COFFEE TABLE



வார்த்தையிலிருந்து ஓவியம்!

ஓவியர்களில் இரண்டு வகையினர் இருக்கின்றனர். சின்னதொரு கோடு அல்லது புள்ளியை வரைய ஆரம்பித்துவிட்டு, ‘‘இப்ப என்ன ஓவியம் வரைகிறேன்னு சொல்லுங்கள்?’’ என எதிரில் இருப்பவர்களின் ரியாக்‌ஷன் பார்த்துக் கேட்பவர்கள் ஒரு ரகம். விஷயத்தைச் சொல்லிவிட்டு அதையே வரைந்து அசத்துபவர்கள் இன்னொரு வகை.

இப்படி பீட்சா, ஐபோன், பூனை, சிறுமி, அம்மா என ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்து, அந்த வார்த்தைக்குரியதை நொடிப்பொழுதில் ஓவியமாகத் தீட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் முகம் தெரியாத ஓவியர் ஒருவர். இந்த அழகான நிகழ்வை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கின் ‘like world’ பக்கத்தில் ‘to turn words into a cartoon’ என்ற தலைப்பில் பதிவிட 20 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.

சன்னி லியோன்

பாலிவுட் ஷூட்டிங்கின் போது கூட இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்திருக்க மாட்டார் கிளாமர் பாம் சன்னி லியோன். கொச்சியில் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார் சன்னி. இதைக் கேள்விப்பட்டு, அந்த ஏரியா முழுவதும் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டுவிட்டனர். கடல் போன்ற அந்தக் கூட்டத்தில் சன்னியின் கார் கப்பல் போல மிதந்து வந்திருக்கிறது. ‘‘No words...Can’t thank the people of Kochi. I was so overwhelmed by the love & support. Never will forget God’s own Country Kerala!’’ என ஃப்ளையிங் கிஸ் வீசி சிலிர்க்கிறது பொண்ணு!

ஜீரோ ஸ்மோக்கர்ஸ்!

புகை பிடித்தால் புற்றுநோய் வரும், உயிருக்கு ஆபத்து என்ற எச்சரிக்கை மணி நாலாப்பக்கம் இருந்து கேட்டாலும் யாரும் புகை பிடிப்பதை நிறுத்துவதில்லை. குறைந்தபட்சம் பொது இடங்களிலாவது புகை பிடிப்பதை தடை செய்ய ‘பொது இடங்களில் புகை பிடித்தால் அபராதம் கட்ட வேண்டும்’ என்ற சட்டம் தமிழகத்தில் 2008ம் வருடம் அமலுக்கு வந்தது.

இந்த தடைச் சட்டத்தால் அரசுக்கு கணிசமான வருமானமும் கிடைத்தது. உதாரணத்துக்கு 2013ம் ஆண்டில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடமிருந்து அபராதமாக ரூ.18 லட்சம் வசூலானது. இது 2015ல் 23 லட்சமாக உயர்ந்தது. ஆனால், அடுத்த ஆண்டுதான் ஷாக்... காரணம், 2016ல் இந்த சட்டத்தின்படி அரசுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என ஆய்வு ஒன்று சொல்கிறது. அப்படியென்றால் தமிழகம் ‘ஜீரோ ஸ்மோக்கர்ஸ்’ மாநிலமாக மாறிவிட்டதா?!

13 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த மோதிரம்!

கனடாவைச் சேர்ந்த மேரிக்குத் திருமணமாகி ஐம்பது வருடங்கள் ஆகிறது. கணவர் ஐந்து வருடங்களுக்குமுன் இறந்துவிட்டார். 13 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரத்தை வீட்டுக்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் மேரி தொலைத்துவிட்டார். இதைப் பற்றி யாரிடமும் அவர் வாயே திறக்கவில்லை. கடந்த வாரத்தில் அந்த தோட்டத்தில் விளைந்த கேரட்டில் அந்த மோதிரம் இருந்திருக்கிறது! தனது 84வது வயதில் மோதிரம் கிடைத்த மகிழ்ச்சியை ‘இறந்த என் கணவரே திரும்பி வந்ததுபோல் இருக்கிறது!’ என நெகிழ்கிறார் மேரி. 

ஹானர் பேண்ட் 3

போன நிமிடத்து டெக்னாலஜி இந்த நிமிடத்தில் பழையதாகிப் போகும் காலச் சூழலில் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு தங்களுடைய தயாரிப்புகளைக் களத்தில் இறக்கிக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் ஹுவாய் நிறுவனம் ‘ஹானர் பேண்ட் 3’ என்ற ஃபிட்னஸ் கேட்ஜட்டை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கடிகாரத்தைப் போல இதை நம் கையில் கட்டிக்கொண்டால் போதும், ஒரு நாளைக்கு நாம் எவ்வளவு நேரம் தூங்குகிறோம், எவ்வளவு தூரம் நடக்கிறோம், முக்கியமாக ஒரு நிமிடத்தில் நம் இதயம் எவ்வளவு தடவை துடிக்கிறது என்பதை துல்லியமாக காட்டுகிறது இந்த கேட்ஜட். ஒரு முறை பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டாலே போதும், 30 நாட்களுக்கு ஓய்வில்லாமல் உழைக்கும். அமேசான் இணைய தளத்தில் இது கிடைக்கிறது. விலை ரூ.2,799.