ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி

மசூதித் தெருவைக் கடந்தபொழுதுதான், அவர் மவுத்தாகிவிட்ட தகவல் வந்தது. அது தகவலல்ல. நெஞ்சை நிலைகுலையச் செய்யும் சொற்கத்தி. தகவலை என்னிடம் தயங்கித் தயங்கிப் பகிர்ந்துகொண்டவரின் குரல் உடைந்திருந்தது. அவருக்கு நானும் எனக்கு அவரும் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் வாய்ப்பை அச்சொற்கள் வழங்கவில்லை. பத்திரிகையிலும் அத்தகவல் சின்ன குறிப்போடு பிரசுரமாகியிருந்தது. அவ்வளவு சின்ன தகவலில் இருந்து விடுபட எனக்கு ஆறு மாத காலம் பிடிக்குமென்று நானுமே அப்போது நினைக்கவில்லை.

அதற்கு முன்னும், அதற்குப் பின்னும் பலர் மவுத்தாகியிருக்கிறார்கள். ஆனாலும், அவர் மவுத்தான தகவல் என்னை சுக்குநூறாக்கி சுட்டுப் பொசுக்கியதை சொல்லத்தான் வேண்டும். இஸ்லாமியர்கள்  ஒருவர் மரணமுறுவதை ‘மவுத்தாதல்’ என்றே சொல்கிறார்கள். காலமானார், இயற்கை எய்தினார், இறைவனடி சேர்ந்தார் என்று சொல்வதைவிட மவுத்தாதல் என்னும் சொல்லையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இது அரபு மூலத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்.

ஒருவர் மவுத்தாகிவிட்டால் ‘‘உண்மையாகவா சொல்கிறீர்கள்’’ என திரும்பத் திரும்பக் கேட்கிறோம். ஒருவர் மவுத்தாவது, நம்மைப் பொறுத்தவரையில் பொய்யாக வேண்டியது. உண்மையாகிவிடக் கூடாதது. எந்த சந்தர்ப்பத்திலும் நமக்கு நெருக்கமான ஒருவர் மவுத்தாகவே மாட்டார் என நாமாகக் கருதிக்கொண்ட அதீத கற்பனையின் வெளிப்பாடு அது.

அதன் காரணமாகவே, ‘நேற்றுகூட பேசினாரே’, ‘முந்தா நாள்தானே ரெண்டு பேரும் ஒன்றாக டீ குடித்தோம்’ என்று பழைய நினைவுகளை, நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்குவோம். ‘நமக்கெல்லாம் சாவே வராது’ என்பது போலவும், ‘இறந்து போனவர் அவசரப்பட்டு விட்டார்’ என்பது போலவும் கருதிக்கொள்வோம். இது நம்முடைய விருப்பமே தவிர, உண்மையல்ல.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒருவருடைய மரணத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்ப மாட்டேன் என முரண்டு பிடிப்பதால் ஆகப் போவதோ, அகலப் போவதோ ஒன்றுமில்லை. இந்த சமாதானம் சராசரிகளுக்கு மட்டுமே; கலையுலகவாதிகளுக்கு இல்லை! சில பல வருடங்களுக்கு முன் ஒரு கம்பெனியிலிருந்து என்னைப் பாட்டெழுதக் கூப்பிட்டிருந்தார்கள். அவர்கள் பாட்டெழுத வரச்சொன்ன இடத்தை வைத்தே அந்தக் கம்பெனியின் லட்சணம் தெரிந்தது.

வழக்கமாக அந்த லாட்ஜுக்கு வரச் சொன்னால், அது உதார் கம்பெனியாகவோ, உப்புமா கம்பெனியாகவோ இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்தக் கருத்தை நானுமேகூட சில சந்தர்ப்பங்களில் சோதித்து இருக்கிறேன். இதற்கு முன்னும் ஒருசில படங்களுக்கான கம்போசிங்கிற்கு வரச்சொல்லி அந்த லாட்ஜிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பை மதித்து நான் போய் எழுதிய எந்தப் பாடலும் இதுவரை வெளிவந்ததில்லை. அத்தகைய பெருமைக்கும் பிரியத்துக்கும் உரிய அந்த லாட்ஜிலிருந்து அழைப்பு.

அதை லாட்ஜ் என்று சொல்வதைவிட ‘கிளிக்கூண்டு’ என்பதுதான் பொருத்தம். ஒரே ஒரு படுக்கை. இரண்டு நாற்காலிகள். சிரமப்பட்டாலும் கூட திறக்க முடியாத ஜன்னல். எப்போதும் சூழ்ந்த இருள். உடல் பெருத்தவர் உட்கார்ந்து எழ முடியாதவாறு ஒரு குட்டி பாத்ரூம். அழுக்கும் பழுப்பும் படிந்த மூன்று கண்ணாடிக் கோப்பைகள்.ஃபிளாஸ்க் மாதிரி ஏதோ ஒன்று. இதை வைத்துக்கொண்டு ரொம்ப காலமாக அதை லாட்ஜ் என்று அந்த லாட்ஜ் முதலாளி எல்லோரையும் ஏமாற்றி வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.

வடபழனி போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னால்தான் அந்த கிளிக்கூண்டின் தோராய முகவரி. அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை... ஊரில் இருந்து படமெடுக்க வரும் பலரும் அங்கு வந்துதான் தன் பெட்டியைத் திறப்பார்கள். பரம்பரை வீட்டை விற்றோ, பலசரக்குக் கடையில் கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டோ வரும் அவர்கள், கொஞ்ச காலத்திற்குப் பிறகு ஊருக்குக் கிளம்புவார்கள்; அல்லது ஊரைவிட்டே கிளம்புவார்கள்.

நான்கூட நினைத்ததுண்டு, அவர்கள் தாமாக இங்கு வந்து தங்குகிறார்களா? இல்லை, அதிகாலையில் கோயம்பேட்டுக்குப் போய் இந்த லாட்ஜிலிருந்து யாராவது அவர்களை அமுக்கிப் பிடித்து வருகிறார்களா என்று! இப்போது அந்தக் கிளிக்கூண்டை இடித்துக் கலைத்துவிட்டு யாரோ ஒரு  புண்ணியவான் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டியிருக்கிறார்.

அந்தக் கிளிக்கூண்டு மட்டுமல்ல... அதுபோல இயங்கிவந்த எத்தனையோ கிளிக்கூண்டுகளுக்கு நான் போயிருக்கிறேன். எந்தக் கிளிக்கூண்டின் அழைப்பையும் தவறவிடாத சின்சியர் சிகாமணி நான். அப்போது என்றில்லை, இப்போதும்கூட ஒருவர் அன்போடு அழைத்துவிட்டால் நிராகரிப்பதில்லை.  அது டுபாக்கூர் லாட்ஜாக இருந்தாலும் சரி, ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக இருந்தாலும் சரி... இம்மாதிரியான நற்குணங்களால் ‘வரவே வராது’ எனத் தெரிந்த படங்களுக்குக்கூட மிக சிரத்தையோடு பாடல் எழுதியிருக்கிறேன்.

ஓரிருமுறை ‘எழுத வாருங்கள், முன்தொகை தருகிறோம்’ என்றதை நம்பிப் போய், சொந்தக் காசில் படக்குழுவினருக்கு புரோட்டா வாங்கிக்கொடுத்த வரலாறும் என்னிடமுண்டு. அவ்வளவு வெள்ளந்தி நான். வெளிவரக்கூடிய படத்தைவிட, வெளிவராமல் போகும் படத்தில் பணிபுரிவது ஆரோக்கியமானது. எப்படியென்றால், வெளிவராத படத்தில் பெரும்பாலும் பேசிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். காசையும் கொடுத்து நம்மைக் காப்பாற்றவும் கூடியவர்கள் அவர்களே என்பதால் அவர்கள் அழைப்பை ஒருபோதும் தட்டுவதில்லை.

சொன்ன நாளில், சொன்ன நேரத்தில் அந்த லாட்ஜிற்குப் போய்விட்டேன். வரவேற்பறையில் என்னைக் கண்டுகொண்ட மேலாளர் சிரித்தார். ‘அவர் ஏன் சிரிக்கிறார்? எதற்கு சிரிக்கிறார்’ என எனக்கும் அவருக்கும் நன்றாகத் தெரியும். இதற்கு முன்னும் அவரும் நானும் இப்படி பலமுறை சிரிப்பாய் சிரித்திருக்கிறோம்.

‘‘என்ன சார்... புதுசா கிளி வந்திருக்கா?’’ என்றேன். ‘‘ஆமாம் சார், வந்து பத்து நாள் ஆகுது. திருப்பூர் கிளி. எக்ஸ்போர்ட் செஞ்சி ஏகப்பட்ட சொத்து வச்சிருக்காம். கிளியின் ஒரே லட்சியம், படம் எடுக்குறதுதானாம். ‘முனியா... மாட்டப் புடிச்சி கட்டுறா’ டயலாக்கோடு ஒரு ரோலில் அவருடைய ஒண்ணு விட்ட சித்தப்பா பேரன் நடித்திருப்பதால் ஆரம்பத்திலிருந்து சினிமா அவங்க குடும்பத்துக்குத் தொடர்பாம். பாக்க திடகாத்திரமா இருக்கு. நல்லா பழகுது. பதினாறாம் நம்பர்ல இருக்கு, போய்ப் பாருங்க’’ என்றார்.

‘கிளி’ என்று சொன்னது, படமெடுக்க வந்திருக்கும் புதுத் தயாரிப்பாளரை. அது வெட்டுக்கிளியா, துட்டுக்கிளியா என்று பார்க்க பரபரப்போடு மாடிப் படியேறினேன். ஏறிக்கொண்டிருக்கும் என்னை கவனிக்காமல் எதிரில் இரண்டொருவர் இறங்கிக் கொண்டிருந்தார்கள். ‘மேலாளர் சொன்ன கிளி இதில் ஏதோ ஒன்றாயிருக்குமோ’ என்ற யோசனை.  பத்து நாள் ஆகிவிட்டதால் றெக்கை முளைத்து கிளி பறந்துவிடக்கூடாதே என்னும் ஐயம் வேறு.

அறைக் கதவு திறந்தே இருந்தது. இசையமைப்பாளர் கண்மணி ராஜா ஆர்மோனியத்தில் எதையோ வாசித்துக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் எழுந்து கைகொடுத்தார். ஏராளமான பக்தி இசைத் தட்டுகளை பட்டி தொட்டியெங்கும் பரவ விட்டவர். நல்ல இசை ஞானமுள்ளவர். முபாரக் என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்மணி ராஜா, இஸ்லாமியப் பாடல்களில் தனி முத்திரை பதித்தவர். ஒருசில படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு ‘‘தேநீர் அருந்துகிறீர்களா?’’ என்றார்.

‘வேண்டாம்’ என்று சொல்ல நினைத்து ‘‘ஓ... சாப்பிடலாமே’’ என்றேன். ‘‘சர்க்கரை போடலாமா?’’ என்றார். ‘‘நிறைய போடலாம்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘என்னைப் பார்த்தால் சர்க்கரை வியாதியுள்ளவனாகத் தெரிகிறதா?’’ என்று கேட்க, அவருக்கு தர்மசங்கமாகிவிட்டது. ‘‘இல்லை... இல்லை... நானும் அய்யாவும் சக்கரையில்லாம குடிக்கிறோம்’’ என்றார்.

‘அய்யா’ என்று அவர் சொன்ன பிறகு அறைக்குள் உட்கார்ந்திருந்த அந்தப் பெரியவரைப் பார்த்தேன். அறுபது வயதிருக்கும். சர்க்கரை மீது அதிக அக்கறையோடு இருக்க வேண்டிய அய்யா முகத்தில் கோகுல் சாண்டலை அப்பியிருந்தார். அத்தர் வாசனையும் அடித்தது. அவர் யார் என்று கண்மணி ராஜாவைக் கேட்கத் தயக்கமாயிருந்தது. ஒருவேளை, ‘மேலாளர் சொன்ன கிளிதான் இந்த அய்யோவோ’ எனவும் நினைத்தேன்.

ஆனாலும், முழுமையாக நம்புவதற்கில்லை. ‘கிளி திடகாத்திரமா இருக்கு. நல்லா பழகுது’ என்ற சர்டிபிகேட் அய்யாவுக்குப் பொருந்தவில்லை. வயதான ஒருவரை அப்படி எப்படிச் சொல்ல முடியும்? ஆக, நாம் சந்திக்க வந்த அல்லது நம்மை சந்திக்க இருந்த தயாரிப்புக் கிளி படிகளில் இறங்கிப் போய்விட்டது. கிளி வரும்வரை கூண்டில் காத்திருக்க வேண்டியதுதான்.

முன்தொகை பெற்றுக்கொண்ட பிறகு கம்போசிங்கில் ஈடுபடலாம் என்றிருக்கையில் அந்த அய்யா மலங்க மலங்க என்னைப் பார்த்தார். ‘‘தம்பி, ஒங்க பேரத் தெரிஞ்சிக்கலாமா?’’ என்றார். எனக்கு அவர் அப்படிக் கேட்டது சுருக்கென்றிருந்தது.  சாதாரணமான கேள்விதான் என்றாலும்கூட என்னைப் பார்த்து அவர் அப்படிக் கேட்டதும் மெல்லிய கோபத்தை வரவழைத்தது. ‘என்னைத் தெரியாமல் ஒருவர் இந்த சமூகத்தில் இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் அதை என்னிடமே கேட்கலாமா?’ என்பது போல!

(பேசலாம்...)