நேர்மை என்றால் சரஹாஹ்! - அசத்தும் புது App



- ஷாலினி நியூட்டன்

இந்த டெக் உலகம் நாள் ஒரு ஆப்பும் பொழுதொரு ட்ரெண்டுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. இதோ இப்போது ஒரு புதிய ஆப் உலகம் முழுதும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் சரஹாஹ். அலுவலகத்தில் உங்க பாஸ் மேல் உங்களுக்கு செம காண்டு என்றாலோ உங்க நண்பரோ உறவினரோ உங்களுக்குப் பிடிக்காததைச் செய்தாலோ அதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் அவதிப்படுவோம் இல்லையா? இப்படி நீங்கள் மனதில் நினைக்கும் விஷயங்களை சம்பந்தப்பட்டவரிடம் உங்கள் பெயர், முகம் தெரியாமல் தெரிவிப்பதற்கான ஆப்தான் சரஹாஹ்.

ஆமாம், பழைய மொட்டைக் கடிதாசிதான் புதிய டிஜிட்டல் வடிவில் வந்திருக்கிறது. ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் சரஹாஹ் கேள்விக் கணைகள் சரமாரியாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. பிரபலங்கள் முதல் சாதாரணமானவர்கள் வரை நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என நகம் கடித்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்; மனம் திறந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சரஹாஹ் எப்படி இயங்குகிறது?
கூகுள் பிளே ஸ்டோரில் Sarahah என டைப் செய்தவுடன் ஒரு லெட்டர் சிம்பலுடன் கூடிய ஆப் ஒன்று ஹலோ சொல்லும். அதைத் தரவிறக்கம் செய்ய வேண்டும். உங்கள் மெயில் ஐடி, சரஹாஹ் ஆப்பில் உங்கள் பெயர் என்னவாக இருக்க வேண்டும் என முடிவு செய்து user name, பாஸ்வேர்டு கொடுத்து ஓபன் செய்தால் xxx@sarahah.com எனும்படியான ஒரு இணைய முகவரி கிடைக்கும்.

அதை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், மற்றும் இன்ஸ்டா என எங்கும் எதிலும் பகிர்ந்து என்னிடம் கேளுங்கள் எனத் தட்டினால் போதும்; மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். பதில் சொல்ல வேண்டியது உங்கள் பாடு. இதில் வரும் கேள்விகளை send பட்டனை அழுத்தினால் எந்தத் தளத்தில் பகிரவேண்டும் என ஆப்ஷன்கள் கிடைக்கும். விருப்பப்பட்ட தளத்தில் இதைப் பகிரலாம்.

யார் இதைக் கண்டுபிடித்தது?
இதுவரை சுமாராக 10 மில்லியன் டவுன்லோடுகளைக் கடந்திருக்கிறது சரஹாஹ். முக்கியமாக ஃபேஸ்புக், இன்ஸ்டா மக்களை அதிகம் கவர்ந்திருக்கும் இந்த ஆப்பை சவூதி அரேபியாவின் Zain Alabdin Tawfiq என்னும் இளைஞர் கண்டறிந்துள்ளார். கிங் ஃபஹத் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் படிப்பை முடித்துவிட்டு, இப்போது சவூதி அரேபியாவில் சவூதி அராம்கோ என்னும் நிறுவனத்தில் சிஸ்டம் அனலிஸ்ட்டாக அவர் பணிபுரிகிறார். பலவித போராட்டங்களுக்குப் பிறகு அவரைக் கண்டுபிடித்தோம்.

“எனக்கு கம்ப்யூட்டர் புரோகிராமிங் சொல்லிக் கொடுத்ததே இந்தியாதான். என்னுடைய முதல் கம்ப்யூட்டர் வேலையே விப்ரோவில்தான். படிப்பை முடித்துவிட்டு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும்போதுதான் ஒருத்தர் மற்றவர்களிடம் பேசுவதற்குக் கடினமான சூழல் நிலவுவதைப் பார்த்தேன். வயது, படிப்பு, எண்ணங்கள் எல்லாமே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

இந்த இடைவெளியை உடைக்க நினைத்தேன். ஒருவர் மற்றவரைப் பற்றி மனம் திறந்த கமெண்டைக் கொடுக்க ஒரு தளம் வேண்டும் என நினைத்தேன். முகம், பெயர் தெரியாமல் இருந்தால்தான் வெளிப்படையான கேள்விகள் கேட்கப்படும் என்பதால் அதற்கேற்ப சரஹாஹ் தளத்தை வடிவமைத்தோம்.

சமீபத்தில் இந்தியாவில் இந்த ஆப் பிரபலம் என்பதை நினைக்கும்போதே சந்தோஷமாக உள்ளது...’’ என்ற Zain Alabdin Tawfiq-இடம் ‘சில சமயங்களில் Sarahah App லாக் ஆகிவிடுகிறதே...’ என்று கேட்டோம். “ஒரு 12 மணி நேரம் காத்திருந்தால் போதும். மீண்டும் சரியாகிவிடும். இப்போதைக்கு ஆப் செயல்பாடுகளில் பிரச்னை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம். புது ஆப்ஷன்கள் இப்போதைக்கு இல்லை. ஆனால், நிச்சயம் புதிய ஆப்ஷன்கள் எதிர்காலத்தில் இருக்கும். அதற்கான வேலைகள் நடக்கின்றன. 

பெயர், முகவரி தெரியாமல் கமெண்ட் செய்யலாம் எனச் சொன்னாலே நிறைய பிரச்னைகளும் வரும். அதற்காகவே, ப்ளாக், ரிப்போர்ட் ஆப்ஷன் கொடுத்துள்ளோம். ஆனால், அதை எப்படி ப்ளாக் செய்கிறீர்கள் அல்லது உண்மையாகவே ப்ளாக் செய்தால் பிரச்னை இருக்காதா என்னும் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியாது. ஏனெனில், சொன்னால் ரகசியங்களும் சுவாரஸ்யங்களும் உடைந்துவிடும்.

இதைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் உண்டாகும்...’’ எனக் கண் சிமிட்டுகிறார் ஸெயின் அலப்டின் தெளஃபிக். திடீரென இந்த மாதம் முதல் சரஹாஹிவில் கேள்வி கேட்பவர்களின் பெயர்கள் இனி பகிரப்பட உள்ளது என்ற வதந்தி பரவலானது. உண்மையில் நடந்தது என்னவென்றால், சரஹாஹ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் உங்களுக்கு கமெண்ட்கள் செய்யும் நபர்களின் பெயர்களை வெளியிடலாமா எனக் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு பெரும்பாலும், ‘வேண்டாம். இந்த ஆப்பின் சிறப்பே ‘யார் என்று தெரிகிறதா? எனும் த்ரில் மொமென்ட்கள்தான். அதை உடைத்து விடாதீர்கள்’ எனச் சொல்லி உள்ளார்கள். இதனால் நிச்சயம் சரஹாஹ் கமெண்ட்டாளர்களின் பெயர்களை வெளியிடாது என நம்பலாம். சில நாடுகளில் இந்த ஆப் டீன் பருவத்தினரை மனரீதியாகப் பாதிப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

டேட்டிங், செக்ஸ் என ஒப்பனாக அழைப்புகள் இதில் விழுவதால் மனதளவில் கொஞ்சம் பிரச்னைகளும் உருவாகின்றன. எதற்காக இந்த ஆப் என சில சமூக ஆர்வலர்களும் கேள்விகள் எழுப்பிவருகிறார்கள். ‘உலகமே நல்லது கெட்டது இரண்டும் நிறைந்ததுதானே. நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள், கெட்டதை ப்ளாக் செய்யுங்கள்’ என்கிறது சரஹாஹ் பயனீட்டாளர்கள் வட்டாரம்.