உஞ்சல் தேநீர்



யுகபாரதி - 39

‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ என்னும் தலைப்பில் எழுத்தாளர் நாகூர் ரூமி நூல் ஒன்றை வெளியிட்டார். அவ்விழாவில் பேசிய நான், ‘‘தமிழை அடையாளமாகக் கொண்டால்தான் சிறுபான்மையினர் காக்கப்படுவார்கள். அப்படியிருக்கையில், இங்கே இருக்கும் தமிழ்ப்பற்றுள்ள இஸ்லாமியர்கள்கூட ஏன் தமிழில் பெயர் வைக்கத் தயங்குகிறார்கள்?’’ எனக் கேட்டு வைத்தேன்.

அவ்வளவுதான், கூட்டமே கொந்தளித்து என்னைக் குதறத் தொடங்கிவிட்டது. இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நான், பொறுப்பில்லாமல் பேசிவிட்டதாக வருந்தினார்கள். விழாவுக்கு வந்திருந்த இஸ்லாமிய பற்றாளர்களில் சிலர், ‘‘யுகபாரதியிலே தமிழ் எங்கேயிருக்கிறது? யுகமும் பாரதியும் சமஸ்கிருதம் அல்லவா?’’ என வறுத்தெடுக்கவும் செய்தார்கள்.

ஒருவர்பின் ஒருவராக என்னை சபித்தும் சங்கடப்படுத்தியும் பேசிக்கொண்டிருந்த அவ்விழாவுக்கு, தலைமை வகித்திருந்தவர் கவிக்கோ. எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்ட அவர், இறுதியில் என் கேள்வியில் இருந்த நியாயத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்தினார். ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்ற கேள்விக்கு, ‘பெயரில்தான் எல்லாமிருக்கிறது’ என்று அவர் அன்று பேசிய அந்த உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது.

எனக்கு சாதகமாக அவர் பேசவில்லை. ஆனால், என் கேள்வியை வெறுப்பில்லாமலும் கோபமில்லாமலும் அவர் ஒருவரால்தான் எதிர்கொள்ள முடிந்தது. இந்துக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டுமென குரல் கொடுப்பவர்கள், மசூதிகளில் தமிழில் ஏன் பாங்கிசைக்க வற்புறுத்தக் கூடாதென்னும் கேள்விக்கு சாதுர்யமாக வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பதிலளித்திருக்கிறார். ‘மதம் மக்களுக்கு போதைப் பொருள்’ என்ற காரல் மார்க்ஸிடமிருந்து அடிப்படைவாதம் குறித்த தெளிவுகளை அவர் பெற்றிருக்கிறார்.

சமூகத்தின் மீதிருந்த அக்கறையினால் அவர் வாரந்தோறும் ‘கல்கண்டு’ இதழில் எழுதி வந்த கவிதைகள், ‘சுட்டுவிரல்’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. வெளிவந்த அந்நூல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாகவும் வைக்கப்பட்டது. ஆட்சியாளர்களையும் அதிகாரத்திலுள்ளவர்களையும் சுட்டுவிரல் நீட்டி கேள்வி கேட்ட அந்நூல் பாடமாக வைக்கப்பட்டவுடன் கவிக்கோ மீது காழ்ப்பு கொண்ட மதவெறி சக்திகள் அவருக்கு எதிராகக் கொடிபிடித்தன.

சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய மதவாத சக்திகள், பாடத்திட்டக் குழுவின் அனுமதியில்லாமல் அந்நூலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. அந்த சமயத்தில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான், மதவெறி சக்திகளுக்கு எதிராக தஞ்சாவூரில் ஏற்பாடு செய்திருந்த கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். மாணவர்களால் ஒன்றிணைக்கப்பட்ட அக்கூட்டத்திலிருந்துதான் அப்துல்ரகுமான் என்னும் பேரை நான் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

அதன்பிறகுதான் அவர் எழுதிய அத்தனை கவிதைகளையும், கட்டுரைகளையும் வாசிக்கத் தொடங்கினேன். சுட்டுவிரலுக்கு எதிர்ப்பு கிளம்பாமல் இருந்திருந்தால் கவிக்கோவை அவ்வளவு சீக்கிரம் நான் கண்டடைந்திருப்பேனா என்பது சந்தேகம்தான். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலகப் படைப்புகளையும் படைப்பாளர்களையும் வியந்து, கவிக்கோ எழுதிய கட்டுரைகள் ‘ஜூனியர் போஸ்ட்’டில் தொடராக வெளிவந்தன.

நூறு வாரங்களுக்குமேல் தொடராக வெளிவந்த அக்கட்டுரைகளை பள்ளிக்கூட நூலகத்தில் அமர்ந்து வாசித்த காட்சி இன்னமும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அவர் மேற்கோள் காட்டிய கவிதைகளை மனப்பாடம் செய்ததும் அக்கவிதைகளைப் போலவே எழுதிப் பார்த்ததுமே கவிதைகளோடு எனக்கேற்பட்ட உறவுக்குக் காரணமென்று இப்போது தோன்றுகிறது.

என்போல எத்தனையோ ஏகலைவன்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ஒரே ஒரு வித்தியாசம், அவர் யாருடைய கட்டைவிரலையும் விலையாகக் கேட்டதில்லை. மாறாக தன்னுடைய சுட்டுவிரலைக் கடனாகக் கொடுத்திருக்கிறார். அண்ணன் அறிவுமதி அவரை ‘ஆண் தாய்’ என்று விளிப்பார். கவிக்கோவின் இலக்கியக் கட்டுரைகள் வெகுசன ரசனையை எட்டிய அளவுக்கு வேறு யாருடைய இலக்கியக் கட்டுரைகளும் எட்டவில்லை.

தவிர, பொதுமக்கள் அவ்வளவு பூரிப்போடு இலக்கியக் கட்டுரைகளை அதன்பின் வாசிக்கவில்லை என்பதுதான் உண்மை. எழுதுபவரின் மீதுள்ள நம்பிக்கையும், பிரியமும்தான் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுகிறது. உரைநடையில் புதுவிதமான அணுகுமுறையை அவர் கொண்டிருந்தார். ஒரு வாக்கியத்தை இன்னொரு வாக்கியத்தால் திறக்கும் அற்புதமான சாவியை அவருடைய எழுத்துகள் கொண்டிருந்தன.

“எது மேலேற உதவுகிறதோ அதுவே கீழே தள்ளிவிடுகிறது. எது இன்பத்திற்குக் காரணமாக இருக்கிறதோ அதுவே துன்பத்திற்கும் காரணமாகிவிடுகிறது” என அவர் இயல்பான தளத்திலிருந்து உன்னதமான இடத்திற்கு வாசகனைக் கூட்டிச்செல்ல முற்படுவார். முதுமையை, நிமிஷக் கரையான் அரித்த ஏடு / ஞாபகங்களின் குப்பைக் கூடை / வியாதிகளின் மேய்ச்சல் நிலம் / காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிவிட்ட மாமிச ஓவியம் / இறந்த காலத்தையே பாடும் கீறல் விழுந்த இசைத் தட்டு - என அவர் அடுக்குவதைக் கேட்டால் வயதானவர்கள்கூட இளமைக்குத் திரும்பிவிடுவார்கள்.

பெரும்பாலும் அவருடைய வாக்கியங்கள் ஒரு சூஃபியின் தன்மையைக் கொண்டிருக்கும். கிறக்கத்தின் உச்சத்திலிருந்து உதிர்ந்துவிழும் அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் ஏதோ ஒருவித லயமிருக்கும். பொதுவாகக் கவிஞர்கள் வார்த்தைகள் மீதுள்ள உச்சபட்ச மோகத்தினால் சொல்ல வரும் கருத்தை பாதியிலேயே விட்டுவிட்டு வேறு எங்கேயோ போய்விடுவார்கள். பாரதியும் தருமுசிவராமும் (பிரமிள்) கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஒருசில கட்டுரைகளில் அவர்களுமே பிறழ்ந்திருப்பதை அறியலாம்.

‘என் கதை’யில் ராமலிங்கம்பிள்ளையும் ‘வனவாச’த்தில் கண்ணதாசனும் உரைநடையை ஓரளவுக்கு எட்டிப்பிடித்தவர்கள் என்பார்கள். அந்தவிதத்தில், கவிக்கோவின் உரைநடை பிரத்யேகமானது. உரைநடைக்கு கவிதையின் அழகையும் கவிதைக்கு உரைநடையின் எளிமையையும் கொடுத்தவராக அவரைக் கருதலாம். வ.ரா.வைவிட கொஞ்சம் தூக்கலான கவிநடை கவிக்கோவினுடயது.

கவிக்கோவுடன் எழுத வந்த கவிஞர்களில் வேறு எவருமே அதிகமான உரைநடை ஆக்கங்களைப் படைக்கவில்லை. ஐந்தே ஐந்து சிறுகதைகளை கவிக்கோ எழுதியிருக்கிறார். நாவல் முயற்சியில் ஈடுபடும் ஆவலிருந்தது. அதற்குள் காலம் அவரைக் கவ்விக்கொண்டது. அவருடைய இலக்கியச் சொற்பொழிவுகள், இலக்கியக் கட்டுரைகளுக்கு நிகரானவை.

சொல்லும்விதத்தில் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபாடுடையது அவர் அணுகுமுறை. கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலான மொழியை அவர் வைத்திருந்தார். வார்த்தைகளை விரயமாக்காமல் சொல்ல வருவதைச் சொல்லிவிடுவார். சுண்டக்காய்ச்சிய பால்போல் எது இறுதியாக நிற்குமோ அதை மட்டுமே சொல்லுவார்.

உலக இலக்கியவாதிகளையும் இலக்கியக் கோட்பாடுகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அவர், ஆறாவது விரலென்று எழுதுகோலைச் சொன்னது ஆச்சர்யமில்லை. கஜல் கவிதைகளை இலக்கண சுத்தமாக எழுத ‘மான்கண்’ என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். அக்கட்டுரையை வாசித்தால் கஜலை கேட்கிற எல்லோருமே கஜல் கவிதைகளை எழுதிவிட முடியும். மிர்சா காலிப்பின் ஒரு முழு நீள கஜலை மொழிபெயர்த்து, அவர் விளக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

கஜலின் முதலிரண்டு அடிகள் ‘மத்லா’ என்பதும் இறுதியிரண்டு அடிகள் ‘மக்தா’ என்பதும் அவர் சொல்லாமல் என் போன்றோருக்குத் தெரிந்திருக்காது. முதலிரண்டு அடிகளின் இறுதிச் சீர்கள் இயைபுத் தொடையிலும், அடுத்து ஒன்று விட்டு ஒன்று இயைபுத் தொடையிலும் வர வேண்டுமென அவர் எழுதிக் காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கண்ணிகள் 5,7,9,11 என்று ஒற்றைப் படையில்தான் வரும் என்பதை துல்லியமாக வரையறுத்திருக்கிறார். மரபுப் பயிற்சி உள்ளவர்களால்தான் சீர்களைப் பிரித்து வடிவ நேர்த்தியைச் சொல்லமுடியும்.

அசை, சீர், தளை, தொடை ஆகியவற்றை ஒதுக்கி புதுக்கவிதைக்கு வெளிச்சம் பாய்ச்சியவரே கவிக்கோதான் என்றபோதும் சிக்கலான வரையறைகள் கொண்ட கஜலை, தமிழ் நிலத்தின் தன்மைக்கேற்ப மாற்றியமைக்காமல் உள்ளதை உள்ளவாறு புரியும்படி எழுத்துகளில் வகுப்பெடுத்திருப்பார். கவிக்கோ, எதைச் செய்தாலும் எதைச் சொன்னாலும் முதலில் அவர் அச்செயலையும் அச்சொல்லையும் ஒத்திகை பார்த்துவிடுகிறார்.

ஹைக்கூவைப் பற்றி ஆரம்பத்தில் எழுந்த எல்லாக் கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடிந்ததே அந்த ஒத்திகையினால்தான். ஆகச் சிறந்தவற்றை அறிவிக்கும்முன் அவை பற்றிய அறிதலையும் புரிதலையும் அவர் ஏற்படுத்திக்கொள்கிறார். பண்டாரம், பரதேசி, அன்னக்காவடி, துந்தணாக்காரன், பக்கீர்சா என ஒரு பட்டாளமே பாடித்திரிந்த தெருக்களில் வளர்ந்தவர் அவர். இல்லையென்றால், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களைப் பதம்பிரித்து அவரால் வெளியிட்டிருக்க முடியாது.

புதுக்கவிதையில் குறியீடு என்று முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்துகொண்டே, மூலை முடுக்குகளில் கேட்ட மக்களிசைப் பாடல்களில் வெளிப்பட்ட தெறிப்புகளை அவர் கவனித்தார். நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து நவீன இலக்கியத்துக்கான கச்சாப் பொருளைக் கண்டெடுத்தவர் அவர். சாந்தாராமின் ஒரு திரைப்படக் காட்சி, நம்மூர் நாட்டுப்பாடலுடன் ஒத்திருக்கும் அழகை இயக்குநர் லிங்குசாமி நூல் வெளியீட்டு விழாவிலும் நினைவு கூர்ந்தார்.

குச்சிகட்டி காக்கட்டா, குணமதியே உன் தடத்தை என்பது அப்பாடலில் வரும் வரிகள். திரைத்துறைக்கு வராமலேயே திரைத்துறையினரால் அதிகமும் கவனிக்கப்பட்ட கவிஞராக கவிக்கோ இருந்தார். மேடைகளிலும் பத்திரிகைகளிலும் தீவிரமாக இயங்கிவந்த அவர், சிற்றிதழ்களின் அரசியலில் பெரிதாக சிக்கிக் கொள்ளவில்லை. அவ்வப்போது கலை இலக்கிய விமர்சகர்கள் அவரையும் அவர் எழுத்துகளையும் காயப்படுத்தியிருக்கிறார்கள்.

அவருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தபோது, அவருடைய ஆலாபனை நூல் விருதுபெறத் தகுதியற்ற நூலென்று தலையங்கம் தீட்டினார்கள். வக்ஃபு வாரியத் தலைவராக அவர் பொறுப்பேற்றபோது, அவருக்கு எதிராக அவருடைய சமுதாயத்தவர்களே முடிவை பரிசீலனை செய்யச் சொல்லி முதல்வருக்கு மொட்டைக் கடுதாசி போட்டார்கள். எல்லாவற்றையும் அவர் எளிய புன்னகையால் புறந்தள்ளினார்.

கடந்த அறுபது ஆண்டுகளில் அதிகமான மேடைகளை ஆக்கிரமித்தவர் அவர் ஒருவர்தான். காலாவதியாகிக்கொண்டிருந்த கவியரங்குகளைக் காப்பாற்ற அவர் பட்டபாட்டை நானறிவேன். கொடுக்கப்படும் தலைப்பிலிருந்து எல்லாவற்றிலும் புதுமையைப் புகுத்த அவர் சிந்தித்துக்கொண்டே இருந்தார். அரபு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவருக்கிருந்த புலமை, தமிழில் அவர் செய்து பார்த்த பல பரிசோதனைகளுக்கு உதவி புரிந்தது. சூஃபி, கஜல், ஹைக்கூ வடிவிலான கவிதைகளை தமிழ் நிலத்தில் பரப்பிய பெரும் பணி
அவருடையது.

தொடர் சொற்பொழிவு மூலம் சீவக சிந்தாமணியையும் திருக்குறளையும் மக்களிடத்தில் கொண்டுசெல்ல அவர் எடுத்த முயற்சிகள் முடிவில்லாதது. பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவரோடு பழகியிருக்கிறேன். எப்போதுமே எந்த கோரிக்கையும் அவர் என்னிடத்தில் வைத்ததில்லை. இறுதி சந்திப்பில்தான் ஸ்ரேயா கோஷலைச் சந்திக்க விரும்பிய கோரிக்கையை வைத்தார்.

அதைக்கூட நிறைவேற்றும் வாய்ப்பில்லாதபடி காலம் மிகக் கொடூரமாக அவரை என்னிடமிருந்து பறித்துக்கொண்டது. நமக்கு எவ்வளவோ செய்தவர்கள், நம்மிடம் ஒரு உதவியைக் கோரும்போது அதை நிறைவேற்ற முடியாமல் போவதுதான் துக்கத்திலேயே பெரிய துக்கம். எந்த முடிவையும் நாம் எடுப்பதில்லை. அது, ஏற்கனவே யாராலோ எடுக்கப்பட்டுவிட்டது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்