பலியாகும் பச்சிளம் குழந்தைகள்... கோரக்பூர் சொல்லும் பாடம்



- இளங்கோ கிருஷ்ணன்

இந்தியாவையே சென்ற வாரம் அலற வைத்த ஊர் கோரக்பூர்.  இங்கு உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவமனையில் 72 குழந்தைகள் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக இறக்க தேசமே பொங்கி எழுந்தது. மூளை செல்களில் பாதிப்பு ஏற்பட்டதுதான் காரணம் என்று முதலில் சொன்னது அரசு தரப்பு. பிறகு, ஆக்சிஜன் தரப்படாததுதான் காரணம் என செய்திகள் வரத்தொடங்கின.

ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்குத் தரவேண்டிய சில லட்சம் பாக்கியை முறையாகச் செலுத்தியிருந்தால் இந்த பிஞ்சுக் குழந்தைகளின் உயிர் இழப்பைத் தடுத்திருக்கலாம் என்று பெற்றவர்களும் சமூக ஆர்வலர்களும் குமுறுகிறார்கள். இந்தியாவில் மருத்துவத்துறை அசுர வேகத்தில் வளர்ந்துவருகிறது. உலகம் முழுதும் இருந்து மருத்துவம் செய்வதற்காக நோயாளிகள் இந்தியா வருகிறார்கள்.

குறிப்பாக, சென்னை, கோவை போன்ற தமிழக நகரங்களுக்கு வெளிநாட்டு நோயாளிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. நமது தேசத்தில் தயாராகும் சில மருந்துகள் ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றன.

இவை எல்லாம் நமது வளர்ச்சியின் ஒரு முகம் மட்டுமே. மருத்துத்துறை வளர்ந்த அளவுக்குத் தரமான மருத்துவம் அனைவருக்கும் பரவலாகக் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே கசப்பான பதிலாக இருக்கிறது. அதிலும் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் நம்மிடம் உள்ள அலட்சியம் கொடூரமானது.

சென்னையில் கடந்த ஆண்டு ஒரு தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தது நினைவிருக்கலாம். தர்மபுரி அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல குழந்தைகளின் துர்மரணம் நாட்டையே உலுக்கியது. ஒவ்வொரு முறையும் இப்படி பிஞ்சு உயிர்களை பலி தந்துதான் நாம் பாடம் கற்றுக்கொள்ளப் போகிறோமா? இது குறித்து மகளிர், மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி
முரளியிடம் பேசினோம்.

‘‘பிறந்து 45 நாட்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை நியோநேட்டல் என்போம். பச்சிளங் குழந்தைகள் இந்த பூமிக்கு வந்து அதிக நாட்கள் ஆகியிருக்காது என்பதால் இந்த பூமியின் சீதோஷ்ணம், சுற்றுப்புறச் சூழல் போன்றவை குழந்தையின் உடலுக்கு செட் ஆகியிருக்காது.

மறுபுறம் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலமும் பூரணமாக வளர்ந்திருக்காது என்பதால், பிறந்த குழந்தைகள் இந்த சூழலை எதிர்த்து போராட வேண்டியது இருக்கும். அதனால், அவர்களுக்கு மஞ்சள் காமாலை முதல் நிமோனியா வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்படியான சூழலில் குழந்தைகளை சிறப்பாகப் பராமரிக்க வேண்டியது அவசியம்.

நியோநேட்டல் வார்டுகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை என்பது மிக அடிப்படையானது. ஏனெனில், பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்ட குழந்தைகள், நிமோனியா, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்பு உள்ள குழந்தைகள், வலிப்பு ஏற்பட்ட குழந்தைகள், பிறவியிலேயே இதய பாதிப்பு உள்ள குழந்தைகள் போன்றவர்களுக்கு செயற்கை ஆக்சிஜன் செலுத்த வேண்டிய தேவை எந்த நேரத்திலும் ஏற்படக்கூடும்.

நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் உயிர்ப்புடன் இயங்க ஆக்சிஜன் இன்றியமையாதது. உடலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும்போது செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. குழந்தைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் மூன்று நிமிடங்களுக்குள் செயற்கை ஆக்சிஜன் தரப்பட வேண்டும்.

இதை கோல்டன் ஹவர் என்பார்கள். இந்த கோல்டன் ஹவருக்குள் ஆக்சிஜன் தரப்படாவிட்டால் மூளை செல்கள் பாதிக்கப்படும். இது கோமா முதல் மரணம் வரை செல்லும் தீவிரமான பிரச்னை. பொதுவாக, பெரிய மருத்துவமனைகளில் ஆக்சி ஜன் சப்ளையை சென்ட்ரலைஸ்டு செய்திருப்பார்கள். குழந்தைகள் வார்டு என்று இல்லாமல் அனைத்து வார்டுகளுக்குமே ஆக்சிஜன் சப்ளை என்பதற்கான வாய்ப்பு இருக்கும். எனவே, இவர்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை என்பதும் பெரிய அளவில் இருக்கும்.

தனியார் மருத்துவமனைகள் மட்டுமல்ல, சிறிய கிளினிக் என்றால்கூட போதிய உட்கட்டமைப்புகள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் நோயாளிகள் நுகர்வோர் நீதிமன்றங்களை நாட முடியும்.

அரசு மருத்துவமனைகளில் இதற்கு எல்லாம் எந்த வாய்ப்பும் இல்லை. இங்கு போதிய உட்கட்டமைப்புகள் இருந்தாலும் பணிபுரிபவர்களின் அலட்சியத்தால் இதுபோன்ற துர்மரணங்கள் நேர்கின்றன. அப்போது அரசு இழப்பீடு என்ற பெயரில் ஏதேனும் ஒரு தொகையைத் தந்து பாதிக்கப்பட்டவர்களின் வாயை அடைக்கிறது. உண்மையில், கோரக்பூர் போன்ற சம்பவங்கள் அந்த மாநில அரசின் நிர்வாக அமைப்பின் தோல்வியையே குறிக்கிறது...’’ என்று ஆதங்கப்பட்டார் மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி முரளி.                                 

குழந்தைகளுக்கான சிகிச்சையில் தமிழகத்தின் இப்போதைய நிலை

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு 150 மருத்துவர்கள் சேவையில் உள்ளார்கள். 64 புதிதாய் பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் மாநிலம் முழுதும் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகள் மூலமாக நிறுவப்பட்டுள்ளன. 42 இரண்டாம் நிலை சிகிச்சை மையங்கள் மாவட்டம் மற்றும் துணை நிலை மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன.

114 பச்சிளங் குழந்தைகளுக்கான கண்காணிப்பு மையங்கள் புதிதாய் நிறுவப்பட்டுள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவது வட மாவட்டங்களில்தான் அதிகம். இதைக் கருத்தில்கொண்டு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரம்பலூரில் ஊட்டச்சத்து மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இன்குபேட்டர் மற்றும் குழந்தைகளின் அவசர சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் கொண்ட 29 நியோநேட்டல் ஆம்புலன்ஸ்கள் தமிழகம் முழுதும் உள்ளன. தமிழகத்தில் ஒரு லட்சத்தில் 21 குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்துக்குள்ளாக இறப்பதாக ஓர் அறிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, பிரசவ கால சிக்கல்கள் உட்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இப்போது சுகாதாரத்துக்கு என பட்ஜெட்டில் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. தற்போதைய தேவைகளின் அடிப்படையில் இது சுமார் 5 சதவிகிதமாவது இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மருத்துவ ஆக்சிஜன்!

நாம் சுவாசிக்கும் காற்றில் 20% வரை ஆக்சிஜன் இருக்கும். நோயாளிகள் உடல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும்போது செயற்கை ஆக்சிஜன் தருவதை ஆக்சிஜன் தெரப்பி என்பார்கள். இதில், 100% வரை வெறும் ஆக்சிஜன் மட்டுமே இருக்கும். செயற்கை ஆக்சிஜன் பயன்படுத்தி உயிரைக் காப்பாற்றும் வழக்கம் 1800களிலேயே தொடங்கிவிட்டாலும் 1917க்குப் பிறகுதான் உலகம் முழுதும் பரவலாகப் புழக்கத்துக்கு வந்தது.

ரத்தத்தில் ஆக்சிஜன் விகிதம் குறையும்போதும், கார்பன் மோனாக்சைடு எனும் விஷம் அதிகமாக இருக்கும்போதும் இன்னும் சில உயிர் காக்கும் தருணங்களிலும் தரப்படும் இந்த ஆக்சிஜன் சி.ஓ.பி.டி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் போன்ற நாட்பட்ட பிரச்னை உள்ளவர்களுக்கு நீண்ட கால சிகிச்சையாகவும் தரப்படுகின்றன. நாசித் துவாரங்களின் வழியே செருகுதல், ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துதல் போன்ற இரு வழிகளில் ஆக்சிஜன் தெரப்பி தரப்படுகிறது.