கவிதை வனம்




கள்ளத் தோணி


மாலை நேரத்து மழை பெருக்கிய
தெரு ஓடையில் பூவரசம் பூ ஒன்று
மிதந்து செல்கிறது
அது குடிசையைக் கடக்கையில்
ஐய்ய் என ஆசையாய்
கையிலெடுக்கிறது குழந்தை.
பூவின் கருவறையில்
பத்திரமாய் இருக்கிறது
கள்ளத்தோணி ஏறிவந்த
கட்டெறும்பு ஒன்று.
- செ.செந்தில்மோகன்

வீடு மாறுதல்

சின்ன பொருளில் ஆரம்பித்து
பீரோ, ஃபிரிட்ஜ், பாத்திரம்,
டைனிங் டேபிள், கட்டில் என
சுவரில் ஆடும் காலண்டர் வரை
எடுத்துப் போயாகிவிட்டது.
காலி வீட்டை வெறித்த மனைவி
மெல்ல கூட்டுகிறாள்
இருபது வருடத்து நினைவுகளை.
மூத்தவனின் கரு உருவானது
இரண்டாவதுக்கு சாமி கும்பிட்டது
பெண் பிறக்காததால் அழுதது
அம்மாவின் கடைசி மூச்சு பார்த்தது
தீட்டுக்கு ஆறுதலாய்ச் சாய்ந்தது என
ஒவ்வோர் அறையிலும்
அவள் பாதுகாத்து வந்த ரகசியங்களை
கூட்டிப் பெருக்கி அள்ளுகிறாள்.
சட்டென துளிர்த்த ஒரு சொட்டுக் கண்ணீரில்
சிலிர்த்து அடங்குகிறது வீடு
- கி.ரவிக்குமார்