திருநங்கைகள் நலவாழ்வு



நியூஸ் வியூஸ்

சில நாட்களுக்கு முன்பாக மக்களவையில் பாடப்புத்தகங்களில் மனிதக் கடத்தல் தடுப்பு குறித்த தகவல்களை கொண்டு சேர்ப்பது பற்றி  பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி பேசினார்.அப்போது, திருநங்கைகளைப் பற்றிய பேச்சு  வரும்போது அவர்களை ‘மற்றவர்கள்’ (others) என்று குறிப்பிட்டார். இது மக்களவையின் குறிப்பில் அப்படியே பதிவாகியிருக்கிறது.உலகம் முழுக்க மூன்றாம் பாலினத்தவரை மாற்றுப் பாலினம் (transgender) என்று அங்கீ கரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் மத்திய  அமைச்சரே, அவர்களை ‘மற்றவர்கள்’ என்று குறிப்பிட்டது நாடெங்கும் வாழும் திருநங்கைகளை மிகவும் கடுமையாக வேதனைப்படுத்தியது. மக்களவையில் இந்த வார்த்தைப் பிரயோகத்தை மற்ற எம்.பி.க்களும் ஆட்சேபிக்காதது குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.இதைத் தொடர்ந்து மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டணி அமைப்பின் உறுப்பினராக இருக்கும் திருநங்கையான மீரா சங்கமித்ரா, மேனகா  காந்தியும், மற்ற மக்களவை உறுப்பினர்களும் திருநங்கைகளிடம் மன்னிப்பு கோரவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினார்.எதிர்ப்பு வலுத்த நிலையில், வேறு வழியின்றி மேனகா காந்தி, மக்களவையிலேயே மன்னிப்பு கோரினார்.

“அவர்களை ஏளனப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ‘மற்றவர்கள்’ என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன்.திருநங்கைகளுக்கு  அதிகாரபூர்வமாக பெயர் இருப்பது எனக்குத் தெரியாது. இனி எதிர்காலத்தில் அனைத்துத் தொடர்புகளுக்கும் TG (transgender) என  பயன்படுத்து வோம்...” என்று பதிலளித்தார்.தமிழ்நாட்டில் அமர்ந்து கொண்டு இந்தச் செய்தியை வாசித்தால் நமக்கு ஆச்சரியமாகத்தான்  இருக்கிறது.ஏனெனில் தமிழகம், முற்போக்கு பூமி. திராவிட இயக்கத்தின் புரட்சிகர சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும் இங்கே ஆண் -  பெண் சமத்துவம் மட்டுமின்றி, மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைக் குரலையும் செவிமடுக்கக்கூடிய ஆட்சியாளர்கள் இருந்தார்கள்;  இருக்கிறார்கள்; இருப்பார்கள்.

எனவேதான், இழிவான சொற்களில் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்த மூன்றாம் பாலினத்தவரை ‘அரவாணிகள்’ என்கிற அருமையான  கலைச்சொல் கொண்டு அழைத்தார்கள். மூன்றாம் பாலினத்தவர், அவர்களாகவே தங்களுக்கு ‘திருநங்கை’ என்கிற புதிய பதத்தை  உருவாக்கிக்கொண்டபோது, அதையும் அங்கீகரித்தார்கள்.பத்து ஆண்டுகளுக்கு முன்பே இங்கே ‘தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம்’,  திமுக அரசால் தொடங்கப்பட்டு அவர்களுக்குரிய நலத்திட்டங்கள் இந்த வாரியத்தின் மூலமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.திருநங்கைகளுக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொகுப்பு வீடு, வீட்டு மனைப்பட்டா, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தையல்  இயந்திரங்கள் வழங்குவது, 40 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம், திருநங்கைகள் சுயஉதவிக்குழு... என்று  திருநங்கைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பல்வேறு முயற்சிகளிலும் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பு நடந்தது. அதற்குரிய படிவத்தில் திருநங்கையருக்கு  ‘9’ என்கிற குறியீட்டு எண் வழங்கப்பட்டபோது, அதை திருநங்கையர் கடுமையாக ஆட்சேபித்தனர்.அப்போது தமிழகத்தில்  இருப்பதைப்போன்றே படிவங்களில் தங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தமிழகத்தில்தான் ஆண்களை M (Male)  என்றும், பெண்களை F (Female) என்றும் குறிப்பிடுவதைப் போல T (Transgender) என்று மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்கும்  வகையிலான நடைமுறை முதன்முதலாகச் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த சாதனையை முதலில் செய்த நிறுவனம் தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழகம்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

திருநங்கைகள் உயர்படிப்புகள் படிக்க ஊக்குவிப்பு, நாட்டிலேயே முதன்முறையாக சப் இன்ஸ்பெக்டராக திருநங்கை தேர்வு என்றெல்லாம்  தமிழகத்தின் புரட்சிகரமான செயல்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.மாநிலங்களவையில் ‘திருநங்கைகள் உரிமைகள்  மசோதா 2014’ஐ தாக்கல் செய்து, நிறைவேறக் காரணமாக இருந்தவரும் தமிழகத்தைச் சார்ந்த திமுக எம்பி திருச்சி சிவாதான்.தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டே கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் திருநங்கைகளுக்கு உரிய நலவாழ்வுத்  திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.எனவேதான், மக்களவையில் மத்திய அமைச்சர் சொல்லியிருக்கும் பதிலை  வாசிக்கும்போது, ‘அடப்பாவிகளா, transgender என்கிற வார்த்தையே உங்களுக்கெல்லாம் புதுசா?’ என்று நமக்கு கேட்கத் தோன்றுகிறது! l

-யுவகிருஷ்ணா