கொலை நடந்த பிறகே நீதிமன்றம் வந்தது!.



தல புராணம்

சிட்டி சிவில் கோர்ட், மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்ட்ரேட்ஸ் கோர்ட், ஐகோர்ட், குடும்பநல நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், தீர்ப்பாயங்கள் என எத்தனையோ நீதிமன்றங்கள் இன்று சென்னையில் பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஆனால், ஆங்கிலேயர்கள் இங்கே  கால்பதித்தபோது எப்படி இருந்தது?சிறிய கிராமமாக இருந்த மெட்ராஸில் ஊர் தலைவரே உள்ளூர் நிர்வாகத்தை கவனித்து வந்தார்.  அவருக்கு உதவி யாக கணக்கர் ஒருவரும், குற்றம் செய்பவர்களைப் பிடித்து சிறையில் வைக்க பெத்தநாயக் என்கிற காவலரும் இருந்தனர்.  அன்றாட நிர்வாகப் பணிகள் எல்லாம் ஊர் சத்திரத்திலேயே நடந்து வந்தன. இந்தச் சத்திரமே குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றமாகவும்  செயல்பட்டது. இங்கு வந்த ஆங்கிலேயர்களுக்கு ஆரம்பத்தில் நீதிமுறைகள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. காரணம், அவர்கள்  அரசாங்கப் பொறுப்புகளில் இருந்தவர்களல்ல. கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனத்தின் முகவர்கள். மிளகுக்காக கடல் கடந்து வந்த  வணிகர்கள். அவ்வளவே!

அதனால், கம்பெனிக்கு பிரிட்டிஷ் அரசு ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில சாசனங்களை அளித்தது. இதில் முதல் சாசனம் 1600ம் ஆண்டு  டிசம்பர் 31ம் தேதி ராணி முதலாம் எலிசபெத்தால் வழங்கப்பட்டது. இதன்படி, கிழக்கிந்தியத் தீவுகளுடன் வணிகம் செய்யும் உரிமையும்,  குற்றம் செய்பவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் கொடுத்தது. பின்னர் 1609ல் மன்னர் முதலாம் ஜேம்ஸால் அளிக்கப்பட்ட இரண்டாவது  சாசனத்தில் ராணி கொடுத்த உரிமைகள் அனைத்தும் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. 1639ல் மெட்ராஸ் வந்த ஆங்கிலேயர்களுக்கு பூந்தமல்லி நாயக்கர், தமர்ல வெங்கடாத்ரி இங்கே கோட்டைடைக் கட்டி வணிகம் செய்ய இரண்டு வருடங்களுக்கு உரிமையும், முழு  அதிகாரமும் அளித்தார்.

ஆனால், இந்த முழு அதிகாரம் என்பது அந்தப் பகுதியின் ஆளும் உரிமை என ஆங்கிலேயர்கள் நினைக்கவில்லை. ஆளும் உரிமை என்பது  நீதியையும் கொண்டதுதான்.  அப்போது நடந்த ஒரு கொலைச் சம்பவம் மூலம், ‘மெட்ராஸில் தங்களுக்கு நீதி நிர்வாகம் செய்யும் உரிமை  இல்லை’ என ஆங்கிலேயர்கள் தீர்க்கமாக நம்பியிருந்ததை அறிய முடிகிறது.1641ம் வருடம் டிசம்பரில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம்  பற்றி 1642ம் வருடம் செப்டம்பர் மாதம்தான் இங்கிருந்தவர்கள் லண்டனிலிருந்த கம்பெனிக்கு கடிதம் அனுப்பினர். கர்னல் லவ் எழுதிய,  ‘Vestiges of Old Madras-Vol I’ நூலில் இந்தச் சம்பவம் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘ஆண்ட்ரூ கோகன் இங்கு கம்பெனியின் தலைவராக வந்து சேர்ந்த சில நாட்களில் நம் நகரில் ஒரு கொலை நடந்தது. இது உங்களுக்குத்  தெரியாமல் இருக்கக் கூடாது.ஒரு பெண் நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்தாள். இங்கே ஓடும் ஆற்றில் அவள் சடலமாக மிதந்து  கொண்டிருந்ததைப் பார்த்தோம். உடனே, அங்கு வேடிக்கை பார்த்த சிலரின் உதவியுடன் அப்பெண்ணின் சடலத்தை வெளியில் எடுத்தோம். அந்தப் பெண்ணின் உடலில் எந்தக் காயமும் இல்லாததால், நீரில் மூழ்கி அவள் இறந்திருக்கலாம் என்றெண்ணி அடக்கம் செய்ய  முற்பட்டோம். ஆனால், வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவன், சடலத்தை வெளிக்கொண்டு வந்தவனை அப்பெண் பராமரித்து வந்ததாகக்  கூறி அவன் மீது சந்தேகப்பட்டான்.

அங்கு கூடியிருந்த அனைவரது கண்களும் சடலத்தை வெளியே எடுத்தவன் மீது சென்றது. அவன் உடுத்தியிருந்த துணியிலும் ரத்தக்கறை  படிந்திருந்தது. அவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் சில காலம் தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது. ஆனால், கொலை செய்யவில்லை என  அவன் மறுத்தான். ஆகையால், அவன் வீட்டைச் சோதித்தோம். அப்போது அந்தப் பெண்ணின் நகைகள் மற்றும் துணிகள் கிடைத்தன. பிறகு,  தீவிரமாக அவனை விசாரித்ததும், கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இதை உடனடியாக நாயக்கின் கவனத்துக்கு எடுத்துச்  சென்றோம். அவர், இங்கிலாந்து நாட்டின் சட்டப்படி தண்டிக்கலாம் என்றும், தவறினால் உள்ளூர் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் தெரிவித்தார்.

‘நீதியை நிலைநாட்டத் தவறினால் இங்கே வணிகம் செய்ய யார் முன்வருவார்கள்? இந்நகரைத் திருடர்களும், கொலையாளிகளும் நிறைந்த  ஊர் என மக்கள் பேசமாட்டார்களா?’ என ஓலை மூலம் நாயக் கேட்டார். எனவே, எங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கொலை  செய்தவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் தூக்கிலிட்டோம். டிசம்பர் 11ம் தேதி நாயக் வரும் வரை குற்றவாளிகள்  தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்!’’ என விரிவாக எழுதியுள்ளனர். இதுபோன்ற குற்றங்களுக்கு இங்கிலாந்தின் சட்டம் பற்றி  கிழக்கிந்தியக் கம்பெனிக்கு புரிதல் இல்லை என்பதும், அவர்களுக்கு எடுத்துரைக்க சட்ட வல்லுநர்கள் எவரும் உடனிருக்கவில்லை  என்பதும், இந்நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது.

இதே கடிதத்தில் இன்னொரு கொலை பற்றியும் கம்பெனி தலைமையகத்துக்குத் தெரிவித்துள்ளனர். ‘‘இந்தக் கொலைச் சம்பவம் 1642ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நடந்தது. சாந்தோமில் இருந்து மூன்று போர்த்துக்கீசிய வீரர்கள்  மெட்ராஸ் வந்து ஒரு சாராயக் கடையில் நன்றாகக் குடித்தனர். போதையேறியதும் அங்கிருந்த டேனிஷ்காரனிடம் வாய்ச்சண்டையில்  ஈடுபட்டனர். இதைத் தடுக்க இரண்டு ஆங்கிலேய சிப்பாய்களை அனுப்பினோம். அப்போது, அந்தோணி மிராண்டோ என்பவன் ஓர்  ஆங்கிலேய சிப்பாயைக் குத்திக் கொலை செய்துவிட்டான். பின்னர், மூவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். சில நேரங்களிலேயே  தப்பியவர்களைப் பிடித்துவிட்டோம். இதில், கொலையாளியைத் தவிர மற்றவர்களை விடுவித்துவிட்டோம். சாந்தோமிலிருந்த  போர்த்துக்கீசியர்கள் பிடிபட்ட தங்கள் நாட்டு வீரனை விடுவிக்க வலியுறுத்தினர்.

ஆனால், நாயக் ஆங்கிலேயச் சிப்பாயைக் கொன்ற போர்த்துக்கீசியனைத் தூக்கிலிட வேண்டு மெனச் சொல்லிவிட்டார். நாம், சூரத்திலிருந்த  ஆங்கிலேயர்களிடம் கலந்தாலோசிக்க விரும்பினோம். நாயக்கின் விடாப்பிடியான குணத்தால் அந்தப் போர்த்துக்கீசியன் சுட்டுக்  கொல்லப்பட்டான்...’’ என்றது அக்கடிதம்.  இந்த வழக்கில் இந்தியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை. வழக்கு ஆங்கிலேயர்களுக்கும்,  போர்த்துக்கீசியர்களுக்கும்தான். ஆனால், நாயக் தலையிட்டு நீதியை நிலைநாட்டிவிட்டுப் போனார். இதெல்லாம் சில காலமே சென்றது. 1644 முதல் கண்ணப்பா என்பவரைத் தலைமை அதிகாரியாகக் கொண்டு சத்திரம் நீதிமன்றம் வழக்குகளை விசாரித்தது. ஆனால்,  இவர்களால் ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட சிக்கலான வழக்குகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.

இந்நேரம் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியடைய, கோல்கொண்டா வசம் மெட்ராஸ் அதிகாரம் மாறியது. இந்த புதிய முஸ்லிம் ஆட்சியாளர்கள்  ஆங்கிலேயர்களின் உரிமையை உறுதி செய்தனர். இந்நிலையில் மெட்ராஸின் கம்பெனித் தலைவராக ஆரோன் பேக்கர் என்பவர்  நியமிக்கப்பட்டார். இப்போது புதிய பிரச்னை உருவெடுத்தது. இதுபற்றி ‘Madras Tercentenary Commemoration Volume’ நூலில் சென்னை  பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி விரிவாகக் குறிப்பிடுகிறார். ‘‘மாகாணத்தில் வலங்கை, இடங்கை என மக்கள்  இருசாதிப் பிரிவுகளாகப் பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதை நகர அதிகாரிகளாலோ, கோட்டையிலிருந்த கவுன்சிலாலோ கட்டுப்படுத்த  முடியவில்லை. மட்டுமல்ல. கோல்கொண்டா ஆட்சியாளர்களாலும் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. 1655ம் வருடம் வலகரப்  பிரிவினர் லண்டனுக்கு, ‘இந்த நகரத்தை அரசாங்கம் இல்லாத நகரம் என அழைக்கலாம்’ என குறிப்பிட்டு அறிக்கைஅனுப்பினர். கம்பெனியின் தலைமை வணிகராக இருந்த வெங்கடாவும், நகரின் தலைமை அதிகாரி யாகச் செயல்பட்ட வெங்கடாவின் சகோதரர்  கண்ணப்பாவும் பல சிக்கல்களை நகரில் ேதாற்று வித்தனர்.

எனவே, 1653ம் வருடம் மார்ச் மாதம் கண்ணப்பா நீதிபரிபாலனம் செய்யும் அதிகாரி பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கோட்டையின் கவுன்சில்  உறுப்பினர்கள் இருவர் சத்திரத்தில் வாரம் ஒருவராக அமர்ந்து வழக்குகளுக்கு நீதி வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. இவர்களுக்கு  உதவும் பொறுப்பு மட்டும் கண்ணப்பாவுக்கு வழங்கப்பட்டது. இதன்பிறகும் நீதிபரிபாலனம் சீராக நடைபெறவில்லை. காரணம், ஆங்கிலேய  வணிகர்கள் தங்களின் சேவகர்கள், நண்பர்கள் போன்றவர்களுக்கு அதிகப்படியான சலுகைகள் காட்டி நீதி நிர்வாகத்தில் இடையூறு  செய்தனர். இந்நிலையில் 1665ல் மெட்ராஸில் மற்றொரு கொலைச் சம்பவம் நடந்தது. இப்போது கம்பெனியின் முகவருக்கும், நிர்வாகக்  குழுவுக்கும் தங்களுக்கான அதிகாரம் பற்றி தெரியாமல் லண்டனுக்கு ஒரு கடிதம் எழுதி வழிகாட்டு நெறிமுறைகள் வேண்டுமெனக்  கேட்டனர்.

இதன் காரணமாக கம்பெனி 1661ல் வழங்கிய சாசனத்தின்படி, மெட்ராஸ் நகருக்கு ஒரு கவர்னர் நியமிப்பது என முடிவெடுத்தது.  இங்கிருந்தே மெட்ராஸின் நவீன நீதி நிர்வாகம் தொடங்கியது...’’ என்கிறார்.  இரண்டாம் சார்லஸ் மன்னரே 1661ல் அந்தச் சாசனத்தை  அளித்தார். அதன்படி, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிழக்கிந்தியத் தீவுகளின் முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. அவர்களே கவர்னரை  நியமித்துக் கொள்ளவும், இங்கிலாந்து சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விசாரித்து நீதி வழங்கலாம் என்றும்  சொல்லப்பட்டது. இப்படியாகவே மெட்ராஸில் கம்பெனியின் முகவர் என்றழைக்கப்பட்டவர் கவர்னராக மாறினார்.  

1675ல் மெட்ராஸின் கவர்னராக நியமிக்கப்பட்ட ஸ்டேரேன்ஷாம் மாஸ்டர் சத்திர நீதிமன்றத்தை ஒரு நீதிமன்றமாக அங்கீகரித்து நீதிபதிகளின் எண்ணிக்கையை இரண்டிலிருந்து மூன்றாக உயர்த்தினார். ஆனால், இந்த நீதிமன்றம் வழக்குகளை சரியாகக் கையாளவில்லை என  விரைவிலேயே உணர்ந்தவர் நீதித்துறை சார்ந்த ஒரு நீதிமன்றம் தேவையெனக் கருதினார். இப்படியாக மெட்ராஸில் முதல் நீதிமன்றம்  தோன்றியது. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் கோட்டையில் அமர்ந்து சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை  இங்கிலாந்து சட்டப்படி விசாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. 1678ம் வருடம் ஏப்ரல் மாதம் இந்த நீதிமன்றத்தில் முதல் வழக்கு  விசாரணைக்கு வந்தது! அதன் பிறகு முழுவீச்சில் நீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. உயர்நீதிமன்றம் உருவான வரலாறு அடுத்தவாரம்!                                               l

- பேராச்சி கண்ணன்/ராஜா