‘FEFSI ஆட்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்னை தொடங்கினது எங்க ஷூட்டிங்லதான்



நடந்ததை விவரிக்கிறார் ஆர்.கே.சுரேஷ்

- மை.பாரதிராஜா

‘‘நான் ஆசைப்பட்டு டிஸ்ட்ரிபியூட்டரா வரல. தயாரிப்பாளர் ஆகல. எல்லா பயிற்சியும் எடுத்துக்கிட்டு நடிகனாகணும். இந்த கனவோடுதான் சினிமாவுக்கு வந்தேன். பொறுமையா, நிதானமா எனக்கான இடத்தை தேடினேன். ஒரு விநியோகஸ் தரானேன். ஐம்பது படங்கள் டிஸ்ட்ரிபியூட் பண்ணினதுல நிறைய கத்துக்கிட்டேன். இந்த அனுபவத்துல தயாரிப்பாளரானேன்.

இப்ப விக்ரம் சார், உதயநிதி சார், கலையரசன், கௌதம் கார்த்திக் நடிக்கிற படங்கள்ல நடிக்கிறேன். கூடவே ‘தனி முகம்’, ‘வேட்டைநாய்’, ‘பில்லா பாண்டி’னு நான் ஹீரோவா நடிக்கிற மூணு படங்கள். ஒரு நடிகனா ஃபார்ம் ஆகணும்னு விரும்பறேன்...’’ ‘வேட்டைநாய்’ ஷூட்டிங் பிரேக்கில் உற்சாகமாகப் பேசுகிறார் தயாரிப்பாளர் + நடிகர் + விநியோகஸ்தரான ஆர்.கே.சுரேஷ்.

உங்களோட ‘பில்லா பாண்டி’ ஷூட்டிங்லதான் ஃபெப்சி ஆட்கள் பிரச்னை தொடங்குச்சுனு ஒரு பேச்சு இருக்கு... உண்மைல அன்னிக்கு என்ன நடந்தது?
மதுரைல ஒரு வெள்ளிக்கிழமை அன்னிக்கு படப்பிடிப்பு ஆரம்பிச்சோம். அதுல ஒர்க் பண்ற ஃபெப்சி தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை சிங்கிள் பேட்டா கொடுக்கணும். ஞாயிறுன்னா டபுள் பேட்டா. நாங்க வெள்ளிகிழமை மட்டும் பேட்டா கொடுத்துட்டு, ரெண்டு நாள் பேங்க் இல்லாததால திங்கள் அன்னிக்கு சேர்த்து பேட்டா கொடுக்கலாம்னு இருந்தோம்.

ஆனா, அவங்க வெள்ளிக்கிழமையே ‘சென்னைல இருந்து மதுரை வந்ததுக்கு பயண பேட்டா வேணும்’னு கேட்டாங்க. ‘ஜர்னி பேட்டா, 400 கிலோ மீட்டர் வரை சிங்கிள் பேட்டா, அதைத் தாண்டினா டபுள் பேட்டா. இதுதான் ரூல்’னு பேசினாங்க. ‘வெறும் 30 கி.மீ.தானே அதிகமாகியிருக்கு. அதுக்கு எப்படி டபுள் பேட்டா கேட்பீங்க? கொடுக்க முடியாது’னு சொன்னேன். உடனே அவங்க ‘நாங்க ஷூட்டிங்கை நிறுத்திடுவோம்’னு சொல்லி ஸ்டாப் பண்ணிட்டாங்க.

இந்தத் தகவலை விஷால்கிட்ட சொன்னேன். ‘நீங்க கிளம்பி வாங்க. பாத்துக்கலாம்’னு சொன்னார். சென்னை வந்துட்டேன். உடனே ஆர்.கே.செல்வமணி சார்கிட்ட பேசினோம். காம்ப்ரமைஸ் பண்ணினோம். ஆனா, பேச்சுவார்த்தை எங்கெங்கோ போய்... அப்புறம் என்னாச்சுனு இண்டஸ்ட்ரீக்கே தெரியும். பயண பேட்டா சிஸ்டத்தை யார் கொண்டு வந்தாங்கனு தெரியாது. நாம ஒரு வேலையைத் தொடங்கறோம். அந்த வேலைக்காக பயணப்படறோம்.

டிக்கெட் வாங்கிக் கொடுத்தபிறகு  டிராவல் பேட்டா கேட்டா எப்படி? எந்த வேலைலயாவது பயண பேட்டா இருக்கா? படம் தயாரிக்கறது சாதாரண விஷயமில்ல. படம் எடுக்க அவங்களை கூட்டிட்டு போறோம். தங்க வைக்கறோம். வேளா வேளைக்கு சாப்பாடு போடறோம். பார்த்த வேலைக்கு சம்பளம் தர்றோம். அதைத் தவிர, டிக்கெட் போட்டுக் கொடுக்கறோம்.

இதையெல்லாம் தாண்டி எதுக்கு ஜர்னி பேட்டா கொடுக்கணும்? இந்த பயண பேட்டா ரொம்ப நாள் இருக்கிற விஷயம்தான். நானே விஜய் சேதுபதி நடிச்ச ‘தர்மதுரை’ தயாரிக்கிறப்ப கொடுத்திருக்கேன். ஆனா, படத்தோட செலவை அதிகரிக்கக் கூடிய தேவையில்லாத செலவுகளைக் குறைக்கணும்னு உறுதியாக இருக்கற தயாரிப்பாளர் சங்க தேர்தல்ல விஷால் அணில ஜெயிச்சிருக்கேன். இ.சி. மெம்பரா இருந்துட்டு நானே ஜர்னி பேட்டா கொடுக்கறது நியாயமா படலை. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன்.

இன்னி தேதில ரிஸ்க்கான தொழில்னா அது படம் தயாரிக்கறதுதான். பேங்க்ல கூட படம் தயாரிக்க லோன் கொடுக்கறதில்ல. ஃபைனான்சியர்ஸ்கிட்ட மூணு வட்டி, நாலு வட்டினு வாங்கித்தான் படம் பண்றோம். ஜி.எஸ்.டி. வந்த பிறகு வரி எக்குத்தப்பா எகிறுது. அப்புறம் டிஸ்ட்ரிபியூட்டர், எக்ஸிபியூட்டர்னு எல்லாம் போக தயாரிப்பாளருக்கு மிஞ்சி நிற்கறது கொஞ்சம்தான். அப்புறம் எந்த தைரியத்துல படம் எடுக்கறீங்கனு கேட்பீங்க. நாங்க எடுக்கற படம் ஓடும். ஜெயிக்கும் என்கிற ஒரே நம்பிக்கைதான் காரணம்.

விக்ரம், உதயநிதி படங்கள் எப்படி போயிட்டிருக்கு?
அருமையா போவுதுண்ணே... விக்ரம் சாரோட ‘ஸ்கெட்ச்’ல வில்லனா பண்றேன். ஸ்பாட்டுல எப்பவும் செம எனர்ஜியா இருப்பார். ஃபுட், ஃபிட்னஸ்னு அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். சினிமா பத்தி அவ்வளவு தகவல்கள் தெரிஞ்சு வச்சிருக்கார். சுருக்கமா சொல்றதா இருந்தா அவர் ஒரு ‘சினிமா வங்கி’. உதயநிதி சாரோட முதல் தடவையா ‘இப்படை வெல்லும்’ல பண்ணியிருக்கேன்.

ஒரு ஆர்ட்டிஸ்ட்டா களத்துல இறங்கினார்னா, சக நடிகர்களுக்கு அவர் கொடுக்கற அன்பும் அக்கறையும் மரியாதையும் பிரமிக்க வைக்குது. அதேமாதிரி கிருத்திகா உதயநிதி மேம் இயக்கற படத்துல விஜய் ஆண்டனிக்கு வில்லனா நடிக்கறேன். விஜய் ஆண்டனியை வச்சு நான் ‘சலீம்’ தயாரிச்சேன். இப்ப ‘காளி’ல ஒரு நடிகனா அவர்கிட்டயே சம்பளம் வாங்கினது மறக்க முடியாதது. ஹீரோவா நடிக்கிற ‘வேட்டை நாய்’ ஷூட்டிங் முடியப் போகுது. அறிமுக இயக்குநர் ஜெய்சங்கர் டைரக்ட் பண்றார். இதில் ‘கடுகு’ சுபிக்‌ஷா ஹீரோயின். அழகான குடும்பக் கதை. இதோட ஃபர்ஸ்ட் லுக்கை பாலா அண்ணன் வெளியிட்டதுல சந்தோஷம்.

நடிகர் - நடிகைகள் எப்பவும் அவங்க கூடவே நாலஞ்சு பேரை அழைச்சிட்டு வர்றாங்க. அவங்களுக்கு கொடுக்கற சம்பளத்தோட ஒப்பிடும் போது ஃபெப்சி தொழிலாளர்களுக்கு கொடுக்கறது ரொம்ப குறைவுதான்னு சொல்றாங்களே?
ஒரு நடிகன் அல்லது நடிகை தங்களோட அழைச்சுட்டு வர்ற டச்சப் பாய், அசிஸ்டென்ட், டிரைவர்னு எல்லாருமே அவசியமானவங்க. ஒரு சீன்ல நடிக்கிறப்ப வியர்க்கும். போட்டிருக்கிற மேக்கப் கலையும். அதெல்லாம் சரி பண்ணிட்டு ஷாட்டுக்கு திரும்புறதுக்கு டைம் எடுக்கும். ஸோ, டச்சப் பாய் வச்சுக்கறது இயக்குநர், தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பு செலவை, நேரத்தை குறைக்கத்தான் வழி செய்யும்.

அதே மாதிரி அவங்களுக்கு வர்ற போன், இதர விஷயங்களை கவனிக்க உதவியாளர் இருந்தாதான் அவங்களால டென்ஷன் இல்லாம படப்பிடிப்புல கவனம் செலுத்த முடியும். அப்புறம் அவங்க வந்துட்டுப் போக வாகனம்... டிரைவர். இதெல்லாம் அவசியம். நான் ஜர்னி பேட்டானு சொன்னது வெறும் ஜர்னி பேட்டானு இல்ல. எத்தனையோ விஷயங்கள் அதுல இருக்கு.

சினிமாவில் சின்னதா இருந்த தொகை பல்வேறு காலகட்டங்கள்ல பேசிப் பேசி கொஞ்சம் கொஞ்சமா ஏத்தி ஏத்தி இன்னிக்கு பெரிய தொகையா வந்து நிக்குது. ஒரு தயாரிப்பாளர் நல்லா சம்பாதிச்சாலோ இல்ல ரொம்ப செழிப்பா இருந்தாலோ இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்ல. ஜி.எஸ்.டி. டேக்ஸ், கமர்ஷியல் டேக்ஸ், சர்வீஸ் டேக்ஸ்னு போடாம இருந்தாலே போதும். சமாளிக்கலாம்.

இதுபோக சென்சார் சர்டி ஃபிகேட் வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது. இதையெல்லாம் தாண்டி ஒரு தயாரிப்பாளரால எப்படி ரெவன்யூ எடுக்க முடியும்? இப்ப இருக்கிற சூழல்ல ‘சேது’, ‘காதல்’, ‘அங்காடித்தெரு’ மாதிரியான படங்களை எடுக்க முடியாது. மூணு கோடி பட்ஜெட்ல எடுத்து ஒரு கோடி பப்ளிசிட்டி பண்ணி நாலு கோடில ரிலீஸ் பண்ணினா நாற்பது லட்ச ரூபாய் கூட வசூல் ஆகாது.

அதுவும் தியேட்டர்கள்ல இருந்து செக்காதான் கொடுப்பாங்க. அதோட அந்த தயாரிப்பாளர் ஊரு பக்கமே ஓடிப் போயிட வேண்டியதுதான். இதான் இன்னிக்கு இருக்கற சூழல். வருஷத்துக்கு முந்நூறு படம் ரிலீஸானா முப்பது படங்கள்தான் ஓடுது. மீதி 270 தயாரிப்பாளர்கள் நிலை என்னனு இந்த உலகத்துக்கே தெரியும். மிகப் பெரிய தயாரிப்பாளர்கள்ல பலர் நம்ம கண் முன்னாடியே காணாமப் போயிருக்காங்க. டிஜிட்டல் வந்ததால ஃபிலிமுக்கு ஆகற செலவு குறைஞ்சிருக்கு. சேட்டிலைட் வருமானம் இருக்கு. இப்படி இருக்கிற சில ஆறுதல்கள் மட்டுமே தயாரிப்பாளருக்கு ப்ளஸ்.