2017ல் கலக்கப்போகும் கேட்ஜெட்ஸ்!



இளசுகளை மட்டுமின்றி 80 வயது தாண்டியவர்களையும் தனது கைப்பிடியில் வைத்திருக்கிறது டெக்னாலஜி உலகம். போன நிமிடத்து டெக்னாலஜி இந்த நிமிடத்தில் பழசாகிவிடும் விநோதத்தை இன்றைய தலைமுறை சந்திக்கிறது. தினம் தினம் விதவிதமான ஸ்மார்ட் போன்கள், ஹெட் போன்கள், இன்னும் பல கருவிகள் சந்தையில் இறங்கி பழைய பலவற்றின் மதிப்பையும் பயன்பாட்டையும் காணாமல் செய்து, நம்மைக் கலங்கடிக்கின்றன. இப்படிப்பட்ட சூழலிலும் சில அறிமுகங்கள் பரபரப்பை ஏற்படுத்துவது நிஜம். இதோ... இந்த 2017ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சில புதிய வகை கேட்ஜெட்கள்.

கூகுள் ஸ்மார்ட் வாட்ச்

‘ஏஞ்சல்ஃபிஷ்’, ‘ஸ்வார்டுஃபிஷ்’ என இரண்டு மாடல்களில் ஸ்மார்ட் வாட்ச்கள் 2017ம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என்பதை கூகுள் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆண்களுக்கு தனி வடிவத்திலும், பெண்களுக்கு தனி வடிவத்திலும் வரும் இவை ஆண்ட்ராய்டில் இயங்கும் முதல் ஸ்மார்ட் வாட்ச்களாக இருக்கும். ஸ்மார்ட் போன்களின் உதவியின்றி சுயேச்சையாக இயங்கும்விதமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளது இன்னொரு சிறப்பு. சுமார் 10 நிறுவனங்கள் கோதாவில் குதித்திருந்தாலும், கூகுளின் மீதே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.   

வளைக்க முடிகிற ஸ்மார்ட் போன்

மத யானைகள் ஆர்ப்பாட்டமாக நுழைந்து கபளீகரம் செய்கிற சந்தையாக மாறியுள்ளது ஸ்மார்ட் போன் மார்க்கெட். ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று நோக்கியா இந்த ஆண்டு ரீஎன்ட்ரி கொடுக்கப் போகிறது. இதுவரை போன்களில் இல்லாத 23 எம்.பி பிரைமரி கேமரா, ஸ்நாப் டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி ரேம் என வருகிறது நோக்கியாவின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட் போன். இப்போதே இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. தனது ‘நோட் 7’ போன்கள் எரிந்ததால் திரும்பப் பெற்று நஷ்ட ஈடு கொடுத்து கையைச் சுட்டுக்கொண்ட சாம்சங், 2017ல் அசுரப் பாய்ச்சல் செய்திருக்கிறது.

ஆம்; பர்ஸ் போல இரண்டாக மடக்கி பாக்கெட்டில் வைத்துக்கொள்ள முடிகிற ஸ்மார்ட் போனுக்கான காப்புரிமையை அது கடந்த மாதம் பெற்றுள்ளது. 2017ல் இது ரிலீஸ். ஸ்மார்ட் போனே பலரது சினிமா திரையாக மாறிவிட்டது இப்போது. அதனால் பெரிதினும் பெரிய டிஸ்ப்ளே விரும்பும் இளசுகள், போன் பாக்கெட்டில் வைக்கும் அளவு கையடக்கமாக இருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள். இந்த முரண்களை சாத்தியமாக்கும் ‘ஃபோல்டபிள் ஸ்மார்ட் போன்’, இரண்டு பக்கமும் டிஸ்ப்ளே கொண்டதாக இருக்குமாம்.

வர்ச்சுவல் ரியாலிட்டி கிராஃபிக்ஸ் கார்டு

நம்மை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துப் போய் அந்த உலகத்திலேயே இருப்பதைப் போன்ற மாயாஜாலத்தை ஏற்படுத்துபவை வர்ச்சுவல் ரியாலிட்டி கேம்ஸ். இந்த விளையாட்டுக்கான கிராஃபிக்ஸ் கார்டுகளின் விலை அதிகம். பெரிய பெரிய மால்களில் இந்த விளையாட்டை ஒரு மணி நேரத்துக்கு விளையாடவே நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், நிவிடியா நிறுவனம் 5000 ரூபாயில் வர்ச்சுவல் ரியாலிட்டி கிராஃபிக்ஸ் கார்டை இந்திய வாடிக்கையாளர்களுக்காகத் தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறது. கேம் பிரியர்களுக்கு 2017 ஒரே கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.

ஸ்வைப் ஸ்மார்ட் கார்ட்

வெளிநாடுகளில் ‘ஆல் இன் ஒன் ஸ்வைப்பிங் கார்ட்’ மிகவும் பிரபலம். பணம் இல்லா பரிவர்த்தனையைத் துவங்கியுள்ள நமக்கு இவை பெரும் உதவியாக இருக்கும். இனி பத்து பதினைந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பர்ஸில் வைத்துக்கொள்ளத் தேவையில்லை. அனைத்து டெபிட், கிரெடிட் கார்டு களின் கோடிங்கை, பின் நம்பரை இந்த ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம்.

தேவைப்படும் இடங்களில் கார்டில் உள்ள சின்ன டிஸ்பிளேயில் மாற்றிக் கொண்டு எப்போதும் பயன்படுத்தும் ஏ.டி.எம் கார்டைப் போல இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொலைந்துபோனால் என்ன செய்வது என்ற பயம் எல்லோருக்கும் ஏற்படக்கூடும். ‘இது முற்றிலும் பாதுகாப்பானது’ என உத்தரவாதம் அளிக்கின்றனர் நிபுணர்கள்.

சோனி பிஎஸ்ஆர் ஹெட் போன்

இசைக்கு அடிமையானவர்கள் போய் அந்த இசையைக் கேட்க பயன்படுத்தும் ஹெட் செட்டுக்கு அடிமையானவர்கள் ரொம்பவே அதிகம். பாடல்களின் இசையைத் துல்லியமாகக் கேட்க நாளுக்கு நாள் புதிய வகை ஹெட் போன்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ரெக்கார்டிங் அரங்குகளில் பயன்படுத்தும் ஹெட் போனின் விலை 2 லட்ச ரூபாய் வரை ஆகும். அதற்கு இணையான தரத்தில் குறைந்த விலையில் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது சோனி நிறுவனம். ஆப்பிளின் ஒயர்லெஸ் ‘இயர் பாட்’ அறிமுகத்துக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இது. விரைவில் எல்லோர் காதுகளிலும் இதை எதிர்பார்க்கலாம்.

- திலீபன் புகழ்