காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 20

கண்டதுமே காதல். இராமனை கண்டதுமே சீதைக்கு வந்தது மாதிரிதான். மாஃபியாவுக்கெல்லாம் லவ்வு வரக்கூடாதா என்ன? நம்ம காட்ஃபாதருக்கும் வந்தது. மரியா விக்டோரியாவுக்கு அப்போது வயது பதிமூன்றுதான். பாப்லோ, இருபத்து நான்கு வயது கட்டிளங்காளை.கார்டெல்கள் சம்பந்தப்பட்ட பார்ட்டி அது. மரியாவின் அண்ணன், பாப்லோவின் கார்டெல்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அதன் அடிப்படையில்தான் மரியா குடும்பம், அந்த பார்ட்டியில் கலந்துகொண்டிருந்தது.

மர்லின் மன்றோ பாணியில் உடையணிந்திருந்தார் மரியா. ‘ராக் & ரோல்’ பாடகர் எல்விஸ் பிரெஸ்லி மாதிரியான ஆடையலங்காரத்தில் பார்ட்டிக்கு வந்திருந்தார் பாப்லோ. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில். பற்றிக்கொண்டு எரிந்தது காதல். அதற்கு முன்பாக பாப்லோவை யாருமே இவ்வளவு உணர்வுபூர்வமாகக் கண்டதில்லை. கொலம்பியாவின் பெரிய குடும்பத்துப் பெண்கள் பலரும் அங்கே வந்திருந்தார்கள். பாப்லோவோடு பேசவும், பழகவும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி.

ஆனால் - “நாம் நடனமாடலாமா?” பாப்லோதான் மரியாவைக் கேட்டார். மெதிலின் நகரின் எலிஜிபிள் பேச்சுலர் கேட்கிறார். மறுக்க முடியுமா மரியாவால்? அந்த நாளின் ஹீரோ & ஹீரோயின் இவர்கள் இருவரும்தான். நடனமாடிக்கொண்டே மரியாவின் காதில் கிசுகிசுப்பாக தன்னுடைய பர்சனல் தொலைபேசி எண்ணை சொன்னார் பாப்லோ. அன்று இரவே மரியாவிடமிருந்து போன் வந்தது. அவர்களது அடுத்த சந்திப்பு டேட்டிங் ஆனது.

இரும்பு இதயம் கொண்டவர் என்று பேர் பெற்ற பாப்லோவின் இதயத்துக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்த காலம் அது. எனக்காக படைக்கப்பட்டவள் இவள்தான் என்று உறுதியாக நம்பினார். பாப்லோவுக்கு வழக்கமான காதலனாக இருக்கத் தெரியவில்லை. மரியாதான் அவருக்கு எப்படியெல்லாம் காதலிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பாப்லோவுக்கு மரியா எழுதும் காதல் கடிதங்கள் அத்தனையும் இலக்கியத்தரம். ‘என் போதை பேரரசனே’ என்று விளித்துதான் கடிதம் எழுதுவார்.

பாப்லோவுக்கு அவர் செல்லமாக ஒரு பெயர் வைத்திருந்தார். இங்கே குறிப்பிட முடியாத அளவுக்கு ‘காமரீதியான’ செல்லப்பெயர் அது. காதல் கிளிகள், மெதிலின் நகரம் முழுக்க ஜோடியாகப் பறந்தன. அப்போது வெளிவந்திருந்த அத்தனை ஹாலிவுட் படங்களையும் பார்த்து சலித்து விட்டனர். பார்ப்பதற்கு படங்களே இல்லாதபோது மேடை நாடகங்களுக்கு போவார்கள். வழக்கமான காதலர்களைப் போல எல்லா இடங்களிலும் கார்னர் சீட்தான்.

தியேட்டர் இருளில் ஒருநாள் கிசுகிசுப்பாக மரியா கேட்டார். “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” “அம்மாவையும், அண்ணனையும் வீட்டுக்கு வந்து பேச சொல்றேன்...” மரியாவின் வீட்டில் பூகம்பம். வம்பு தும்பு இல்லாத அரசு அதிகாரி எவருக்காவதுதான் மரியாவை கட்டித்தர முடியுமென்று அவரது குடும்பத்தினர் போர்க்குரல் எழுப்பினர். “தட்டிடலாமா?” குஸ்டாவோ கேட்டார். “வேணாம்டா. பிசினஸ் மாதிரி ஃபேமிலியை டீல் பண்ணக்கூடாது. என்ன இருந்தாலும் என்னோட மாமனார் குடும்பம்...” பாப்லோ மிகவும் நெகிழ்ந்திருந்தார்.

பாப்லோவை சந்தித்து பழக முடியாதபடி மரியா வீட்டிலேயே சிறைபிடிக்கப் பட்டார். ஷேக்ஸ்பியரின் ரோமியோ கணக்காக சுவர் ஏறிப்போய் மரியாவைப் பார்த்தார் பாப்லோ. தன்னைப் பார்த்தால் கொலம்பிய அரசாங்கமே நடுங்குகிறது. ஆனால், தானோ மாமனாரின் கோபத்துக்கு அஞ்சுகிறோமே என்று அவருக்கு வெட்கமாகவும் இருந்தது. இருப்பினும் முதன்முறையாக தன்னை ஒரு சாமானியனாக உணரும் அந்த உணர்வை அவர் பெரிதும் விரும்பினார்.

மூன்று ஆண்டுகள் உயிருக்கு உயிராகக் காதலித்தார்கள். இனியும் பொறுக்கமுடியாது என்கிற நிலையில் 1976ல் திருமணத்துக்கு நாள் குறித்தனர் பாப்லோ குடும்பத்தினர். இந்த திருமணத்துக்கு திருச்சபை அனுமதி கொடுக்கக்கூடாது என்று மரியாவின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தனர். பாப்லோ, அவர் வாழ்விலேயே முதன்முறையாக ரொம்பவும் ஓவராக வளைந்து கொடுத்தார். திருச்சபை பிஷப்பை நேரில் சந்தித்தார்.

மரியாவுக்கும் தனக்குமான உயிருக்குயிரான காதலைப் பற்றி நெகிழ்ச்சியாக எடுத்துச் சொன்னார். “பாப்லோ, நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றது மகிழ்ச்சிதான். ஆனா…” “…” பாப்லோவுக்கு கோபம் வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு பிஷப், ஜாக்கிரதையாகவே அந்த உரையாடலைக் கையாண்டார்.

“பெண்ணோட குடும்பம் நியாயமான காரணத்தைச் சொல்லி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க...” “என்ன காரணம் சொல்லுறாங்க?” “அந்தப் பொண்ணுக்கு பதினஞ்சு வயசுதான் ஆகுது. கல்யாணம் பண்ணுற வயசு இன்னும் ஆகலைன்னு சொல்லுறாங்க...” “அதுக்கு?” “நான் கல்யாணம் பண்ணி வெச்சேன்னா எனக்கு நிறைய சிக்கல் வரும். நான் நிறைய பேருக்கு பதில் சொல்லணும்.

பொண்ணோட குடும்பம் சம்மதிச்சா எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது...” “என்னோட மாமனார் நிச்சயம் சம்மதிக்க மாட்டார். வேற வழி?” “கொஞ்சம் செலவாகுமே?” பிஷப் இழுத்தார். ‘அடப்பாவிகளா, இங்கேயுமா?’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்ட பாப்லோ, காரில் இருந்த சூட்கேஸை எடுத்து வந்து பிஷப் முன்பாகத் திறந்து காட்டி னார்.

“இதுல எவ்வளவு இருக்குன்னு தெரியலை. நீங்க உங்களுக்கு கேட்குறீங்களா... இல்லைன்னா வேற யாருக்கோ பதில் சொல்லணும்னு சொன்னீங்களே, அவங்களுக்கு கேட்குறீங்களான்னு தெரியலை. இன்னும் பணம் தேவைப்பட்டாலும் கணக்கு வழக்கில்லாமே கொடுக்கறேன். பிரச்னை இல்லாமே நீங்கதான் எல்லாத்தையும் சுமுகமா முடிச்சிக் கொடுக்கணும்...” திறந்திருந்த சூட்கேஸை பார்த்ததுமே பிஷப்பின் வாய் ஆச்சரியத்தில் அகன்றது.

கல்யாணம் செய்துகொள்ளக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று பாப்லோவுக்கு வருத்தமாக இருந்தது. பிஷப், சரிக்கட்ட வேண்டியவர்களைச் சரிக்கட்டினார். கணிசமாக அவருடைய பங்கும் மிச்சமிருந்தது. அப்புறமென்ன? சட்ட திட்டங்களில் இருந்த அத்தனை ஓட்டையையும் பிஷப் கண்டுபிடித்து சரிபண்ணினார். பாப்லோவுக்கும், மரியாவுக்கும் ஜாம் ஜாமென்று ஊர் மெச்ச திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் முரண்டு பிடித்த மரியா குடும்பத்தினர், பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட அன்பு நெருக்கடிகளுக்கு வேறு வழியின்றி அடிபணிந்தனர். பாப்லோ பாட்டுக்கும் காதல், கல்யாணம் என்று பிஸியாக இருந்த காலத்தில் அவரது கார்டெல்லுக்கு வேறுவகையான பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின.

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்