விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 41

‘‘இதைத்தானே தாரா முட்டையை வேக வைச்சு ஓட்டை பிரிக்கிறப்ப பார்த்தா..?’’ ஐஸ்வர்யாவின் காதில் கிருஷ்ணன் கிசுகிசுத்தான். அது ஆதியின் செவியையும் அறைந்தது. எதுவும் பேசாமல் அவர்கள் இருவரையும் பார்த்தான். அவ்வப்போது அவன் கண்கள் ‘KVQJUFS’ எழுத்தை ஸ்கேன் செய்யவும் தவறவில்லை.

‘‘ஆமா...’’ ஆமோதித்த ஐஸ்வர்யா, தன் தலையை திருப்ப முற்பட்டாள். கார்க்கோடகரின் வால் நுனி மூவரையும் அழுத்தமாகப் பிடித்திருந்ததால் அவளால் திரும்ப முடியவில்லை. முடிந்தவரை தலையை மட்டும் சாய்த்து குரல் கொடுத்தாள். ‘‘ஆதி...’’ ‘‘ம்...’’ ‘‘இதுதானே உங்க அமைப்போட சங்கேத சொல்!’’ ‘‘...’’ ‘‘ஏன் நிறுத்திட்ட ஐஸ்... ஆதி கொலை செய்ய பயன்படுத்தற ஆயுதத்துலயும் இதே எழுத்துக்கள்தான் பொறிக்கப்பட்டிருக்கு.

அவனே இதை சொல்லியிருக்கானே... அதையும் சேர்த்து சொல்லு...’’ ‘‘என்ன கிண்டல் பண்ணறியா க்ருஷ்...’’ ஆதி வாயைத் திறந்தான். ‘‘கார்க்கோடகரும் எங்க அமைப்பை சேர்ந்தவர்தானே? அவர் உடம்புல...’’ ‘இந்த சொல் இருக்கறதுல என்ன ஆச்சர்யம்...’ என்று வாக்கியத்தை முடிக்க நினைத்தான். ஆனால், அவனால் முடியவில்லை.

இனம் புரியாத உணர்வுகள் ஆதியின் முகத்தில் தாண்டவமாடின. அதை மற்ற இருவரால் பார்க்க முடியவில்லை. ஆனால், வாக்கியம் துண்டாக நின்றதுமே எதையோ பார்த்த அதிர்ச்சியில் ஆதி இருக்கிறான் என்பதை கிருஷ்ணன் உணர்ந்தான். அது என்ன என்று தெரிய வேண்டும். ஒருவேளை அது அர்ஜுனனின் வில் தொடர்பான க்ளூவாக இருந்தால் தங்கள் பார்வையில் படாதபடி அதை ஆதி மறைத்து விடுவான். இதற்கு இடம் தரக் கூடாது.

சட்டென்று ஐஸ்வர்யாவை இறுக்கினான். அவள் என்ன ஏது என சமாளித்து முறைப்பதற்குள் சட்டென்று தன் உடலை குறுக்கி வளைத்து ஆதியின் பக்கம் திரும்பினான். அதாவது ஆதியின் பார்வை பதிந்த இடத்தை துல்லியமாக தன் பார்வை நோக்கும் வகையில் தன் உடலைக் கொண்டு வந்தான். கிருஷ்ணனின் கணிப்பு வீண்போகவில்லை. ஆதியின் பார்வை எதிர்பார்த்தது போலவே ஓரிடத்தில் பதிந்திருந்தது.

அது என்ன இடம் என தன் கருவிழியை கிருஷ்ணன் திருப்பினான். KVQJUFS. கார்க்கோடகரின் உடலில் தென்பட்ட இந்தச் சொல்லைத்தான் ஆதி ஆராய்ந்து கொண்டிருந்தான். கிருஷ்ணனுக்குள் பொறி தட்டியது. இதுவரை நடந்த உரையாடல் முழுக்க ‘KVQJUFS’-வை மையம் கொண்டிருந்தன. எனவே அந்த அடையாளம் மூவருக்குமே மர்மமல்ல. சொல்லப்போனால் ஆதிக்கும் தனக்கும் அதை காண்பித்த ஐஸ்வர்யாவிடம் கூட தங்கள் அமைப்பின் சங்கேத சொல்தான் அது என்றே அவன் ஆமோதித்தான்.

அப்படியிருக்க எதற்காக ஏதோ காணாததை கண்டதுபோல் இப்படி அந்த ‘KVQJUFS’-வை ஆராய்கிறான்? அலசுகிறான்? அப்படியென்ன அதில் இருக்கிறது..? ஆதி எதைக் காண்கிறானோ அதை தானும் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியுடன் யோசனையை அறுத்துவிட்டு தன் கருவிழியை அந்தச் சொல்லின் மீது கிருஷ்ணன் பதித்தான். வித்தியாசமாகவோ அல்லது புதிதாகவோ எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் தன் கருவிழியை ஆதியை நோக்கி நகர்த்தினான்.

இமைக்கக் கூட மறந்து தன் அலசலை, ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தான். சம்திங் ஃபிஷ்ஷி. மேலும் உடலைக் குறுக்கி வளைத்தான். கோபத்துடன் எதையோ சொல்ல வந்த ஐஸ்வர்யாவின் வாயைப் பொத்தி அடக்கினான். கிருஷ்ணனின் செயல்கள் எதுவும் தன் உடலை, பெண்மையை பயன்படுத்திக் கொள்ள முற்படும் ஆணின் செயலல்ல என்பதையும், எதையோ கண்டறியவே இவ்வளவு மெனக்கெடுகிறான்... உராய்கிறான் என்பதையும் ஐஸ்வர்யா மைக்ரோ நொடியில் புரிந்துகொண்டாள்.

அவனது செயல்களை விட அவன் உடல் அதை பொட்டில் அறையும் படி உணர்த்தியது. எனவே தன் பங்குக்கு உடலைக் குறுக்கி வளைத்து நெளித்து கிருஷ்ணன் அசையவும், நகரவும் இடம் கொடுத்தாள். இதைக் கச்சிதமாக அவனும் பயன்படுத்திக் கொண்டான். தன் நன்றியை அவளுக்கு தெரிவிக்கும் விதமாக புன்னகையை உதிர்த்தான். சரியாக தன் பார்வையை லென்சாக மாற்றி ‘KVQJUFS’ மீது பதித்தான்.

கவரும்படி எதுவும் தென்படவில்லை. அதற்காக சோர்வடையவும் இல்லை. இருக்கிறது... ஏதோ... அதனால்தான் ஆதி இப்படி பேயறைந்ததுபோல் ஆராய்கிறான். என்ன அது..? மனமே சஞ்சலப்படாதே. அமைதியாக இரு... சுவாசத்தை சீராக்கினான். உடலின் ஒவ்வொரு அணுவையும் ஒருமுகப்படுத்தினான். இமைக்கவும் மறந்து ‘KVQJUFS’-வை உற்றுப் பார்க்கத் தொடங்கினான்.

ஒவ்வொரு எழுத்தும்... அல்லது சொல்லா... எதற்கு வம்பு?  எழுத்துகள் என வைத்துக் கொள்வோம்... சராசரி மனிதன் எழுதுவதுபோலவே கார்க்கோடகரின் உடலில் பதியப்பட்டிருந்தது. என்ன... கொஞ்சம் கனமாக. பட்டையாக. இதைத் தாண்டி வேறென்ன இருக்கிறது..? குழப்பத்துடன் ஆதியை ஏறிட்டான். அந்த இடத்திலேயே அவன் இல்லை. நடப்பது எதையும் - அவன் அருகில், தான் வந்தது உட்பட - அவன் கவனிக்கவில்லை.

பொருட்படுத்தவில்லை. பார்வையையும் அந்த இடத்திலிருந்து விலக்கவில்லை. புருவங்கள் சுருங்குவதும் விரிவதுமாக இருந்தன. ஆச்சர்யமும் பிரமிப்பும் அதிர்ச்சியும் மாறி மாறி அவன் முகத்தில் நர்த்தனமாடின. விடை தேடும் பொருட்டு மீண்டும் ‘KVQJUFS’ பக்கம் தன் கருவிழியைக் குவித்தான். அநேகமாக அது ஆசீர்வதிக்கப்பட்ட தருணமாக இருக்க வேண்டும். ஏனெனில் கார்க்கோடகர் தன் உடலை நெளித்து விரித்தார்... தூக்கிவாரிப் போட்டது. மை காட், கிருஷ்ணன் தன் உள்ளங்கையை மடக்கி முறுக்கினான்.

கண்டது கனவா? இல்லை என்றது ஆதியின் விரிந்த விழிகள். சட்டென்று ‘KVQJUFS’-வைப் பார்த்தான். முந்தைய நொடி தனக்கு தரிசனம் தந்த காட்சி இப்போது அங்கில்லை. அப்போதுதான் கிருஷ்ணனின் மூளையில் ஃப்ளாஷ் அடித்தது. கார்க்கோடகர் வளைந்தபோதுதான் அந்தக் காட்சி கண்முன் விரிந்தது. எனில் மீண்டும் அவரது நாக உடல் வளைந்து விரிய வேண்டும்.

ஒரு முடிவுடன் தம் கட்டி ஐஸ்வர்யாவையும் ஆதியையும் அணைத்தபடி அசைந்தான். இந்தக் குலுங்கலை கார்க்கோடகர் எதிர்பார்க்கவில்லை. அதைச் சமாளிக்க வளைந்து விரிந்தார். கிருஷ்ணன் எதிர்பார்த்த தரிசனம் இம்முறை துல்லியமாகக் கிட்டியது. ‘KVQJUFS’ என்ற 7 எழுத்துகளுக்குள் கைரேகை பளிச்சிட்டது. இதைக் கண்டுதான் ஆதி அதிர்ச்சியடைகிறான். அப்படியானால் விஜயனின் வில் இருக்கும் இடத்தை திறப்பதற்கான சாவி இந்த கைரேகைதானா..?

(தொடரும்)


ஓவியம்: ஸ்யாம்