கள் இருக்கலாம், ஆனால் சேலைக்கு மட்டும்தான் அழகான நினைவுகள், கதைகள் இருக்கும்” என்கிற ஐஸ்வர்யா சில கசப்பான அனுபவங்களையும் சந்தித்திருக்கிறார்.

‘‘சிலர் சேலைக்கு செலவு பண்ற காசை ஏழைகளுக்கு கொடுத்து உதவலாமேன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. என் கணவர் ராகவ்தான் இந்த நூறு நாளையும் வெற்றிகரமா முடிக்க முழு காரணம். இன்னும் நிறைய செய்யணும். நம்முடைய அம்மாக்கள் வருடக்கணக்கில் சேலை அணியும்போது நாம் ஏன் நூறு நாட்களாவது சேலை கட்டக்கூடாது?’’ என்ற பஞ்ச்சோடு முடிக்கிறார் ஐஸ்வர்யா ராகவ். 

- ஷாலினி நியூட்டன்