துலாம் லக்னத்துக்கு கூட்டுக் கிரகங்கள் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 71

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சேருவார் தோஷம் என்றொரு பழமொழி உண்டு. அது ஜோதிடத்திற்கே முற்றிலும் பொருந்தும். இரண்டு கிரகங்கள் சேர்ந்தாலே அந்த இடத்தில் கலவையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதற்கு மேல் மூன்று, நான்கு என்று சேரும்போது நிச்சயமாக விதம்விதமாக அந்த ஜாதகரை கிரகங்கள் மாற்றுகின்றன. அப்படித்தான் துலாம் லக்னத்தில் இதுவரை இரு கிரகங்கள் சேர்ந்தால் என்ன பலன்களென்று பார்த்தோம்.

ஆனால், கூட்டாகச் சேர்ந்தால் என்ன பலன்கள் என்று பிரபலங்களின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கலாம். ஏனெனில், பொதுவாகவே பெரும்பாலான பிரபலங்களின் ஜாதகத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வலிமையான கிரகங்களே அவர்களை உச்சிக்கு கொண்டு செல்வதை பார்க்கலாம். ‘பல கைகள் தொட்டுத் தூக்கித்தான் ஒருவர் பெரிய அளவிற்கு வர முடியும்’ என்பார்கள். அது கிரகங்களுக்கும் பொருந்தும்.

மேலும், அப்படிச் சேர்க்கை பெற்ற கிரகத்தின் குணங்களை உறிஞ்சியபடிதான் வண்ணக் கலவையாக நற்பலன்களையும் கொடுக்கும். இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் துலாம் லக்னத்தில் பிறந்தவராவார். துலாம் லக்னத்தின் அதிபதியான சுக்கிரனும், விளையாட்டு கிரகமான செவ்வாயும், பிரபல யோகாதிபதியும், பாக்யாதிபதியும், கிரிக்கெட் விளையாட்டுக்குரிய கிரகமுமான புதனும் அவரது சொந்த நட்சத்திரத்தில் இருப்பதால், அவரால் இமாலய சாதனை செய்ய முடிந்தது.

குருவும் செவ்வாயும் சேர்ந்து குருமங்கள யோகமும் உள்ளது. இவர்கள் இருவரும் உட்கார்ந்து பத்தாமிடமான கர்ம ஸ்தானத்தை பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். மூன்றாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிற்கும் உரிய குரு நீசமானாலும், உச்சம் பெற்ற செவ்வாயோடு இருப்பதாலும், பத்தாம் வீட்டிற்குரிய கிரகமான சந்திரனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலேயே இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதைப் பெற முடிந்தது.

லக்னாதிபதி சுக்கிரன் ஏழாமிடத்தில், தன்னுடைய சொந்த நட்சத்திரமான பரணியில் அமர்ந்திருப்பதாலேயே பெரும் செல்வந்தராகவும் விளங்க முடிந்தது. பிரபல யோகாதிபதி சனி எட்டில் மறைவதால் உயர்கல்விக்குரிய கிரகம் மறைந்து, வாக்கு ஸ்தானத்தைப் பார்த்ததால் படிப்பு இல்லாமல் போனது. ஆனாலும் படிக்காத மேதையாகவும் திகழ முடிந்தது. எட்டாமிடத்து சனியால்தான் நடுவே டென்னிஸ் எல்போ என்கிற முக்கிய மூட்டுப் பிரச்னையால் அவதிப்பட்டு கிரிக்கெட் வாழ்வே அஸ்தமித்து விடுமோ என்றெல்லாம் பயந்தார்.

ஆனாலும், முக்கிய கிரகங்களான சுக்கிரன், புதன், செவ்வாய் மூன்றும் இணைந்து அவரைப் புகழ் குன்றாமல் பார்த்துக் கொண்டனர். சிருங்கேரி பீடாதிபதி ஜகத்குரு சந்திரசேகர பாரதி தீர்த்த சுவாமிகள் இந்தியாவிலுள்ள ஞானியருள் ஒருவராய் விளங்கினார். இவர் பீடாதிபதியாக இருந்ததை விட ஞானானுபவத்திலேயே மூழ்கியிருந்தார் என்றே சொல்வார்கள். இவரின் ஜாதகத்தில் ஞானகாரகனான கேதுவும், ஆத்மகாரகனான சூரியனும், சாத்திர பாண்டித்திய கிரகமான புதனும் சேர்ந்து துலாம் லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள்.

அதாவது மூவரும் ஒன்றாம் இடத்திலேயே அமர்ந்திருப்பதால் பிறவி ஞானியாக இருந்தார். ஆதிசங்கரர் எழுதிய விவேக சூடாமணி நூலுக்கு இவர் எழுதிய விளக்கவுரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது. ராஜ கிரகங்களான குருவும் சனியும் சமசப்தமாக, ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆறாம் இடத்திற்குரிய குரு பாக்யாதிபதியாக புதனின் நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார்.

சுக, பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவான் சந்திரனுடைய நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் இவ்வுலகை எளிதாகத் துறக்க முடிந்தது. ஆலயங்கள், மடங்கள் போன்றவற்றை வளர்க்க முடிந்தது. ஞானகாரகனான கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் பிறந்திருந்ததால் ஞான மயமாகவே இருக்கவும் முடிந்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட முக்கிய பெண் போராளிகளில் ஒருவரான ஜான்சி ராணி துலாம் லக்னத்தில் பிறந்தவராவார். இவரின் லக்னத்திலேயே சந்திரன், புதன், சனி மூன்றும் அமர்ந்திருக்கின்றன. ‘சந்திரனும் புதனும் இணைந்தால் இந்திரனைப் போல் வாழ்வார்’ என்கிற ஜோதிட மொழியே உண்டு. ஜீவனாதிபதி சந்திரனுடன் பாக்யாதிபதி புதன், பிரபல யோகாதிபதி சனி சேர்ந்து லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் மகாராணியாக வாழ்ந்தார்.

இரண்டிலுள்ள சூரியன், சுக்கிரன், கேது போன்ற கிரகங்கள் வீர தீர தைரிய கிரகமான செவ்வாயோடு இருப்பதால் மிகுந்த துணிவோடு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ராகு எட்டில் அமர்ந்து பாதகாதிபதி சூரியன் நட்சத்திரத்தில் அமர்ந்ததால் கொல்லப்பட்டார். பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகவே இவர் திகழ்ந்தார். இவர் பிறந்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்திற்கு முதலில் ராகு தசை நடக்கும். பிறகு குரு தசையில் பதினாறு வருடங்கள் முடிவடைவதற்கு முன்பு 23 வயதிலேயே இறந்து விட்டார்.

துலாம் லக்னத்திற்கு குரு தசை கொடிய பாவி என்பதால் அவருக்கு மரணம் அமைந்துவிட்டது. இந்தி நடிகர் தேவ் ஆனந்தும் துலாம் லக்னத்தில் பிறந்தவர்தான். லக்னத்திலேயே குரு அமர்வதால் தீர்க்காயுசு யோகம் உண்டு. அதனால்தான் 88 வயது வரை இருந்தார். இவர் ஜாதகத்தில் 12ம் இடத்தில் நான்கு கிரகங்கள் மறைந்தாலும், அதில் லக்னாதிபதியான சுக்கிரனோடு சேர்க்கை பெற்றிருந்ததால் கலைத்துறையில் பெரும் நடிகராக வர முடிந்தது.

அதற்கடுத்து சந்திரனின் பார்வை பெற்றதாலும் சந்திரன் சர்வகலாபிதன் என்பதாலும் எல்லோரையும் எளிதாகக் கவர முடிந்தது. இவருடைய ஜாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கூட்டுக் கிரகங்கள் இருந்தாலும், அதில் சந்திரனும் சுக்கிரனுமே ஆளுகிறார்கள். ஐந்தில் கேது இருப்பதால் இவர்கள் எந்தத் துறையில் ஈடுபடுவார்களோ அதில் பெரும் ஆராய்ச்சியை நிகழ்த்தியிருப்பார்கள். ஆனால்,  பதினொன்றில் ராகுவும் செவ்வாயும் இருப்பதால் உறவினர்களிடையே அவ்வப்போது பெரும் பிரச்னையை எதிர்கொண்டிருப்பார்.

முக்கியமாக சகோதர முறை வரும் உறவினர்களால் உளைச்சல் வந்து நீங்கியிருக்கும். அமெரிக்க அதிபரான பாரக் ஒபாமாவின் ஜாதகத்தில் துலாம் லக்னத்தின் அதிபதியான சுக்கிரன் ஒன்பதாம் இடத்திலுள்ளார். இந்த அமைப்பே, எது முடியாது என்று விட்டார்களோ அதை முடியுமென்று முடித்துக் காட்டுவதாகும். பொதுவாகவே இவர்கள் சிறு கலகத்தை உண்டு பண்ணி அதன் மூலம் பிரச்னைகளை சரிசெய்வார்கள். திருவாதிரை நட்சத்திரம் என்பதால் தேவைக்கேற்ப தந்திரமான வழியையும் கைக்கொள்வார்கள்.

பத்தாம் இடத்தில் சூரியனும் புதனும் ஒன்றாக அமர்ந்திருக்கின்றனர். அதில் புதன் யோகாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் இருக்கிறார். மேலும் 11ம் இடத்தில் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் உலகளாவிய பிரபலத்தை அடைய முடிந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுக்கவும் முடிந்தது. அதை ஒடுக்க வந்த சூழ்ச்சி சக்திகளை முறியடிக்கவும் முடிந்தது.

ஐந்தில் கேது இருப்பதால் மனோ திடம் அபரிமிதமாக இருந்தது. எட்டில் சந்திரன் இருப்பதாலேயே கீழேயிருந்து மேலே வந்தாலும், அதே எளிமையோடு இருக்க முடிந்தது. குருவும் சனியும் ஒன்றாக இருப்பதால் நாடாளும் யோகத்தைப் பெற முடிந்தது. குரு இங்கு நீசமானாலும் நீசபங்க ராஜயோகமாக மாறியது. இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் நன்மைகளை ஏற்படுத்தினாலும், அணையிலிருந்து வெளியேறும் நீர் எப்போதுமே மிகுந்த வேகத்தோடு வெளியேறுவதைப் போல நான்கு கிரகங்களும் வெளிப்படுத்தும் கதிர்வீச்சினூடே சில எதிர்மறைப் பலன்களையும் தந்துவிட்டுத்தான் போகும்.

அப்படிப்பட்ட மறைமுக கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறனை ஆலயங்களே அளிக்கும். அப்படி துலாம் லக்னத்தினருக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க முஷ்ணம் பூவராஹ சுவாமியையும், தாயார் அம்புஜவல்லியையும் தரிசித்து வாருங்கள். ஹிரண்யாட்சன் என்கிற அரக்கனிடமிருந்து பூமியை மீட்டு அவனை தன் மூக்குக் கொம்பால் குத்திக் கிழித்துக் கொன்றார். பிறகு, பூமி உருண்டையை மூக்கு-கொம்பு அடைப்புக்குள் நிறுத்தி மேலே கொண்டுவந்தார். பூமி உட்பட அனைத்து உலகங்களும் ஆனந்தப்பட்டன.   

அதைத் தொடர்ந்து பூமிதேவியின் வேண்டுகோளின்படி அவர் பூவராகனாக ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் கோயில் கொண்டார். ஸ்ரீமுஷ்ணம் எனும் இத்தலம் கடலூர் மாவட்டம், விருத்தாசலம்-கும்பகோணம் சாலையில் ராஜேந்திரப்பட்டினத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்