திருமண உடைகள்! - தென்னிந்தியாவுக்கும் வட இந்தியாவுக்கும் இருக்கும் வேறுபாடுகள்



- ஷாலினி நியூட்டன்

ஆடி முடிந்து ஆவணி தொடக்கம். போதாதா? கல்யாண சீசன் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. நம் நாட்டைப் பொறுத்தவரை திருமணம் என்பது இன்னொரு பிறப்பு போன்றது. அதனால்தானோ என்னவோ இந்த வைபவத்துக்காக அவ்வளவு மெனெக்கெடுகிறார்கள். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அத்தனை சிறப்பும், முக்கியத்துவமும் தருகிறார்கள். சரி, சரியான முறையில் தருகிறார்களா? முக்கியமாக வட - தென் இந்திய கலாசாரங்களை எடுத்துக் கொள்வதில் நம்மிடம் குழப்பம் நிலவுகிறதா?

இந்தக் கேள்வியுடன் நான்கு மாடல்களைப் பிடித்தோம். ஒரு ஜோடி முற்றிலுமாக தென்னிந்தியர்கள். மற்றொன்று அப்படியே வட இந்தியர்கள். அவரவர் கலாசார உடைகளை அவரவருக்கு பொருந்தும்படி போட்டுப் பார்த்தோம். நன்றாகவே இருந்தது. பிறகு ஏன் நம்மூர் இளைஞர்களிடம் இவ்வளவு லெஹெங்கா மோகம்? வடக்கே சிவப்பு, பச்சைக் கலர் சிங்கிச்சா பட்டுப் புடவைகள்? கொஞ்சம் ஆர்வமும், ஆவேசமும் பொங்க பேசினார்கள் டிசைனர்கள் யோகமலர், ரேகா ராகுல், மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஜெயந்தி குமரேசன்.

யோகமலர் (ஃபேஷன் டிசைனர்): நம்ம ஊர் பெண்களுக்கு இடுப்புப் பகுதி கொஞ்சம் பெரியதாக இருக்கும். வளைவுகள் அதிகமாக இருக்கும். அதனாலேயே இவர்கள் புடவை கட்டி நின்றால் அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்னும் அளவுக்கு அம்சமாக காட்சியளிப்பார்கள். அதேபோல்தான் பையனும். நம்மூர் பிள்ளைகளுக்கு வலிமையான தோள்கள். கொஞ்சம் பரந்த மார்புப் பகுதி. எனவே பட்டு வேட்டி, வெள்ளை சட்டை அணிந்தால் அம்சமாக கம்பீரமாக இருக்கும்.

இந்த உண்மையை இப்போது யாரும் புரிந்துகொள்வதில்லை. வட இந்திய பிள்ளைகளைப் போல் ஷெர்வானி லெஹெங்கா அணிகிறார்கள் அல்லது கோட் சூட் போட்டு வலம் வருகிறார்கள். வட இந்தியப் பெண்கள் இடையழகைக் காட்ட தயங்க மாட்டார்கள். நம்மூர் பெண்களோ லெஹெங்காவையே தாவணி போல் அணிந்து இடுப்பை மறைத்து நிற்பார்கள். இதனால் சில டிசைன்ஸ் கூட மறைந்து விடுகிறது. இதற்கு மேல் வீட்டுப் பெரியவர்களின் தொல்லை. அந்த பாகம் தெரியக் கூடாது, இடுப்பு தெரிகிறது பார், லோ நெக் அவசியமா என படுத்தி எடுக்கிறார்கள்.

இதைக் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால், திருமணம் முடிந்ததும் லெஹெங்காவை சல்வாரா மாற்றிக் கொடுங்கள் என்று கேட்பார்கள் பாருங்கள்... அப்போது டென்ஷன் வரும். ஏனெனில் லெஹெங்கா எப்படி இருக்கிறதோ அப்படியே அதை அணிவதுதான் அந்த உடைக்கு நாம் செய்யும் மரியாதை. தவிர நம்மூரில் லெஹெங்கா அதிகம் கிடைப்பதில்லை. குறைந்தது ரூ.20 ஆயிரமாவது செலவழித்தால்தான் ஓரளவு நல்ல லெஹெங்கா கிடைக்கும். அதாவது வடக்கே காஞ்சி பட்டைத் தேடி அலைவதற்கு சமம்தான் தெற்கே லெஹெங்கா தேடி அலைவது.

அதேபோல் முகூர்த்தப் பட்டு என தனியாக நாம் அணிகிறோம். எனவே ரூ.10 ஆயிரத்துக்குள் லெஹெங்கா கிடைக்க வேண்டுமென்று அடம் பிடிக்கிறார்கள். இந்த விலையில் கிடைக்கும் லெஹெங்கா சத்தியமாக லெஹெங்காவுக்கு உரிய கிராண்ட்னெஸ்ஸு டன் இருக்காது. இது போதாது என்று மணப்பெண், தான் எடுக்கும் பச்சை, சிவப்பு லெஹெங்காவுக்கு மேட்ச்சிங்காக மணமகனின் ஷெர்வானி இருக்க வேண்டுமென்று கண்டிஷன் போடுவார்கள். நமக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியாது.

நம் பிள்ளைகள் நல்ல கோதுமை அல்லது டஸ்கி டோன் நிறங்களில் உள்ளதால் பச்சை, சிவப்பு அவர்களது ஹேண்ட்ஸம் லுக்கையே காலி செய்து விடும். எவ்வளவோ நல்ல நல்ல புடவைகள் விதவிதமான நிறங்களில் இருக்கின்றன. இதைப் பயன்படுத் துவதுதான் தென்னிந்திய உடல்வாகுக்கு அழகு சேர்க்கும்!

ரேகா ராகுல் (ஃபேஷன் டிசைனர் மற்றும் ஃபேஷன் ஸ்கூல் நிர்வாகி): ஷாருக் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, மற்றும் அலியா பட் நடித்த ‘2 ஸ்டேட்ஸ்’ ஆகிய இரு இந்திப் படங்களிலும் ஹீரோயின்கள் தமிழ் பேசும் பெண்ணாக உருவாக்கப்பட்டிருப்பார்கள். நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள்... அந்தப் படங்களில் நடித்த தீபிகா படுகோன், அலியா பட் மாதிரிதான் சிவப்பு, மஞ்சள், பச்சை கலர் காம்பினேஷனே இல்லாமல் நம்மூர் பெண்கள் புடவை, தாவணி கட்டுகிறார்களா?

எதற்காக இதை சொல்கிறேன் தெரியுமா? தென்னிந்திய உடைகள் குறித்து இந்திப் படங்கள் தவறாகக் காட்டுகின்றன என்று சொல்லத்தான். தெலுங்குப் படங்களில் ப்ரைட் கலர்ஸ் இருக்கும். ஆனால், சம்பந்தமே இல்லாத வண்ணங்கள் இருக்காது. எப்படி நம் பெண்கள் லெஹெங்காவை விரும்புகிறார்களோ அப்படி வட இந்தியப் பெண்கள் பட்டுச் சேலைக்கு ஆசைப்படுகிறார்கள். தவறான வண்ணங்களை தேர்வு செய்து மாட்டிக் கொள்கிறார்கள்.

அங்குள்ள பெண்களுக்கு இடுப்பு சிறியது. மார்பின் அளவும் தென்னிந்தியரை விட குறைவுதான். எனவே பேடட் லெஹெங்கா ப்ளவுஸ் அவர்களுக்கு செட் ஆகும். அதேபோல் வட இந்திய ஆண்களுக்கு தோள்பட்டை அகலம் குறைவு. வேஷ்டியை லாவகமாக கையாளத் தெரியாது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் அவர்கள் வேட்டி அணிய விரும்புகிறார்கள்.

ஜெயந்தி குமரேசன் (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்): ட்ரெடிஷனல் புடவைக்கு உரிய மேக்கப் வேறு, லெஹெங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவை என்றாலே பேபி பிங்க் அல்லது ஸ்கின் டோன் லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போட வேண்டும். இதை நாங்கள் நயன்தாரா ஸ்டைல் மேக்கப் என்கிறோம். அதே லெஹெங்கா என்றால் கொஞ்சம் இண்டோ - வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், ஜொலிக்கும் ஐ-ஷேடோஸ் என அனைத்தும் ப்ரைட் லெவலில் இருக்கும்.

இந்த மாற்றங்களுக்கு திருமணப் பெண்கள் சம்மதிப்பதே இல்லை. லெஹெங்காவிற்கு பாந்தமான பட்டுப் புடவை மேக்கப்பில் நிற்க வேண்டும் என்பார்கள். அடுத்து ஷெர்வானிக்கு ‘ராயிஸ்’ இந்திப் பட ஷாருக் போல் பெரும்பாலும் கண்களில் கொஞ்சம் காஜல் பயன்படுத்துவார்கள் வட இந்திய ஆண்கள்.

நம் ஊர் பிள்ளைகளுக்கு அதெல்லாம் பிடிக்காது. போலவே வேட்டிக்கு எடுக்கும் செருப்பை ஷெர்வானிக்கு அணிவார்கள். உண்மையில் மொஜாரி அல்லது ராஜா கால ஸ்டைல் செருப்புகளைத்தான் ஷெர்வானிக்கு பயன்படுத்த வேண்டும். இதற்கெல்லாம் சம்மதம் என்றால் மட்டும் வட இந்திய உடைகளை தென்னிந்திய திருமணங்களுக்குப் பயன்படுத்துங்கள். அப்போதுதான் ஆல்பங்களிலும் வீடியோக்களிலும் நீங்கள் அழகாக காட்சியளிப்பீர்கள். கேட்போமா? டவுட்டுதான்...

மாடல்கள்: ஸ்ரீஹரி (சன் மியூசிக் விஜே), அதிதி மேனன், லீஷா எக்லர்ஸ் (நடிகைகள்), அம்புஜ் யாதவ் (மாடல்).

காஸ்ட்யூம் டிசைனர்: யோகமலர், ரேகா ராகுல்.
மேக்கப் மற்றும் ஸ்டைலிஸ்ட்: ஜெயந்தி குமரேசன்.(Pro Makeup Studio)                                    

படங்கள்: ஆண்டன்தாஸ்