எம்ஜிஆர் ரசிகன் தீண்டத்தகாதவன் என்கிற அரைகுறை அறிவுஜீவி அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டவே என்னை எம்ஜிஆர் ரசிகன் என அறிவித்தேன்...



திராவிட மரபை உள்வாங்கி சிறுபத்திரிகை உலகில் ஆட்சி செய்யும் இக்கால மகாகவி கலாப்ரியாவுடன் ஓர் உரையாடல்

- நா.கதிர்வேலன்

கலாப்ரியாவைத் தவிர்த்துவிட்டு தமிழ்க்கவிதையை யோசிக்க முடியாது. மழையால் பயிர் வளரும்... போலவே கலாப்ரியாவின் கவிதையால் தமிழ் வளர்ந்தது. எவரும் பயன்படுத்தாத உவமைகள், வாழ்வை விசாலப்படுத்தும் படிமங்கள், இதயத்தை பிசையும் குறியீடுகள் என இவர் ஏவலில் சிந்தனைகளாக விரிந்தது. தமிழின் நவீன கவிதைக்கு கலாப்ரியா ஒளிரும் கலை நம்பிக்கை. கவிதை கடல் என்றால் அவர் ஓயாத அலை. நெல்லைச் சீமையின் ‘இடைக்கால்’ சிறுநகரின் வீட்டில் நடந்தது இந்த சந்திப்பு. ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் புதுப்பித்துக் கொள்ளும் மொழியும், லாவகமும் ெமல்லிய குரலில் வெளிப்பட்டது சிறப்பு.

100 கவிஞர்களுக்கு மத்தியில் பெயர் இல்லாமல் இருந்தாலும் தெரிந்து விடுகிற மொழி உங்களுடையது... பிரசுரிக்கத்தக்க வகையில் நவீன கவிதைகள் எழுதும் முன் சுமார் மூன்றாண்டுகள் பாரதி, அதிகமும் பாரதிதான், கலைஞர் பாதிப்பில் எளிய சந்தத்தில் மரபார்ந்த கவிதைகள் எழுதினேன். பிறகு நான் ெசால்லப்படாதவற்றுடன், ெசால்லக் கூடாதென்று ஒளித்து வைக்கப்பட்ட விஷயங்களையும் கவிதையாக்கினேன்.

கொஞ்சம் பிரக்ஞை பூர்வமாகவே செய்தேன். அந்தக் கவிதைகள் அவற்றுக்கென்று நாட்டுப்புறச் சொல்லாடல் போல இறுக்கமான சிக்கனமான ஒரு ெமாழியைத் தேர்ந்து கொண்டன. இந்த ஒலி அமைதியும், அனுபவங்களின் கொந்தளிப்பு மொழியும் இணைந்த ஒன்றே நீங்கள் குறிப்பிடும் தனித்துவம். சுயமாக வந்ததை பழக்கிக் கொண்டேன்.

உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவை நினைவுகூறல் வகையிலானது. ஏன் இப்படி..?
உங்களுக்கு ஒரு கவிதைக்கான பொறி கிட்டுகிறது. அது உங்கள் சிற்பத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட கல்போல. அதிலிருந்து நீங்கள் உங்கள் எண்ணத்தின் வினைக்கேற்ப சிலையினை வடிக்கிறீர்கள். அந்த எண்ணம் என்பது கடந்த கால நினைவுகளின் சேகரத்திலிருந்தே கிளைக்கிறது. ஏனெனில் நாம் கடக்கும் ஒவ்வொரு கணமும், கணங்களிடையே உதிக்கும் எண்ணங்களும், ஏன், மொழிகூட, மூளையின் அடுக்குகளில் நினைவுகளாகவே சேகரமாகிறது.

கடந்த காலம் என்பது என் மற்றும் பலரின் கவிதை பறத்தலுக்கான இறுக்கமான ஆரம்ப ஓடுபாதையாக இருக்கிறது. அதில் ஓடி அதை உந்திப் பின் தள்ளிவிட்டே கலைஞன் ேமலெழும்புகிறான். அதிலும் துயர நினைவுகள் உயவு எண்ணெய்யாகச் செயல்பட்டு இலகுவாகப் பறக்க வைக்கின்றன. இது ஓர் அழகிய முரண். சமூகம் என்பது கடந்து போன அனுபவங்கள் கற்றுத்தரும் பாடங்களினால் கட்டமைக்கப்பட்டது. அதனாலேயே சமூகத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்ட கவிஞன் இறந்த காலத்தின் இழக்காத நினைவுகளில் சஞ்சரிக்கிறான்.

அதிர்ச்சியூட்டுகிற விசித்திர உவமைகள் உங்கள் கவிதைகளில் நிறைந்திருக்கின்றன. அதோடு மிகவும் மென்மையான பிரயோகங்களும் இடம் பெறுகின்றன...
நான் கவிதை எழுத வருகையில், அது என்னுடைய அலைக்கழிப்புமிக்க வாழ்க்கைப் பருவமாக இருந்தது. அவநம்பிக்கையும், தற்கொலையை அடிக்கடி நாடுகிற இருண்மையுமான மனோநிலை. அந்த அலைக்கழித்தல் இயல்பானதா, யதார்த்தமானதா என்று ஆராயும் பக்குவம் கூட இல்லாத மூளை.

ஆனால், எல்லாத் துயரும் என் காதல் கைகூடிவிட்டால் சரியாகிவிடும் என்ற வேடிக்கையான நம்பிக்கை. இந்த இரண்டுங்கெட்டான் மூளை சட்டென்று உள்வாங்கிச் சித்தரித்த படிமங்கள் அதிர்ச்சியும், மரணச் சாயலும் கொண்டிருந்தன. இன்னொருபுறம் அவளுடைய முக தரிசனம் என்னை அவ்வளவு மென்மையாக்கி என் கண்ணில் தென்படுகிற ஒவ்வொன்றையும் நான் ஆதுரத்துடன் பார்க்கும் பக்குவத்தைத் தரும். அவ்வளவு துயரத்திலும் ஒரு மண்புழுவாக காதல் நினைவுகளையும் தின்று செரித்துக் கொண்டிருந்தேன். அவை பண்பட்ட மண்ணாக, மென்மையான பிரயோகங்களாக வெளிப்பட்டன.

மிக அதிகமான பரிசோதனைக் கவிதைகளை எழுதியவர் நீங்கள்... அதற்கான உடன்பாடான தன்மை எப்படி கிடைத்தது? நல்ல வாசகனே நல்ல படைப்பாளியாக இருக்க முடியும். என் காலத்திய மூத்த படைப்பாளிகள் பலரும் செய்தது போலவே நானும் என் சக படைப்பாளிகளையும், புதிய படைப்பாளர்களையு–்ம் வாசித்து ஊக்கப்படுத்த முனைகையில் அவர்களிடமிருந்து நிறைய புது விஷயங்களைக் கற்று என்னையும் புதுப்பிக்க ஆர்வமுறுகிறேன்.

இந்த தொடர்ந்து இயங்கும் ஆர்வமே என்னை பரிசோதனை களைச் செய்ய வைக்கிறது. இப்போதைய பரிேசாதனையாக, ஒரு ஒற்றைப்படிமம் வாசிப்பவன் மனதில் பல பரிமாணங்களில் விரியும் விதமாக பல இறுக்கமான சிறிய கவிதைகளை நான் எழுதி வருகிறேன். உதாரணமாக ‘கடவுள் பறவையைப் படைத்தபின் அவனுக்கு வானத்தை மேலும் விரிவாக்கும் வேலை வந்து சேர்ந்தது’

இடங்கள், மனிதர்கள், கடந்த காலம், இயற்கை, உறவுகளை முன்னிருத்துகிற குணாதிசயம் உங்கள் கவிதைகளில் காணப்படுகிறது...
இதை ஒரு கலைஞனின் பொதுவான குணாதிசயமாகவே கொள்ளலாம். அவன் தனக்குப் பழக்கப்பட்ட பாதையைக் கூட புலன்களால் கடக்கிறான். எதிர்ப்படும் ஒவ்வொன்றும் அவனது மனோநிலை சார்ந்து பலவிதமாக அவனுடன் வினையாற்றுகிறது. இதில் மனோநிலை என்பது முக்கியம்.

உதாரணமாக, நான் பெரிய கோயிலுக்கு பெரும்பாலும் பகல் பதினொரு மணி வாக்கில் போவேன். தன்னிரக்கமான மனநிலையுடன் ஆளே இல்லாத ஒவ்வொரு மூலைக்கும் போவேன். கோயில் வாசலில் பூ வாசனை, கோபுரத்தின் அடியில் வவ்வால்களின் இருட்டு வாசனை, பலிபீடத்தின்காய்ந்த வில்வ வாசனை, அர்த்த மண்டபத்தின் திருநீறு வாசனை, சன்னதியின் கற்பூர வாசனை... இப்படி ஒரு இடத்ேதாடு ஒரு வாசனையை மனம் இணைத்துக் கொள்ளும்.

பூ என்றால் பூக்காரனும் சேர்ந்து. கோபுரமென்றால் பிச்சைக்காரர்கள். பலிபீடமென்றால் கிழட்டுப் பூனையும், பலிச்சோறு வெறுத்த காக்கையும். சன்னதி என்றால், கூட்டத்தில் வரத் தயங்குகிற கைம்பெண்கள், ஆளில்லையென்று அக்குள் சொறிந்துகொள்கிற பூசாரி... இப்படி அபூர்வ தரிசனங்கள் மனதில் பதிவாகும்.

ஒரு ெபாறி கிடைத்ததும், அதை சிந்தனையில் ஏந்தியபடி ஆதிமானுடத் தோன்றலில் ஆரம்பித்து இயற்கையோடு நடந்து, நிகழ்காலத்திற்குக் கடத்தி வந்து அந்தப் பொறி சக மானுடத்தில் எங்கே பொருந்துகிறதோ அங்கே கனல வைக்கிறேன். அதனால் நீங்கள் சொல்லுகிற இடம், மனிதர்கள், இயற்கை எல்லாவற்றையும் என் கவிதைகள் பிரதிபலிக்கின்றன.

திராவிட இயக்க பரம்பரையைச் சார்ந்த கவிஞன் என்பதை எப்போதும் சொல்லிக் கொள்வீர்கள். அதிலும் எம்ஜிஆர் ரசிகன் என...
சிலருக்கு தங்களின் இன்றைய இருப்பே முக்கியம். தாங்கள் ஆதி நாட்களில் எளிய ரசிகத்தன்மையோடு, சில அரசியல் ஆளுமைகளின் பாதிப்போடு இருந்தோம் என்பதைச் சொன்னால் தங்களை அறிவுஜீவியில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று பயம். இதில் ஒரு மேல்தட்டு அரசியல் இருக்கிறது. எம்ஜிஆர் ரசிகன் தீண்டத்தகாதவன் என்கிற அரைகுறை அறிவுஜீவி அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டவே நான் அப்படி அறிவித்தேன்.

‘காயங்களுடன் கதறல்களுடன் ஓடி ஒளியும் ஒரு பன்றியைக் கொத்தும்’ என்பது போல சில மூர்க்க வரிகளுக்கு காரணம் என்ன? சொல்லாமல் விட்ட காதல் மனதுக்குள் உருவாக்கும் சோகம் ஒரு தண்டவாளம் என்றால், சமூகச் சோகங்கள் பதிக்கும் இணையான தண்டவாளம் இன்னொன்று. இவற்றின் மீது பயணிக்கிற கவிஞனின் பார்வைக்கென்றே வாழ்க்கையின் கொடுமையான விஷயங்கள் தென்பட்டு தொகுப்பை ஏற்படுத்தும். அவை வரிகளில் மூர்க்கத்தை, கலகத்தை உண்டு பண்ணும். காதலைக்கூட, அந்தக் கொதிப்பும், பாதிப்பும் மூர்க்க வரிகளில் சொல்ல வைக்கும்.                          

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்