ரஜினிக்கு எக்ஸ்ரே எடுத்த இயக்குநர்!
‘‘வீடுதான் சீரியல்.
வீட்டுக்கு வீடு வாசப்படி. சந்தோஷங்களும் சங்கடங்களும் கண்டிப்பா எல்லா வீட்டுலயும் உண்டு. நம்ம வீட்ல நடக்கறதுதான் பக்கத்து வீடுகள்லயும் நடக்கும். வேற வேற வடிவங்கள்ல நடந்தாலும் விஷயம் ஒண்ணுதான்.இதைத்தான் எல்லா மெகா தொடர்களும் பிரதிபலிக்குது. சினிமா மாதிரி இதுல கற்பனையை புகுத்தினா அது எடுபடாமப் போயிடும்...’’அனுபவ வார்த்தைகளை உதிர்க்கிறார் ‘ரோஜா’ மெகா தொடரின் இயக்குநர் வி.சதாசிவம். ‘சுமங்கலி’, ‘வம்சம்’ உட்பட ஒரு டஜன் தொடர்களுக்கு மேல் இயக்கியவர் இவர். ‘‘இப்ப வரை என்னை வாழ வைக்கறது நண்பர்களும் சின்னத்திரையும்தான். இந்த ரெண்டும் இல்லைனா ஊர்ப்பக்கம் ஏதாவது ஒரு ஆஸ்பிட்டல்ல எக்ஸ்ரே எடுத்துட்டு இருப்பேன்!
 கல்யாணமானதும் புது மனைவியைக் கூட்டிட்டு போதுமான பணத்தோடு கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்தேன். ஒரு கட்டத்துல பணமெல்லாம் கரைஞ்சுடுச்சு. வருமானத்துக்கு வழியில்லாம திகைச்சு நின்னப்ப கைகொடுத்தது சின்னத்திரைதான்...’’ நன்றி உணர்வில் தழுதழுக்கும் சதாசிவம், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவர். ‘‘நாங்க விவசாயக் குடும்பம். அந்தியூர் பக்கத்துல ஆதிரெட்டி யூர் கிராமத்துலதான் பிறந்து வளர்ந்தேன். அப்பா, வெங்கடாசலம். அம்மா, சரஸ்வதி. எனக்கு 10 வயசானப்ப அவங்க இரண்டு பேருமே தவறிட்டாங்க. என்னையும் என் தங்கச்சியையும் அள்ளி அரவணைச்சது எங்க பெரியப்பா குருசாமிதான். என்னை பி.காம் படிக்க வைச்சாங்க. சினிமா ஆசைல படிப்பை பாதிலயே விட்டுட்டேன்.‘ஏதாவது ஒரு தொழிலை கத்துக்க கண்ணு’னு என்னை எக்ஸ்ரே, லேப் டெக்னீஷியன் ஆக்கினாங்க. ஆனா, கவனமெல்லாம் சென்னைக்கு போய் சினிமால சாதிக்கணும் என்பதுதான். எங்க ரிலேட்டிவ் ராமசாமி அண்ணாருகிட்ட என் ஆசையை சொன்னேன். அவர் மின்சாரத்துறைல இருந்தார். ஏற இறங்க என்னைப் பார்த்தவர், கல்யாணம் செஞ்சு வைச்சா பையன் உருப்படுவான்னு வீட்ல சொல்லி திருமணம் செஞ்சு வைச்சாரு.
அப்ப எனக்கு வயசு 21. என் மனைவி வசந்திக்கு 18 வயசுதான்...’’ லேசாக வெட்கப்படும் சதாசிவம் மணமான இரண்டாவது வாரமே சென்னைக்கு வந்திருக்கிறார்.‘‘என் நல்ல நேரம்னுதான் சொல்லணும். ராமசாமி அண்ணாரு வேலை மாற்றலாகி சென்னைக்கு வந்திருந்தார். நாங்க தங்க பக்கபலமா அவர்தான் இருந்தார். சாலிகிராமத்துல வீடு எடுத்து தங்கினேன். தினமும் கோடம்பாக்கம் ஏரியாவுக்கு நடந்தே போய் வாய்ப்பு தேடுவேன். மாசங்கள்தான் ஓடுச்சே தவிர எந்த முன்னேற்றமும் இல்ல.ஒருநாள் எங்க ஊர்க்காரரான நல்லசாமியைப் பார்த்தேன். அவர் விஜயா ஆஸ்பிட்டல்ல வேலை பார்த்துட்டு இருந்தார். அவருக்கு நான் லேப் டெக்னீஷியன்னு தெரியும். ‘பொழப்ப பாரு... சினிமா சாதாரண விஷயமில்ல’னு சொல்லி விஜயா ஹெல்த் சென்டர்ல வேலை வாங்கிக் கொடுத்தார்.
 அங்க முதநாளே ரஜினி சாருக்கு எக்ஸ்ரே எடுத்தேன்! அது சாதாரண ஹெல்த் செக்கப்தான். அங்க நிறைய சினிமாக்காரங்க வருவாங்க. அவங்களைப் பார்க்கப் பார்க்க என் சினிமா கனவு சிறகடிச்சுப் பறக்க ஆரம்பிச்சது. வேலையை உதறிட்டு ராமசாமி அண்ணாருவை போய் பார்த்தேன்.‘உனக்கு கல்யாணமாகிடுச்சு. நீ சினிமா வாய்ப்பு தேடி அலையறேனு ஊர்ல சொந்த பந்தங்களுக்கு தெரிஞ்சா உன்ன மதிக்கமாட்டாங்க. கைல இருக்கிற பணத்தைப் போட்டு ஃபைனான்ஸ் தொழிலை ஆரம்பி. பத்தலைனா நானும் கொஞ்சம் பணம் தர்றேன்’னு சொன்னார். நாலு ஆளுங்களைப் போட்டு லாட்டரி ஏஜென்ஸி, ஃபைனான்ஸ்னு நடத்தினேன். கூடவே உதவி இயக்குநரா எடுபிடி வேலைங்க கிடைச்சா கூட பரவால்லனு வாய்ப்பு தேடி அலைஞ்சேன்.
அப்ப நடிகர் பிரபு சாரோட உதவியாளர் பாபு சார் நட்பு கிடைச்சது. அவர் மூலமா கே.சுபாஷ் சார்கிட்ட ‘வாக்குமூலம்’ படத்துல ஒர்க் பண்ணினேன். அப்புறம் சுசீந்திரன் சார் சித்தப்பா இயக்குநர் ராஜசேகர்கிட்ட ஒர்க் பண்ணினேன். இப்படி சினிமா சினிமானு கவனம் போனதால ஃபைனான்ஸ் பிசினஸை கோட்டை விட்டுட்டேன். அதுல பதினைஞ்சு லட்ச ரூபாய் போச்சு. பெரிய அளவுல நஷ்டப்பட்டேன். 1989ல கொண்டு வந்த பணத்தை 1991க்குள்ள இழந்துட்டேன். நான் ஏமாந்துட்டேன்னு சொல்றதை விட என் இரக்க குணத்தால அவ்வளவு பணத்தையும் இழந்தேன்னுதான் சொல்லணும்...’’ கண்களில் திரண்ட நீர்த்திரளை விரலால் துடைத்தவர், சிறு மவுனத்துக்குப் பின் தன் சின்னத்திரை அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தார்.
‘‘அனிருத்தின் அம்மா லட்சுமி இயக்கின ‘என்ன சத்தம் இந்த நேரம்’ தொடர்ல இணை இயக்குநரா என் சின்னத்திரை வாழ்க்கையை ஆரம்பிச்சேன். அந்தத் தொடர்ல ஒரு கேரக்டர்ல என்னை நடிக்க வைச்சாங்க! அப்புறம் கவிதாபாரதி சார் இயக்கின ‘சலனம்’ல ஒர்க் பண்ணினேன். இந்த அனுபவங்களோடு சுந்தர் கே.விஜயன் சார்கிட்ட சேர்ந்தேன். நாலு வருஷங்கள் அவர் கூடவே இருந்தேன். பிறகு திருச்செல்வம் சார், விக்ரமாதித்தன் சாரோட சீரியல்கள்ல வேலை பார்த்தேன். ‘மேகலா’ ஷூட் போயிட்டிருந்தப்ப ‘நீங்க இயக்குநராகணும் சதா’னு விக்கிரமாதித்தன் சார் என்னை ஊக்குவிச்சுக்கிட்டே இருந்தார்.அந்த நேரத்துல பாலாஜி டெலி ஃபிலிம்ல பொறுப்புல இருந்த கமீலா நாசர் மேம் அறிமுகம் கிடைச்சது. அவங்களோட ‘கஸ்தூரி’ சீரியல் 900 எபிசோடுகளைத் தாண்டி போயிட்டிருந்தது. ‘இந்த சீரியலை நீங்க இயக்குங்க’னு சொன்னாங்க.
அப்ப, ஏவி.எம் தொடர்களுக்கு எழுதிட்டிருந்த எங்க கிராமத்துக்காரரும், நண்பரும், ஸ்கிரிப்ட் ரைட்டருமான சேக்கிழார்கிட்ட விஷயத்தை சொன்னேன். ‘சந்தோஷமா செய்’னு சொன்னார். அவர் கூட கைகோர்த்து ‘கஸ்தூரி’யை நல்ல ரேட்டிங்குக்கு கொண்டு வந்தேன். அப்புறம் விக்ரமாதித்தன் ‘உதிரிப்பூக்கள்’ல ஒரு கேரக்டர் கொடுத்தார். அதுல நடிக்கிறப்ப ஏவி.எம் நிறுவனத்துல இருந்து அழைப்பு வந்தது. சேக்கிழார் ஸ்கிரிப்ட் எழுத ‘மனதில் உறுதி வேண்டும்’ தொடரை இயக்கினேன்...’’ என்ற சதாசிவம் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் என்கிறார்.‘‘சீரியல் கிடைக்காம சிலகாலம் இருந்தேன். அப்ப விக்ரமாதித்தன் இயக்கின ‘தேனிலவு’ல ஒர்க் பண்ணினேன். இந்த நேரத்துல சுரேஷ்கிருஷ்ணா சார் தயாரிப்புல ‘உணர்வுகள்’ இயக்கும் வாய்ப்பு வந்தது. விக்ரமாதித்தன் என்னை ஆசீர்வதிச்சு அனுப்பி வச்சார். இதுக்குப் பிறகு ஏறுமுகம்தான். தொடர்ந்து சுரேஷ்கிருஷ்ணா சார் தயாரிச்ச ‘அரங்கேற்றம்’, ‘லட்சுமி வந்தாச்சு’ தொடர்களை இயக்கினேன். ரம்யா கிருஷ்ணன் மேமின் ‘வம்சம்’, சத்யஜோதியின் ‘சுமங்கலி’ தொடர்களை இயக்கி நல்ல பெயர் வாங்கினேன். இப்ப ‘ரோஜா’ சக்சஸ்ஃபுல்லா போயிட்டிருக்கு. சந்தோஷமா இருக்கேன்...’’நிறைவுடன் சொல்லும் சதாசிவம், தன் மனைவி வசந்தி மற்றும் மகள்கள் ரோகிணி, பிரியங்காவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
- மை.பாரதிராஜா படங்கள் : ஆ.வின்சென்ட் பால்
|