நம் கண்முன்னே இருக்கிற மனிதர்களின் எளிமையான வாழ்வுதான் மேயாத மான்



கசிந்து உருகுகிறார் அறிமுக இயக்குநர் ரத்னகுமார்

-நா.கதிர்வேலன்

‘‘எனக்கே எனக்காக, மனதுக்கு உகந்ததாக படம் பண்ணணும்னு ஆசை. எல்லாக் கதையையும் சொல்லியாச்சோன்னு எப்பவும் ஒரு சந்தேகம் இருந்துகிட்டே இருக்கும். ‘அப்படியில்லை’ன்னு இந்தப் படம் பார்த்தால் தோணும். நம்மைச் சுற்றி அன்பு மட்டுமே இருந்த காலங்கள் எங்கே? எல்லாமே ஸ்டேட்டஸ் பார்த்துத்தான் வருது. வாழ்க்கையின் எல்லா கட்டங்களையும் இயந்திரமயமாக்கிட்டோம். எளிமையான மனிதர்களிடம் சந்தோஷமான தருணங்கள் நிறைய இருக்கிற படம்தான் இது.

என் கைக் காசையெல்லாம் போட்டு ‘மது’னு ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பார்த்திட்டு ரொம்ப பாராட்டினார். பெருந்தன்மையா அதை அவரோட ‘பென்ச் டாக்கீஸ்’ படத்தில் சேர்த்துக்கிட்டார். நிறைய பாராட்டுகள் குவிந்தது. ‘மது’வை விரிவுபடுத்தின வெர்ஷன்தான் ‘மேயாத மான்’. இதை கார்த்திக் சுப்புராஜே மனமுவந்து தயாரிக்கிறார்...’’ ஆர்வமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ரத்னகுமார்.

இவ்வளவு உழைப்பிற்கு என்ன இருக்கு ஸ்கிரிப்ட்டில்?
நான் சினிமா மேல உயிரா இருக்குற ஆள். எங்க அப்பா முருகக்கனி சினிமாவுல சிலம்பாட்டம் சொல்லிக் கொடுக்கிறார். ‘தினகரன்’ நாளிதழில் ரொம்பநாள் ரிப்போர்ட்டராக இருந்தவர். சாமானிய மக்களின் வாழ்க்கை ரசனையும் இயல்புமா இருக்கும். அதை படமா எடுத்துக் காட்டணும்கிற பிரியத்தால் செய்திருக்கேன்.

இதற்கு முன்னாடி குறும்படங்கள் சினிமாவாக மாறிப்போனது நடந்திருக்கு. ‘பண்ணையாரும் பத்மினியும்’ அப்படியொரு படம்தான். இது ராயபுரம், காசிமேட்டில் இருக்கிற ஒரு பையனோட கதை. அவங்க வாழ்க்கை எப்பவும் அழகு. அங்கே ஒவ்வொரு தெருவும் சந்தோஷமான விஷயங்களால் உற்சாகமா இருக்கும். அதே நேரம் வருத்தமான ஒரு இழப்புன்னா ஒண்ணா சேர்ந்து உதவும்.

அங்கேயிருக்கிற ஒவ்வொரு இளைஞன்கிட்டேயும் ஒரு வித்தை இருக்கு. சொந்தமா ட்யூன் போட்டு பாட்டு எழுதுவாங்க. அவங்களே அதிரடியாக ரகளையோட பாடுவாங்க. அவ்வளவு ரசனையாக ஆடத் தெரியும். மியூசிக்கில் அத்துபடியா இருப்பாங்க. தபேலா வாசிக்கத் தெரியும். மாலியின் ஃப்ளூட் மாதிரி ஆங்காங்கே இசை மிதந்து வரும். அப்படி ஒரு இடத்தில இருக்கிற வைபவ் ‘மேயாத மான்’னு ஒரு இசைக்குழு நடத்துகிறார். அவர் சம்பந்தப்பட்ட வாழ்க்கை, காதல், பாட்டு, டான்ஸ்னு சும்மா கலகலன்னு இருக்கும்.

வைபவ் ரொம்ப நாளைக்குப் பிறகு தனியா ஹீரோவாக பண்றார்...

ஆமாம். இதுக்கு முன்னாடி வைபவ் நடிச்சிருக்காருன்னா ‘எத்தனை பேரோட’னு  கேப்பாங்க. அவரே நடிப்பில் கனிஞ்சு ஓர் இடத்திற்கு வந்திட்டார். அவரு தனியா வரணும்னு நினைச்ச வேளையில் எங்களுக்கும் அவர் நினைப்பு வந்தது. முன்னாடியே அவர் அறிமுகம். அவர் ‘மது’வை பார்த்திருக்கார். வேற படங்கள் கமிட் ஆகாமல் ஒத்துழைத்தார். இதற்கான கெட்டப்பில் நாலைந்து மாதங்கள் இருந்தாகணும். வசதியான குடும்பத்திலிருந்து வந்திருந்தும் ஒரு பிகு இல்லை. இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தார்.

படம் நல்லா வரணும் என்பதில் மட்டுமே அவர் ஆர்வம் இருந்தது. 15வது மாடியில் நெருப்பு வெயிலில் கூட படுத்துக்கிடந்தார். ஒரு புதுமுகம் அளவிற்கான உழைப்பு. படத்தில் நிச்சயம் வேற வைபவ்வை பார்க்க வாய்ப்பு இருக்கு. டிரைலரில் கிடைச்ச வரவேற்பில் நிறையப்பேர் இந்த வார்த்தையை குறிப்பிட்டாங்க. நல்ல சந்தோஷமான இடங்களில் அருமையாக நடிச்சிருக்கார். சிரிக்கும்போது யாருமே வேறொரு அழகில் வந்துடுவாங்க. கண் மூடி முகம் சுருங்கி சிரிச்சாலும் அது அழகுதான். எதையும் ஆற்றிவிடுகிற அழகு நகைச்சுவைக்கு உண்டு. அந்த இடத்திலும் வந்து நிற்கிறது ‘மேயாத மான்.’

டிவி பொண்ணை கொண்டு வந்திட்டீங்க...
வெறும் பாடல்களுக்கு மட்டும் வந்திட்டு, நாலே வரி பேசிட்டுப் போற ஹீரோயின் இல்லை. தமிழ் தெரிஞ்சிருக்கணும். கொஞ்சம் உள்வயமா போற சில இடங்கள் படத்துல இருக்கு. நடிக்கவும் தெரியணும். எனக்குத் தெரிஞ்சவங்க, என் குறும்படம் பார்த்தவங்க சொன்ன பெயர் ‘இந்த ரோலுக்கு ப்ரியா பவானிசங்கர் எப்படி இருப்பாங்க’ என்பதுதான்.

என் வீட்டில் தம்பிகிட்டே கேட்டால் ‘அவங்க ஓகே சொல்வாங்களா பாரு’ன்னு சொல்லிட்டுப் போறான். இளைஞர்களுக்குப் பிடிக்குது. அவங்க வாசிச்சா நியூஸ் பார்க்கிற கூட்டமே இருந்தது. தப்பா புராஜெக்ட் ஆகலை, தப்பாவும் புராஜெக்ட் பண்ணிக்கலை. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி சீன்ஸ் ஒத்திகையெல்லாம் பார்த்துக்கிட்டோம். அதற்கு நம்ம ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் அருமையா ஒத்துழைச்சாங்க.

பாடல்கள் பின்னுது...
புதுசா ஒருத்தரை அறிமுகப்படுத்தணும்னு நினைச்சோம். பிரதீப்குமார் அருமையாக செய்திருக்கார். சந்தோஷ் நாராயணன் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜுக்கு உற்ற நண்பர். ‘எனக்கு கதை சொல்ல மாட்டிங்களா பிரதர்’னு செல்லக் கோபம் காட்டினார். சொன்னா அவருக்கும் பிடிச்சுப் போச்சு. ஆக, பிரதீப்குமார், சந்தோஷ் நாராயணன் இரண்டு பேரும் சேர்ந்து விளையாடி இருக்காங்க. இப்ப வருகிற படங்களில் பாடலுக்கான இடம் ரொம்ப குறைவாகிவிட்டது. மூணு பாட்டு இருந்தாலே அதிகம்.

இதில் ஏழு பாடல்கள் இருக்கு. குதூகலமும் சந்தோஷமும், கொண்டாட்டமுமாக இருக்கும். ஒருத்தரையும் எந்திரிச்சு போகவிடமாட்டோம். இதில் வைபவ்வின் தங்கச்சியாக நடிக்கிற சிந்துஜாவுக்காக ஒரு தங்கை பாட்டு இருக்கு. சிம்பு, பொண்டாட்டிக்குக் கூட பாட்டு போட்டுட்டார். அம்மாவிற்கு அனேக பாடல்கள் இருக்கு. தங்கச்சிக்கு சென்டிமென்ட்டா, சோகமா, அழுகையா மட்டுமே பாடல் இருக்கு. இதில் நம்ம வீட்ல தங்கச்சிக்கு இருக்கிற ரோலை அருமையாக விவேக் பாடலாக எழுதியிருக்கிறார். அனேகமாக எல்ேலார் வீடுகளிலும் இனிமேல் இந்தப் பாடல் ஒலிக்க வாய்ப்பு இருக்கு.

இன்னும் வேறென்ன அம்சங்கள்...
காலேஜ் முடிச்ச பொண்ணா வர்ற ப்ரியா, வைபவ்வுக்கு அறிமுகமாகிற இடங்கள் சுவாரஸ்யமானவை. அப்புறம் இந்த விவேக் பிரசன்னா. ராஜீவ்மேனனிடம் உதவி கேமராமேனாக இருந்தவர். ‘மது’ குறும்படத்தில் நண்பனாக நடிச்சார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி காலையில விஜய் சேதுபதிகிட்டே இருந்து போன். ‘யாரு பிரதர், அந்த ஃப்ரண்ட் கேரக்டர்?’னு கேட்டார். டைரக்டர் வாய்ப்பு தேடும்போது ஒரு சிடியை அவர்கிட்டே தள்ளிவிட்டிருந்தேன்.

விவேக் பிரசன்னா பத்தி சொல்லிட்டு, ‘கேமராமேனாக ட்ரை பண்ணுறார்’னு சொன்னேன். ‘கேமராவைத் தூக்கி அந்தப் பக்கம் வைச்சிட்டு என்னை வந்து பாக்கச் சொல்லுங்க பிரதர்’னு சொல்லிட்டு, அவரை ‘சேதுபதி,’ ‘விக்ரம் வேதா’னு தொடர்ந்து தன் படங்களில் நடிக்க வைச்சு அழகு பார்க்கிறார். இதிலேயும் விவேக்கிற்கு அருமையான ரோல். எங்கோ கண்காணாத பிரதேசத்தில் நடக்கிற கதையல்ல. நம் கண்முன்னே இருக்கிற மனிதர்களின் எளிமையான வாழ்வுதான் ‘மேயாத மான்’.