அப்பா அம்மா மகள்



- நா.கோகிலன்

வேலை அதிகமாக இருந்த போது காயத்ரியின் செல்ஃபோனிற்கு தொடர்ச்சியாக அழைப்பு வந்தது. மாதத்தின் ஆரம்ப நாட்கள் என்பதால் வங்கியில் கூட்டம் அதிகம். இந்த நேரத்தில் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தால் மேனேஜர் திட்டுவார். ஓயாமல் அழைப்பு வரவே எடுத்து “ஹலோ!” என்றாள். “அக்கா! எவ்ளோ நேரம் ட்ரை பண்றது?” மறுமுனையில் அழுகை சத்தம் கேட்டது. “அம்மா நம்மை விட்டுட்டு போயிட்டாங்க...” பணிப்பெண் திவ்யாவின் குரல். அம்மா இறந்து விட்டாள் என்பது நெஞ்சில் அறைந்தது.

அதன்பிறகு எப்படி இயங்கினாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. அவளின் முகத்தில் எழுந்த திடீர் அதிர்ச்சியைப் பார்த்தே ‘துயரமான செய்தி’ என்பதை வங்கியிலிருந்த அனைவரும் அறிந்தார்கள். கால் டாக்ஸி வரவழைத்து காயத்ரியை அனுப்பி வைத்தார்கள். வைத்திக்கு போனில் சொன்னாள். ஓசூரில் இருப்பதாகவும் உடனே புறப்படுவதாகவும் தெரியப்படுத்தினான். “இன்னும் மூன்று மாதம் இருக்கக் கூடாதா, நம்ம கல்யாணத்தை பார்த்துட்டு போயிருக்கலாமே...” வைத்தியின் வார்த்தைகள் மீண்டும் அவளை அழ வைத்தது.

“அப்பா கூட இருந்திருந்தா செத்திருக்க மாட்டாங்க...” மறுமுனையில் அவன் அப்படி சொன்னதும் எங்கே கதறிவிடுவோமோ என துண்டித்தாள். கார் விரைந்தது. பெங்களூரைக் கடந்த பிறகுதான், ‘அப்பாவுக்கு தகவல் தெரியுமா?’ என்ற கேள்வி எழுந்தது. அப்பாவுக்கு போன் செய்தாள். ரிங் போனது. பலமுறை முயற்சி செய்தாள். பலனில்லை. ஒருவேளை அவருக்கு தகவல் தெரிந்து அங்கே வந்திருந்தால்..? மனைவியின் சடலத்தருகே நின்று என்ன செய்வார்? அழுவாரா? திட்டுவாரா? யோசித்தாள்.

அப்பாவுக்கு இப்போதும் அம்மா மனைவிதானா? உதட்டைக் கடித்து துக்கத்தை அடக்கினாள். இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டார்கள். எப்போது பிரிந்தார்கள்? நினைவில்லை. இருவரும் பிரிய ஆரம்பித்த காலம்தான் அவளுக்கு நினைவுகள் ஆரம்பிக்கும் காலமாகவும் உள்ளது. விவாகரத்திற்காக இருவரும் கோர்ட்டிற்கு அலைந்து கொண்டிருந்த போது காயத்ரியின் வயது நான்கு. அப்பா அழைத்துப் போய் ஒரு முறை ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். அம்மா மறுமுறை.

ஐஸ்க்ரீமோடு அம்மா சொல்வாள். “கோர்ட்ல அம்மா கூட இருக்கியா, அப்பா கூட இருக்கியான்னு ஜட்ஜ் கேட்பாரு. அப்ப நீ அம்மா கூடத்தான் இருப்பேன்னு சொல்லணும்...’’ ஐஸ்கிரீமோடு அப்பா சொல்வார். “நீ அப்பா கூட இருக்கிறதா சொல்லுடா செல்லம்...’’ கனம் கோர்ட்டார் அவர்கள் காயத்ரியிடம் எதுவுமே கேட்கவில்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் அம்மாவிடமும். சனி, ஞாயிறு அப்பாவிடமும் இருக்க வேண்டுமென்று கூறிவிட்டார்.

அவளுக்கு அப்பாவுடன் இருக்கும்போது அம்மா ஞாபகமும், அம்மாவுடன் இருக்கும்போது அப்பா நினைவும் வந்தது. விவாகரத்திற்குப் பிறகு இருவருமே ஐஸோ, ஐஸ்க்ரீமோ வாங்கிக் கொடுக்கவில்லை. டாக்டரின் பரிந்துரையை மட்டும் இருவரும் பரிமாறிக் கொண்டார்கள். புத்தாண்டு, தீபாவளி போன்ற விழா நாட்களில் பாதி நாள் அம்மாவோடும் மறு பாதி அப்பாவோடும் கழியும்.

சனிக்கிழமை காலை காயத்ரியை அழைத்துப் போக அப்பா வரும்போது அவளிடம் ஒரு கடிதத்தை அம்மா கொடுப்பாள். ‘குழந்தைக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுக்காதீங்க. கண்டதை வாங்கிக் கொடுக்காதீங்க... மண்ணுல விளையாட விட்டுட்டு, நீங்க உங்க ஃப்ரண்ட்ஸ்கிட்ட அரட்டை அடிக்க போயிடாதீங்க... இங்கிலீஷ்ல வீக்கா இருக்கா. கொஞ்சம் சொல்லிக் கொடுங்க... கூடவே கொஞ்சம் புத்திமதியும் சொல்லுங்க... என் பேச்சை கேட்க மாட்டேங்கறா... எதிர்த்து பேசறா... அப்புறம் முக்கியமான விஷயம்- கிச்சன்ல ரெண்டு நாளா ட்யூப் லைட் எரியலை. ஹால்ல இருக்கிற ஃபேன் கூட  கடகடன்னு சத்தம் போடுது.

நல்ல எலக்ட்ரீசியன அழைச்சிட்டு வந்து சரி பாருங்க... ஆபீஸ்ல சீட்டுப் பணம் போட்டதுல ஒரு லட்சம் வந்திருக்கு. அதை எந்த பேங்க்குல டெபாசிட் பண்ணலாம், என்னைக்குன்னு கரெக்ட்டா சொல்லுங்க...’ ஞாயிற்றுக்கிழமை மாலை காயத்ரியை அழைத்து வந்து அம்மாவிடம் அப்பா விட்டுப் போகும்போது, அவரும் ஒரு கடிதம் கொடுப்பார். ‘நான் ரெண்டு நாள்தான் குழந்தையோட இருக்கேன். மத்த ஐந்து நாட்கள் உன் கூட இருக்கா... உனக்குதான் பொறுப்பு அதிகம். ஆனா சாயந்தரத்துல உனக்கு சீரியல் பார்க்கவே நேரம் போதாது.

குழந்தைக்கு பாடம் சொல்லித் தரவா முடியும்? பாத்ரூம் போனா சுயமா கழுவறதுக்கு சொல்லிக் கொடுத்தியா? ஆறு வயசாகுது, சுத்தம் பண்ணிக்க தெரியலை. படிப்பை விட டிசிப்பிளின் முக்கியம். அதனால்தான் கோர்ட் பெண் குழந்தை அம்மா கிட்ட இருக்கணும்னு தீர்ப்பு சொல்லி இருக்கு. உன்னால வளர்க்க முடிஞ்சா பாரு. இல்லைனா ஊட்டி கான்வென்ட்ல சேர்த்து விடலாம். உன் பணத்தை செலவு பண்ண வேணாம். என் பொண்ணுக்காக நான் செலவு பண்ணிக்கிறேன்.

மாடில வாடகைக்கு விட்டிருக்கிற ஃபேமிலி  சரியில்லையாமே... அவங்களை உடனே காலி பண்ண சொல்லு... வாடகையா முக்கியம்? நல்ல ஆளுங்க குடித்தனம் வந்தா வரட்டும், இல்லைன்னா காலியாகவே இருக்கட்டும்... தீபாவளி போனஸ் இருபத்தைஞ்சாயிரம் வரும். அக்கௌண்ட்ல போடறேன். நீ கோல்டு வாங்கி வைச்சாலும் சரி, டிரெஸ் எடுத்தாலும் சரி, டெபாசிட் பண்ணாலும் சரி, ஆனா குழந்தைக்கு டிரெஸ் எடு.

ஸ்கூட்டியை இந்த வாரம் சர்வீஸ் விடணும்...’ இப்படி வாரா வாரம் இருவரும் கடிதங்களை காயத்ரியிடம் கொடுத்து அனுப்புவார்கள். அம்மா அழகா இருப்பாள். ஆடம்பரமான அலங்காரம் எதுவும் செய்து கொள்ள மாட்டாள். எப்பவும் சிம்பிள்தான். காட்டன் புடவை. வலது கையில் வாட்ச். இடது கையில் ஒற்றை வளையல். காதில் வளையம். குதிரை வால் ஜடை. அவ்வளவுதான் அம்மா.

அப்பாவிற்கும் அழகிற்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஆனால், தன்னை அழகாக காட்டுவதற்காக ரொம்பவும் மெனக் கெடுவார். ஃபாரீன் சென்ட். கொஞ்சமும் அழுக்குப் படாத உடை. அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவும் பழக்கம். இதுதான் அப்பா. இருவருக்கும் எப்படி சண்டை வந்தது? ஏன் கோர்ட்டிற்கு போனார்கள்? எதனால் பிரிந்தார்கள்? காயத்ரிக்கு இருபத்தி நான்கு வயதாகியும் தெரியவில்லை.

அவள் ஐந்தாம் வகுப்பு முடித்ததும் ஏலகிரி மலை கான்வென்ட்டில் சேர்த்து விட்டார்கள். அங்கேயே ஹாஸ்டல். ஐந்து நாட்கள் அம்மாவிடம், இரண்டு நாட்கள் அப்பாவிடம் என்பது மாறி இருவருமே ஞாயிற்றுக் கிழமை மட்டும் காயத்ரியைப் பார்க்க வருவார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் ஒரே பஸ்ஸில் வருவார்கள். காயத்ரியிடம்தான் புகார் கூறுவார்கள்.

“உன் அப்பாகிட்ட சொல்லி வை காயூ... அவர் ஃப்ரெண்ட் பார்த்திபன் லோன் எடுத்ததுக்கு ஜாமீன் போட்டிருக்கார். அவன் ட்ரிங்கர். ஒழுங்கா கட்டலைன்னா இவர்தான் மாட்டிக்குவார். பைக்கை அப்படித்தான் ஃப்ரெண்டு கேட்டான்னு கொடுத்தார். என்ன ஆச்சு? ஆக்ஸிடண்ட் பண்ணி நசுக்கிக் கொடுத்தான்...” அம்மா புகார் சொல்வாள். “காயத்ரி! ரொம்ப தொல்லை பண்ணான், மறுக்க முடியலை.

ஃப்ரெண்ட்ஷிப்தான் முக்கியம். லாஸ் இல்லை. அதை விடு. உன் அம்மா என்ன பண்ணான்னு கேளு. வேலைக்கார பெண்ணை கன்னத்துல அடிச்சிருக்கா. தேவையா? அந்தப் பொண்ணு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு போனா என்ன ஆகும்?” அப்பா பதிலுக்கு பட்டியலிடுவார். புகார்களைக் கூறிவிட்ட பிறகு அம்மா செய்து வந்த உணவும் அப்பா வாங்கி வந்த ஸ்நாக்சும் தருவார்கள். அம்மா ஸ்நாக்ஸை தொட மாட்டாள். அப்பா உணவைத் தொட மாட்டார்.

பத்தாவது வரை ஏலகிரிமலையில் படித்தாள். +2 ஊட்டியில். பி.காம் திருச்சியில். சென்னையில் எம்.காம் படித்துக் கொண்டிருக்கும் போதே வங்கித் தேர்வு எழுதி வேலைக்கு சேர்ந்து விட்டாள். பெங்களுர் மல்லேஸ்வரம் பிரான்ச்சில் வேலை. அப்பாவும் அம்மாவும் காயத்ரியைப் பார்க்க வருவது மாறி விட்டது. மாதத்திற்கு ஒரு முறை அவர்களைப் பார்க்க காயத்ரி செல்வாள்.

வேலைக்கு சேர்ந்த இரண்டு மாதத்தில் அப்பாவையும், அம்மாவையும் தன்னோடு வந்து தங்கும்படி அழைத்தாள். இருவருமே வரவில்லை. செல்ஃபோனில் இருவரும் புகார்களை சொல்லத் தொடங்கினார்கள். “காயத்ரி! உன் அம்மா திருந்தவே மாட்டா. டயட் கன்ட்ரோல் இல்லை, மாத்திரை எடுத்துக்கிறதில்லைனு டாக்டர் சொல்றார். சுகர் 360 தாண்டிப் போச்சாம். ஃபிரஷர் இருக்கு. உன் அம்மானால எனக்கும் பிரஷர் எகிறுது...” என்பார் அப்பா.

“காயூ! நீ எப்ப வர்ற? உன் அப்பாவை இந்த ஊர்ல விடாதே... பெங்களூர் அழைச்சிட்டு போயிடு. அவரால எனக்கு பிரஷர் ஏறுது. தினமும் நைட் ஒரு மணிக்குதான் வீட்ல வந்து படுக்கிறாராம். சித்தப்பா சொன்னார்...” என்பாள் அம்மா. காலமெல்லாம் அம்மாவையும், அப்பாவையும் இப்படித்தான் பார்த்திருக்கிறாள் காயத்ரி. எப்படியாவது இந்த முறை இருவரையும் ஒன்றாக இணைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

வைத்தியை அழைத்துப் போய், ‘நீங்க ஒண்ணா பேசி, ஒரு வீட்ல வாழற வரைக்கும், எங்க கல்யாணம் நடக்காது, நாங்களும் பிரிந்தே இருப்போம்’ என்று  சொல்ல இருந்தாள். அதற்கு அம்மா வாய்ப்பு தரவில்லை. செல்ஃபோன் ஒலித்து நினைவைக் கலைத்தது. எடுத்தாள். “காயத்ரி!

சித்தப்பா பேசறேன்டா... மனசை கொஞ்சம் திடப் படுத்திக்கோ... விஷயத்தை மறைக்கவும் முடியாது, சுத்தி வளைச்சும் சொல்ல முடியாது. உனக்கு மனப் பக்குவம் இருக்குன்னு நினைக்கிறேன். நேரிடையா சொல்றேன்...” “தெரியும் சித்தப்பா! நான் பாதி தூரம் வந்துட்டேன். கார்ல வந்துட்டிருக்கேன்...” “தெரியுமா? நான்தானே முதல்ல பார்த்தேன். பார்த்த அடுத்த நிமிஷமே உனக்குதான் போன் பண்றேன். சாகறதுக்கு முன்பே உங்க அப்பா உனக்கு சொல்லிட்டானா?”     

நீலநாய்!

மும்பையின் தலோஜா பகுதியில் திடீர் பரபரப்பு. பின்னே, தெருவில் இருந்த அத்தனை நாய்களும் ப்ளூ கலரில் இன்ஸ்டன்டாக மாறினால்..? தொழிற்சாலைக் கழிவினால்தான் நாய்கள் இப்படி மாறின என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பெட்டிஷன் சென்றுள்ளது.

சாதனை!

இந்தோனேஷியாவில் கயோ லூசிலுள்ள தவுசண்ட் ஹில்ஸ் கிரவுண்டில்தான் பாரம்பரிய சாமன் டான்ஸ் சாதனை. 10,001 டான்ஸர்கள் இணைந்து உலக சாதனைக்காக ஆடுகிறார்கள். இதற்கு முந்தைய சாதனை, 2014ம் ஆண்டில் 5,057 சாமன் டான்ஸர்கள் பங்கேற்று
ஆடிய டான்ஸ்தான்.

பன்ச்!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னிலுள்ள கிளென் வேவர்லி பூங்காதான் கங்காருக்கு செம கோபம் வந்த ஸ்பாட். கங்காரு பக்கத்திலிருக்க அதை கண்டுகொள்ளாமல், ஈமு கோழிக்கு தானியம் தந்த சிறுவனின் செயல் கங்காருவுக்கு எரிச்சல் தர, உடனே ஓங்கி சிறுவனின் கன்னத்தில் கொடுத்த பன்ச்சில் அச்சிறுவனின் ஃபேமிலியே நடுங்கிவிட்டது!