தனி ஒருவன் - குப்பை மேட்டை குழந்தைகள் விளையாடும் பூங்காவாக மாற்றிய மனிதர்



- குரு

கோவை நியூ தாமு நகரில் இருக்கும் பூங்காவிற்கு சின்னக் குழந்தை கூட வழி சொல்லும். காலையில் பெரியவர்களின் நடைப்பயிற்சி மேடையாக இருக்கும் இந்தப் பூங்கா, மாலையில் குழந்தைகளின் விளையாட்டுத் திடலாக மாறியிருக்கும். வழிப்போக்கர்கள் கூட கொஞ்ச நேரம் இளைப்பாற இங்கே வருகிறார்கள். ஆச்சர்யம்தான். ஏனெனில் ஒரு காலத்தில் குப்பைகளின் கூடாரமாக, கால் வைக்கக் கூட முடியாத  இடமாக இருந்த பகுதி இது!

வெயிலில் தகித்தும், குப்பையில் மூழ்கியும் கிடந்த இந்த இடத்தை தனி ஒருவனாக இயற்கை எழில் கொஞ்சும் பூங்காவாக மாற்றியிருக்கிறார் மஹேந்திர ராமதாஸ். ‘‘சின்ன வயசுல இருந்தே இயற்கைன்னா ரொம்ப இஷ்டம். அப்பா கூட வெளிய போகும்போது முதல்ல என் கண்கள் மரங்களையும், செடிகளையும்தான் தேடும். பச்சையான இலைகளைப் பார்க்கிறப்ப, பறவைகளின் கீச்சுக் குரலைக் கேட்கிறப்ப இனம் புரியாத பரவசத்துல மிதப்பேன்.

இதுக்காகவே இயற்கையைத் தேடித் தேடி போவேன்...’’ இயற்கையின் மீதான நேசத்தை வெளிப்படுத்திய ராமதாஸ் பூங்காவைப் பற்றி உரையாடத் தொடங்கினார். ‘‘முப்பது வருஷங்களுக்கு முன்னாடி நியூ தாமு நகருக்கு குடி வந்தேன். என் வீட்டுக்குப் பக்கத்துலதான் கவர்மென்ட்டுக்கு சொந்தமான அந்த இடம் இருந்தது. சுமாரா நாற்பது சென்ட் இருக்கும். மக்கள் காலைல அங்கதான் வாக்கிங் போவாங்க.

ஆனா, மாலை ஆச்சுன்னா அது குடிமகன்களோட கூடாரமா மாறிடும். அவங்க குடிச்சிட்டு போடற பாட்டில்கள் அங்கங்க இறைஞ்சு கிடக்கும். சாப்பாட்டுக் கவரையும் அப்படியே போட்டுடுவாங்க. இப்படியே தொடர்ந்ததால அந்த இடமே கால் வைக்க முடியாத அளவுக்கு குப்பைக் கூளமா மாறிடுச்சு. கார்ப்பரேஷன்ல சொல்லிச் சொல்லி அலுத்துப் போச்சு. அவங்க எதுவும் செய்யற மாதிரி தெரியல. இந்தப் பக்கம் வந்தாலே துர்நாற்றம் வீசற அளவுக்கு நிலமை முத்திப் போச்சு.

இப்படியே விடக் கூடாது. இந்த இடத்தை மக்கள் பயன்படுத்தற இடமா மாத்தணும்னு முடிவு செஞ்சேன். யாருக்காகவும் காத்திருக்காம நானும் என் வீட்டு வாட்ச்மேனும் களத்துல இறங்கினோம். முதல்ல இந்த இடத்துல இருந்த குப்பைகளை சுத்தம் செஞ்சோம். சுத்தம் செஞ்ச இடத்துல மரங்களை நட்டோம்...’’ என்கிற ராமதாஸின் அயராத உழைப்பால் அந்த இடமே இன்று பசுமையால் ததும்பி வழிகிறது.

‘‘அந்தந்த மண்ணுக்கேத்த மரங்கள்தான் செழிப்பா வளரும். அழகுக்காக கவர்ச்சியான மரங்களை நடக்கூடாது. இந்த உண்மையை தெரிஞ்சுகிட்டதும் இந்த மண்ணுக்குரிய மரங்கள் என்னென்னனு ஆராய்ந்து ஆலமரம், அரசமரம், புங்கைமரம், மருதமரம், மந்தாரை, வில்வமரம்னு தேர்வு செஞ்சேன். சூரிய ஒளிதான் எல்லா மரங்களுக்கும் அவசியம். அதனால மேற்குத் திசைல நடற மரங்களுக்கும் சூரிய ஒளி முறையா கிடைக்கணும்னு கிழக்குத் திசைல உயரம் குறைவான மரங்களை விதைச்சேன்.

தண்ணீருக்கு சொட்டு நீர் பாசன முறையத்தான் கடைப்பிடிக்கிறோம். தேனீக்களாலயும் பட்டாம்பூச்சிகளாலயும் நிகழ்ற மகரந்தச் சேர்க்கையாலதான் பெருங்காடுகள் உருவாகும். அதனால அவற்றை ஈர்க்க மருதாணி, முருங்கை, கருவேப்பிலையை வைச்சோம். வவ்வாலை கவர சப்போட்டா, சர்க்கரை பழம்... கிளிகள், குயில்களுக்கு கொடுக்காப் புளி. மழை நீரை சேகரிக்க கீழ விழற மர இலைகளை வைச்சு சுமாரா இரண்டடி உயரத்துக்கு சமன் செஞ்சோம்.

இதனால இலைகள் ஸ்பான்ஞ் மாதிரி செயல்பட்டு மழைநீர் ஆவியாகாம தடுக்குது. அதேமாதிரி இலைகள், அழுகிய பழங்களை கொண்டே இயற்கை உரங்களைத் தயாரிச்சு மரங்கள் வளர பயன்படுத்தறோம்...’’ என பட்டியலிடும் ராமதாஸ் சுற்றுச்சூழல் சார்ந்த பல நல்ல திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். அத்துடன் பூங்காவைப் பராமரிக்க மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தனது வருமானத்தி லிருந்து ஒதுக்குகிறார். இத்தனைக்கும் இது அரசாங்கத்துக்கு சொந்தமான பூங்கா!

‘‘உண்மைல இதை நான் மட்டுமே உருவாக்கலை. எனக்கு பின்னாடி நிறைய பேர் இருக்காங்க. பாராட்டணும்னு நினைச்சீங்கனா எந்த பிரதிபலனும் எதிர்பாராம தோள் கொடுத்த அவங்களுக்கு நன்றியை சொல்லுங்க...’’ தீர்மானமாகச் சொல்லும் ராமதாஸ், ‘‘இப்ப மரங்கள் எல்லாம் 20 / 25 அடிகள் வளர்ந்திருக்கு. பார்க்கிறப்பவே மகிழ்ச்சியா இருக்கு...’’ என நெகிழ்கிறார்.

‘‘தேங்கி நிற்கிற மழை நீருக்கு வடிகால் அமைச்சு அதை பூங்கா உள்ள இருக்கிற குளத்துல விழும்படி செய்திருக்கோம். இடைஞ்சல் இல்லாம குறிப்பிட்ட இடைவெளில மரங்கள் நடப்பட்டிருக்கு. அதனால மக்களால சுதந்திரமா நடக்கவும் இளைப்பாறவும் முடியும். பூங்காவோட கட்டமைப்பைப் பார்த்த கார்ப்பரேஷன், மூணு வருஷங்களுக்கு முன்னாடி குழந்தைகள் விளையாடற பூங்காவா இதை மாத்துச்சு.

தொகுதி எம்.எல்.ஏ குடும்பத்தோடு வந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தினார். அதிகாரிகளும் துணையா இருக்காங்க. இப்படி எல்லாரும் ஊக்கமும் ஆதரவும் கொடுத்ததாலயும் கொடுக்கிறதாலயும்தான் இந்தளவுக்கு பூங்காவை வளர்க்க முடிஞ்சது...’’ என்கிறார் ராமதாஸ்.

படங்கள்: சாதிக்