வடிவேலு IN Download மனசு
கற்ற பாடம்
சினிமாவுல கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்குண்ணே. இரக்கத்திற்கும், பரிதாபத்துக்கும் வேலையே கிடையாது. போட்டி, பொறாமை, கெடுதல், துரோகம், துரத்தல், விரட்டல், துவம்சம் எல்லாமே இங்கேயிருக்கு. எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசுறது உண்மையானதா இல்லை. கல்யாணம் காட்சிகள்ல தாய், பிள்ளைகளோட சிரிக்கிறம்ல, அந்த சிரிப்பு இல்லை இது. ‘என்ன, ஆளே காணோம்’னு தூரத்திலேயே விசாரிச்சிட்டுப் போயிடுவாங்க... ‘பாப்போம் தலைவா’னு போயிட்டே இருப்பாங்க.
 ‘உனக்கு சந்தோஷம்தானே’னு நாம நினைச்சுக்கணும். நமக்கு தனித்திறமை இருந்தா தப்பிக்கலாம். ஒவ்வொரு செகண்டும் இங்கே பணம்ணே. லைட் எரிய எரிய காசு. ஷூட்டிங் வந்தாச்சா, நம்ம வீட்டில் ஆயிரம் பஞ்சாயத்து இருந்தாலும் காமெடி பண்ணணும். கஷ்டப்படுறேன், கீழே விழுந்திட்டேன், கால் ஒடிஞ்சிடுச்சு, மூஞ்சி பேந்திடுச்சு... இதையெல்லாம் யாரும் கேட்கத் தயாராக இல்லை. கரணம் போட்டு நீங்கதான் பொழைக்கணும். உங்க குறைகளைக் காது கொடுத்துக் கேட்க இங்கே ஆளில்லை. புரிஞ்சுக்கிட்டு சூதானமா பிழைச்சுக்கணும்ணே!
சமீபத்தில் அதிர்ந்தது
 எதிரியை மறக்கலாம். துரோகியை மறக்கக் கூடாது. இரக்கம் இங்கே செத்துப் போச்சு. நல்லவங்க கொஞ்ச பேரா ஆகிட்டாங்க. முன்னாடி ரோட்டில ஒருத்தன் மயங்கி விழுந்து கெடந்தா, அவனை தண்ணி தெளிச்சு தட்டி எழுப்பி, சோடா வாங்கிக் கொடுத்து, சிதறின பொருளை அள்ளிக் கொடுத்து, ஒரு வடையை வாங்கிக் கொடுத்து ‘பார்த்துப் போ’னு பதவிசா சொல்லி பஸ்ஸுக்கு காசை கொடுத்து அனுப்பி வைப்பாங்க. இப்ப பசியில மயங்கிக் கிடந்தாலும் ‘தண்ணி போட்டுட்டு இருக்கான்’னு தள்ளிப் போறாங்கண்ணே.
மயக்கத்தில் இருக்கிறவனுக்கும், தண்ணி போட்டவனுக்கும் இங்கே வித்தியாசம் தெரியலை. நல்லது செய்கிறவங்களுக்கு குழப்பம் வந்திடுச்சு. லேசா கசங்கின சட்டையோட சரிஞ்சு கிடந்தால் குடிகாரன்னு சொல்லிடுறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் மதினியா மகன்கிட்டே காசைக் கொடுத்து ஒரு இடத்துல கொடுக்கச் சொன்னேன். பயபுள்ள சரியா தின்னு தொலைய மாட்டான். விளையாட்டுப்புள்ள. போற வழியில பசியில மயங்கியிருக்கான்.
 பார்த்தவய்ங்க அப்படியே அள்ளி ஓரமா வச்சு, பணம், கெடியாரம், செல்போன், மோதிரம் எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாய்ங்க. உலகம் அப்படிப் போச்சு. பிள்ளை குட்டிகளுக்கு எல்லாத்தையும் சொல்லி வளங்க. காலம் மோசமா போச்சு, கலி முத்திப் போச்சு. கெட்டு உருக்கொலைஞ்சு போச்சு. மறக்காம எல்லாத்தையும் சொல்லி வளங்க. நம்மளைச் சுத்தி சாய்க்க ஆளுங்க டயம் பார்த்துக்கிட்டு இருக்காய்ங்க. விஜிெலன்டா இருக்கச் சொல்லுங்க. அவ்வளவுதான்.
கடைசியாக அழுதது
அப்பா நடராஜன் பிள்ளை இறந்தபோது நெஞ்சு வெடிக்கிற மாதிரி அழுதேன். அவருக்குக் கொடுத்து உதவ கையில ஒரு ஐவேஸும் இல்லை. மண்ணெண்ணெய் விளக்கு வாசம்தாணே. கரன்ட் கூட இல்ல. குடும்பம் திக்குத் திசை தெரியாம அல்லாட்டம் தள்ளாட்டமா போராடிட்டு இருந்த காலத்துல, ‘வேலு, நீதாண்டா இந்தக் குடும்பத்தை தாங்கிட்டு பெரிய ஆளா வரணும்’னு சொன்னவரு அப்பன். அது அப்படியே நெஞ்சில் பதிஞ்சு போச்சு. தம்பி, தங்கச்சி எல்லாரையும் அரவணைச்சு, சரிக்கு சமமா வைச்சு காப்பாத்துறண்ணே. அப்ெபல்லாம் நான் நல்லா வருவேன்னு நம்பின அப்பாவை நினைச்சு கண் கலங்குவேன். இருந்து கொண்டாட அம்மா இருக்கேன்னு மனசை தேத்திக்குவேன்.
பாதித்த விஷயம்
இப்ப ஒரு டிரெண்ட் இருக்குண்ணே. கெடுதல்ல இது இன்னொரு வகை. படம் நல்லாயிருக்கும். அதைக் கெடுக்க தேர்ந்தெடுத்து அம்பது பேரை சிலர் அனுப்புறாங்கண்ணே. படம் நல்லா போயிட்டு இருக்கும். அந்த சமயம் பார்த்து அந்த அம்பது பேரும் பின்னால தட்டிக்கிட்டு எந்திரிப்பாய்ங்க. ‘இதுக்குத்தான்டா வர்றதில்லை, அறுஅறுனு அறுப்பான்னு சொல்லைல, ஏண்டா கூட்டிக்கிட்டு வந்தோம்’னு அடுத்தடுத்த ஆளை தட்டிக்கிட்டே போவாங்ய்க.
‘அய்யய்யோ அய்யய்யோ’னு சொல்லிக்கிட்டு போவாங்க. படம் பார்க்கறவனுக்கு சந்தேகம் வந்திடும். அச்சம் வந்திடும். ஒரு படம் ஓடக்கூடாதுன்னு இங்கே பூஜை போடுறாங்க. அந்தக் காலத்திலயே ‘யாரை நம்பி நான் பொறந்தேன், போங்கடா போங்க’னு பாடலிலே கண்ணதாசன் சொல்லுவார். இதுக்கெல்லாம் ‘அழுகிறதா, சிரிக்கிறதா’னு தெரியல மக்கா!
பொக்கிஷம்
மொத சம்பாத்தியத்துல வாங்கிய கார் ஒண்ணு. அதாண்ணே இப்பவும் உசிரு. அடிக்கடி தொட்டுத் தடவிக் கொஞ்சுவேன். புரியுதா உங்களுக்கு? புரிஞ்சிருக்கணும்!
சென்டிமென்ட்
அய்யனார், மதுரை மீனாட்சி, என் தாய் இந்த மூணு பேர்தாண்ணே நான் நம்புற லிஸ்ட். வீட்டில ஓய்வா இருக்கும்போது ‘லைவ்’வா அம்மாகிட்டே நடிச்சுக் காட்டுவேன். தம்பி புள்ளைங்க, தங்கச்சி புள்ளைங்க, அக்கா, நாத்தனார், கொழுந்தியான்னு எம்பது பேருக்கு மேலே சேர்த்து வச்சு சிரிக்க சிரிக்க நடிச்சுக் காட்டுவேன். அதுகளும் சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்து படுக்கப் போகுங்க. அம்மா ஆயுசை ஒரு பர்சன்ட் ஏத்தி வைப்பேன். ‘பய புள்ளை எப்படி நடிக்கிறான் பாரு’னு அம்மா விழுந்து விழுந்து சிரிக்கும்.
‘எப்படி நயமா பேசுறான் பாரு, எடுபட்ட பய’னு சொல்லி சிரிச்சுப்புட்டு அப்படியே அழுவும். ‘டேய், உனக்கு எதிரியெல்லாம் உதிரிடா’னு சொல்லும். இப்பவும் எப்பவாச்சும் மனசு ஒரு மாதிரியா இருந்துச்சுனா ‘சட்’னு கெளம்பி மதுரைக்குப் போயி அம்மாகிட்டே கால்ல விழுந்து துண்ணூறு வாங்கிப் பூசிட்டு, கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திட்டு நிம்மதியா இங்க வந்து சேர்ந்துடுவேன். பனி போல துன்பம் விலகும். நிஜம்ணே!
கேட்க விரும்பும் கேள்வி
தமிழ்நாட்டுல நிறைய வேதனையான விஷயங்கள் நடந்திட்டிருக்குண்ணே... நல்லா ஞாபகம் வைச்சுக்கங்க, நான் அரசியல் பேசலை. எதையும் சொல்ல முடியாமல் எல்லோர் மனசும் உடஞ்சு போய் கிடக்கு. மக்கள் நொறுங்கிப் போய் கிடக்காங்க. காமெடியனுக்குத்தாண்ணே நாட்டு நடப்பு தெரியும். என்.எஸ்.கே. விஞ்ஞானி. ‘எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்’னு எப்பவோ பாடின பாட்டு. இப்ப அவ்வளவு பொருத்தமாக இருக்கு! மக்கள் ரொம்ப இறுக்கத்தில் இருக்காங்க.
காவிரிப் பிரச்னை, பணப் பிரச்னை, மனப் பிரச்னை, முதல்வர் அம்மா திடீர் மறைவு, ‘வர்தா’ புயல் வந்து வாங்கு வாங்குனு வாட்டினது எல்லாம்... மக்களை தலையில் அடிச்சி மண்ணுக்குள்ளே உடம்பு தோள் வரைக்கும் போயிருச்சு. அதிகமா பாதிச்சது தமிழ் மக்கள்தாண்ணே.. மக்களுக்கு இப்ப திசை தெரியலை. ‘திக்குத் தெரியாத காட்டில்’னு சொல்வாங்களே... அதுதான் சாமி இப்ப தமிழ்நாடு. நகரமெல்லாம் காடாக மாறுது. வீட்டிற்கு போக வழி தெரியல. வருஷ கடைசியிலாவது ‘கத்தி சண்டை’யில வந்து ஜனங்களை என் பங்குக்கு சிரிக்க வைக்க முடிஞ்சதே, அதுவரைக்கும் சந்தோஷம்!
- நா.கதிர்வேலன்
|